Header Ads



சிரியாவின் வான் பாதுகாப்பை அழிக்க, இஸ்ரேல் எச்சரிக்கை

தமது போர் விமானங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் சிரியாவின் வான் பாதுகாப்பு முறையை அழிக்கப்போவதாக இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“எமது விமானங்களுக்கு எதிராக அடுத்த முறை சிரியா தனது வான் பாதுகாப்பு முறையை பயன்படுத்தினால் நாம் அதனை எந்த தயக்கமும் இன்றி அழித்துவிடுவோம்” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டர் லிபர்மான் இஸ்ரேலிய வானொலிக்கு குறிப்பிட்டார்.

பல்மைரா மேற்கு புறநகரில் சிரிய அரபு இராணுவத்தின் மீது இஸ்ரேலிய விமானப் படை தாக்குதல் நடத்தி 36 மணி நேரத்திற்கு பின்னரே லிபர்மானின் இந்த எச்சரிக்கை வந்தது.

எனினும் ஹிஸ்புல்லாஹ்வை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட தளம் சிரிய அரபு இராணுவம் நிலை கொண்டிருக்கும் பிரதேசம் என்பதோடு அங்கு லெபனான் ஹிஸ்புல்லாவின் பிரசன்னம் இருக்கவில்லை என கூறப்படுகிறது.

இஸ்ரேலின் இந்த அத்துமீறலுக்கு பதிலளிக்கும் வகையில் நான்கு விமானங்கள் மீதும் சிரிய வான் பாதுகாப்பு முறை எஸ் 200 விமான எதிர்ப்பு ஏவுகணையை எறிந்தது. இந்த விமானங்கள் சட்டவிரோதமாக சிரிய வான் பரப்புக்குள் நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

சிரிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், விமான எதிர்ப்பு ஏவுகணை அல் புரைஜுக்கு அருகில் இஸ்ரேலிய போர் விமானம் ஒன்றை தாக்கியதில் அது தனது நிலைக்கு திரும்பும் முன் வீழ்ந்துவிட்டதாக கூறப்பட்டது.

சிரியாவின் ஆறு ஆண்டு சிவில் யுத்தத்தில் இஸ்ரேல் அடிக்கடி சிரியாவில் வான் தாக்குதல்களை நடத்துகின்றபோதும், இஸ்ரேலிய போர் விமானங்கள் மீது சிரிய அரசு தாக்குதல் நடத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதேவேளை இஸ்ரேல் சிரியாவில் வான் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு வெளியிட்டு ரஷ்ய வெளியுறவு அமைச்சு சிரிய தூதுவரிடம் விளக்கம் கோரியுள்ளது.

இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் கரி கொரன் கடந்த வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.