Header Ads



துருக்கி - நெதர்லாந்து நாடுகளிடையே ராஜதந்திர பதற்றம்

சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கான பிரசாரத்தில் தனது அமைச்சர்கள் உரையாற்றுவதை தடுத்த நெதர்லாந்து மீது கடுமையான பதில் நடவடிக்கை எடுக்கும் அறிவிப்புகளை துருக்கி வெளியிட்டுள்ளது.


நெதர்லாந்து தூதுவர் அங்காரா திரும்புவது தடுக்கப்படும் என்றும் அந்த நாட்டுடனான உயர்மட்ட அரசியல் பேச்சுவார்த்தைகள் இடை நிறுத்தப்படும் என்றும் துருக்கி துணைப் பிரதமர் நூமான் குர்துல்முஸ் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி பேரணிகளை நடத்தும் முயற்சியை ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகள் தடுத்தன. இதில் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி மீது துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் ‘நாஜி’ குற்றச்சாட்டு சுமத்தினார்.

இந்நிலையில் நேட்டோ அங்கத்துவ நாடுகளான துருக்கியும் நெதர்லாந்தும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஓர் இராஜதந்திர மோதலில் ஈடுபட்டிருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் ஜெர்மன் அதிபர் ஏஞ்ஜலா மேர்கல் நெதர்லாந்துக்கு முழு ஆதரவை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் துருக்கியில் இருக்கும் நெதர்லாந்து பிரஜைகளுக்கு நெதர்லாந்து வெளியுறவு அமைச்சு கடந்த திங்கட்கிழமை பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது. புதிய ‘இராஜதந்திர பதற்றம்’ குறித்து அவதானத்துடன் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் இன்று புதன்கிழமை பொதுத் தேர்தல் இடம்பெறவிருப்பதோடு அதில் குடியேற்ற மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

துருக்கியின் புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர் துருக்கி மக்களின் ஆதரவை வெல்லவே அங்கு துருக்கி அரசு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 16 ஆம் திகதி இடம்பெறும் இந்த சர்வஜன வாக்கெடுப்பில் ஜனாதிபதி அதிகாரம் பலப்படுத்தப்படவுள்ளது. 

No comments

Powered by Blogger.