Header Ads



இலங்கை முஸ்லிம்களின், நிலைகண்டு அதிர்ச்சியடைந்தேன் - ஜெனீவாவில் றீட்டா ஐசக்


(ஏ.ஏ.எம். அன்ஸிர்)

இலங்கை முஸ்லிம்களின் நிலைகண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின், சிறுபான்மை விவகாரங்களுக்கான பிரதிநிதி றீட்டா ஐசக் தெரிவித்தார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் 14 ஆம் திகதி,  செவ்வாய்கிழமை நடைபெற்ற சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பின் (JMC -I) கலந்துரையாடலின் போதே  அவர் இதனைத் தெரிவித்தார்.

கலந்துரையாடலின் போது சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பின் தலைவர்   அனீஸ் ரவூப் தெரிவித்ததாவது,

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி, நீதி வழங்குதலில் நிலவும் தாமதம், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றத்தில் உள்ள தாமதம், புறக்கணிப்பு, யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பு, அவலங்களை சுமந்துநிற்கும் அந்த சமூகத்தினருக்கு அகதிகளுக்கான அந்தஸ்த்து இதுவரை கிடைக்காமை, யாழ்ப்ப்பாண முஸ்லிம்  விவகாரத்தில் வடமாகாண சபையின் இழுத்தடிப்பு, பௌத்த சிங்கள இனவாதிகளின் வெறுப்புப் பேச்சு, அதற்கெதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படாமை, அளுத்கம விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை றீட்டா ஐசக்கின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன் என்றுகூறி அவற்றை விபரமாக எடுத்துரைத்தார்.

அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் வடக்கு முஸ்லிம்கள் விவகாரத்தில் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பினரை அங்கீகரிக்க வேண்டுமெனவும், அவர்களுடன் உத்தியோகபூர்வ தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள தாம் விரும்புவதாகவும் தமது  விருப்பத்தை வெளிப்படுத்தியதுடன் இலங்கையில் இயங்கும் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் சட்டத்தரணிகள் அமைப்பு, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஆகியவற்றுடன் தாம் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுவதாகவும் விளக்கினார்.

இதன்போது ஊடகவியலாளர் அன்ஸிர் தெரிவித்ததாவது,

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறுபான்மை விவகார பிரதிநிதி என்றவகையில், இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியது றீட்டா ஐசக்கின் கடமையாகும். உங்களுடைய பிந்திய அறிக்கை முஸ்லிம்களினால் சிலாகித்துப் பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் அல் ஹுசைன் கவனம் ஈர்க்கப்பட வேண்டுமென இலங்கை முஸ்லிம் சமூகம் விரும்புகிறது எனவும் சுட்டிக்காட்டினார்.

இவற்றை கவனமாக செவிமடுத்து, குறிப்பெடுத்துக்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  அகதிகள் விவகார பிரதிநிதி றீட்டா ஐசக், இலங்கை முஸ்லிம்கள் குறித்து தனது பிந்திய அறிக்கையை  ஞாபகமூட்டியதுடன், இலங்கைக்கான தனது பயணத்தின் போது இலங்கை முஸ்லிம்களின் நிலைகண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டார்.

அத்துடன் தாம் எதிர்வரும் காலங்களில் இலங்கை முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும், தமது பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும், அதனை மேற்பார்வை செய்யவுள்ளதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை தாம் அவதானிப்பதாகவும், அளுத்கம விவகாரத்தில் நீதி மறுக்கப்பட்டமையை தாம் உணர்வதாகவும் றீட்டா ஐசக் ஒப்புக்கொண்டார்.

அத்துடன் இலங்கை முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களையே தாம் சுட்டிக்காட்டுவதாகவும், தாம் இஸ்லாமிய ஷரீஆ சட்டத்திற்கு எதிரானவர் அல்ல எனவும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சமூகத்திற்கும் பிரத்தியேகமான சட்டங்க்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

சுமார் 40 நிமிடங்கள் நீடித்த றீட்டா ஐசக் மற்றும் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்திற்கிடையிலான பேச்சின் இறுதியில், பேசப்பட்ட விவகாரங்கள் ஆவண வடிவிலும்,  யாழ்ப்பாண முஸ்லிம்களின்  மீள்குடியேற்றம் அடங்கிய விடயங்கள் அறிக்கை வடிவிலும் அவரிடம் கையளிக்கப்பட்டன.

No comments

Powered by Blogger.