Header Ads



வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையிலான போராட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம் - ராஜித


நல்லாட்சி அரசாங்கத்தில் தூய்மையற்ற மனிதர்கள் மேற்கொள்ளும் தவறுகளுக்கு எதிராக போராடப் போவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பயாகல,பேருவளை, அளுத்கம, பிரதேசங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் தேசப்பற்றுள்ள பாதுகாப்புச் செயலாளர் உக்ரைனில் மிக் விமானங்களை கொள்வனவு செய்த போது மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிரச்சினை இருக்கின்றது. இந்த செயலாளரை ஆட்சிக்கு கொண்டு வர சிலர் முயற்சித்து வருகின்றனர்.

மிக் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல், வாங்கல் சம்பந்தான பிரதிகளை உக்ரைன் அரசாங்கம், இலங்கையிடம் வழங்கியுள்ளது.

இது குறித்து வெளிவிவகார அமைச்சர் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

உக்ரைன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் கையெழுத்து போலியாக இடப்பட்டு இந்த கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும். நல்லாட்சியை அழித்து விட்டு எமன் ஆட்சியை மீண்டும் கொண்டு வர ராஜபக்சவினர் தயாராகி வருகின்றனர்.

இதனால், வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான போராட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்வோர் கடந்த காலத்தில் செய்த குற்றங்களை நாம் எமது இரண்டு கண்களில் கண்டோம். இதன் காரணமாகவே நல்லாட்சியை நாங்கள் உருவாக்கினோம்.

எமது நாட்டில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை சிலர் தவறாக அனுபவித்து வருகின்றனர். தேவையில்லாத துறை சம்பந்தமாகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.

இதனால், நாட்டில் தற்போது வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம். நல்லாட்சி அரசாங்கம் தொடர வேண்டும்.

வெள்ளை ஆடையை அணிந்ததால் மாத்திரம் ஒருவர் தூய்மையானவராக மாறமாட்டார். தூய்மையற்ற மனிதர்களால் நடக்கும் தவறுகளுக்கு எதிராக போராடுவோம். காட்டுச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது.

கடந்த அரசாங்கத்தில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.