Header Ads



"முஸ்லிம்களின் அரசியல் நிலைமை பற்றி, மிகவும் மனவேதனை.."

-டாக்டர். எஸ். நஜிமுதீன்  MPA-

மிக நீண்ட நாட்களாக இலங்கைத் திருநாட்டின் ஒரு முக்கியமான இனக்குழுமம் ஆகிய முஸ்லிம்களின் அரசியல் நிலைமை பற்றி மிகவும் மனவேதனையுடன் அவதானித்த எனது பார்வையினையும், அது என் மீது ஏற்படுத்திய தாக்கங்களையும் ஒரு பொது வெளியில் பகிர்ந்து கொள்ள அவாவுறுகின்றேன். பலவிதமான அரசியல், சமூக விமர்சகர்களால் விலாவாரியாக விமர்சிக்கப் படுகின்ற இந்த விடயத்தில் காய்தல்,உவத்தல் இன்றி நடுநிலையான ஒரு பார்வையினை எந்த விமர்சகரும் வைத்ததாக நான் காணவில்லை. தடி எடுத்தவன் எல்லோரும் தண்டயலாக மாறிப் போன அவலத்தை நான் பார்க்கிறேன். எல்லோர் மேலும் குற்றம் காண்கின்ற ஒரு மெத்தனமான போக்கு எல்லோரிடமும் காணப்படுகிறது.இதன் காரணமாக பாதிப்பு ஏற்படப் போவது முழு இனக்குழுமத்துக்குமே அன்றி இந்த அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல.

முதலில் நாங்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதாவது இந்த இனக்குழுமத்துக்கு ஒரு கட்சி தேவையா, இல்லையா என்று. அப்படித் தேவை என்றால் அது இந்தப் பல நூறு கட்சிகளுள் எது என்பது முடிவாக வேண்டும். அது ஒரே கட்சியாக இருக்க வேண்டுமா ,  பல கட்சிகளா என்பதும் சமூகத்தால் தீர்மானிக்கப் படவேண்டும். அப்படி ஒரு கட்சிதான் என்றால் அது எந்தக் கட்சி என்பது முடிவெடுக்கப்படவேண்டும். அப்படி முடிவெடுத்தபின் அந்தக் கட்சியினையும் அதன் தலைமைத்துவத்தையும் பலப்படுத்த வேண்டும். அந்தப் பலம்தான் அந்த சமூகத்தின் பலமாக இருக்க முடியும்.

அதனை விடுத்து இந்த சமூகத்துக்கான கட்சி உருவான நாளில் இருந்து நான் பார்த்து வருகின்ற அநியாயங்களையும், அக்கிரமங்களையும் எண்ணி மாளாத நாள் கிடையாது. எவரும் தரமான ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் கூட இருக்கலாம். மார்க்கம் என்ற ஒன்று இருப்பதனையே மறந்து பொய்யையும் புரட்டையும் பேசி, அநியாயங்களை அரங்கேற்றி வாழ்கின்ற அயோக்கியத் தனத்தைக் கண்டு வாய் மூடி இருக்கக் கூடுதில்லை.

அவர்களே கூடுவார்கள், அவர்களே முடிவெடுப்பார்கள். அவர்களே மீறுவார்கள். அவர்களே லஞ்சம் வாங்குவார்கள், அவர்களே பேரம் பேசுவார்கள். அவர்களே ரகசியமாக ஒப்பந்தம் செய்வார்கள். காரியங்கள் வெளிப்பட்டால், சில விடயங்கள் சொல்ல முடியாமல் போகின்ற வரை நாடகமாடி, மிரட்டி காரியங்களை சாதித்துக் கொள்ள துடிக்கின்ற அவல நிலை கண்டு மனம் ஆவேசப்படுகின்றது.

இவர்களிடம் பலவிதமான பலவீனங்கள் இருப்பதனை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். என்ன பலவீனம் யாரிடம் உள்ளது என்பது ஒன்றும் புரியாத விடயமுமல்ல. இரகசியமான விடயமுமல்ல. இவர்கள் யாரும் தனி மனிதர்கள் கிடையாது. எல்லோரும் அரசியல் வாதிகள். படை பட்டாளங்களுடன் உலா வருபவர்கள். இவர்கள் பணத்தின் மீதா, பதவியின் மீதா, பகட்டின் மீதா, புகழின் மீதா அல்லது எல்லாவற்றுக்கும் மேலாக பெண்ணின் மீதா பலவீனமானவர்கள் என்பது ஒன்றும் தெரிந்து கொள்ள சிரமமான ரொக்கெட் விஞ்ஞானம் அல்ல.

ஏனையவற்றின் மீதான பலவீனங்களை நாம் இலேசாக எடுத்துக் கொண்டு, பெண்கள் மீதான பலவீனத்தை மட்டும் சேறு பூசும் சங்கதியாகக் கொள்கின்றோம். உண்மையில் எல்லாப் பலவீனமும் ஒரே அளவான பாவச்செயல்களே, பெண்ணின் மீதான பலவீனம் ஒன்று தவிர.

பெண்ணின் மீதான பலவீனம் ஆணின் இயல்பு. அது படைப்பின் இரகசியம். இயற்கையின் தேவை.  ஏனைய பலவீனங்கள் மனித இனத்தின் இயல்பு. ஆனால் இயற்கையின் தேவையொன்றல்ல. மனித இனத்தின் ஏனைய பலவீனங்களில் அவன் அத்து மீறுகின்ற பொழுது அவனை விமர்சிக்காத மனிதர்கள், பெண்ணின் மீதான பலவீனத்தை மட்டும் நார் நாராகக் கிழிப்பதனை மடமை என்றே கருத வேண்டியுள்ளது. இந்தப் பலவீனத்தின் மீது மட்டுமே அவன் ஒழுக்கம் என்கின்ற கடிவாளத்தை போடுகின்றான். கோடி கோடியாய் கைநீட்டி வாங்கினோம் என்று சொல்லும் பொழுது அடி செருப்பால என்று வாங்கியவன் ஒவ்வொருவனையும் வாரி விட துப்பில்லை.

ஆண்களின் பலவீனத்தை உணர்ந்த படைத்தவன் அவனது திருமறையின் பெண் எனும் அத்தியாயத்தில் அழகாக சொல்லி உள்ளான். ஒன்று தொடக்கம் நான்கு வரை மனைவியரை ஒரு ஆண் மணமுடிக்க முடியும், அவர்களுக்குள் நீதமாக நடந்து கொள்ள முடியுமானால் என்று. அதனை எமது சமூகம் முழுவதுமாக நிராகரித்து விட்டு, மார்க்கத்தை கைவிட்டதால்,  அவர்களது கலாச்சார, பண்பாட்டு, ஒழுக்க விழுமியங்களுக்கு முக்கிய இடம் கொடுத்து, அதன் காரணமாக இழி நிலைக்கு ஆளாகி மான பங்கப் பட்டு,  இன்று யாருக்கும் பதில் சொல்ல முடியாத கையறு நிலையில் சீரழிந்து கொண்டிருக்கிறது.

எள்ளி நகையாடுகின்ற விடயங்கள் நடந்தனவா இல்லையா என்பது யாருக்கும் தெளிவில்லை, ஒரு சில பேருக்குத் தெரிந்திருக்கலாம். சில பேர் நடந்ததாக சத்தியமே செய்கின்றார்கள். அப்படி நடந்தால்தான் என்ன என்று மார்பு தட்டிச் சொல்லும் அளவுக்கு எம்மிடம் மார்க்கம் இல்லை என்பதுவே உண்மை. அப்படி மார்க்கம் இருக்குமானால்,  ஆமாம் நான் அவளை கல்யாணம் செய்திருக்கின்றேன், என்ன செய்யப் போகின்றீர்கள் என்று கேட்கின்ற மனதைரியம் எமக்கு இருக்கும்.

எல்லாவற்றையும் ஊருக்கும், சமூகத்துக்கும் காவு கொடுத்து விட்டு நாம் கட்டிக் காக்கின்ற எமது உலகம் சார்ந்த விழுமியங்களால் வாழ்விழந்து, மரியாதை கெட்டு, எவன் எவன் வாயால் எதையெதையோ பேசக் கேட்டு மார்தட்டி பதில் சொல்ல இயலாத கையறு நிலையில் இருந்து, எதனை சாதிக்கப் போகின்றோம்.

இரண்டு விடயங்கள் நடந்தாக வேண்டும், ஒன்று இந்தக் கண்ராவிகள் எல்லாம் நிற்பாட்டப் பட வேண்டும். இந்த சமூகம் உருப்பட வேண்டுமானால், இதனுடைய உண்மையான அரசியல் சக்தி எது என்று அடையாளம் காணப்பட்டு, அந்த சக்தி பலப்படுத்தப் படவேண்டும்.

விமர்சிக்கின்றவர்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது அவர்களையெல்லாம் மக்கள் உத்தமர்களாக அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள் என்று. உள்ளே உள்ளவர்களில் யார் யார் கயவர்கள், யார் யார் கள்வர்கள். வெளியே இருப்பவர்களில் யார் யார் எது வரை பாய்ந்தவர்கள் என்றெல்லாம் மக்கள் அறிவார்கள். இவர்கள் பதவியில் இருக்கும் வரை இவர்களுக்குப் போடுகின்ற சால்வைகள் எல்லாம் இவர்களுக்கான சொர்க்கத்து வாசல் வரை விரித்து இருக்கும் செங்கம்பளம் என்று இவர்கள் கருதி விடக்கூடாது.

உண்மையான ஈமான் கொண்டோராய் இருப்பார்களேயானால் தாங்கள் இது வரை செய்த பாவங்களுக்கு படைத்தவனிடமும், பாதிக்கப் பட்டோரிடமும் மன்னிப்புக் கோரி, இன்னும் பாவம் செய்யாமல் தவிர்ந்து கொள்ள முயறசி செய்து, இந்த சமூகம் வாழ வழி விட வேண்டும் என்பதே எல்லோரதும் அவா.

2 comments:

  1. அருமையானதொரு ஆக்கம்

    ReplyDelete
  2. அருமையானதொரு ஆக்கம்

    ReplyDelete

Powered by Blogger.