March 17, 2017

மறக்கப்பட முடியாத, மஹிந்த காலத்து வரலாறு..!

பழைய சம்பவங்களை எமது மக்கள் மிக விரைவாக மறந்து விடுகிறார்கள். இவ்வாறு பழைய சம்பவங்களை மட்டுமல்ல மிக அண்மையில் நடந்த சம்பவங்களைக் கூட மக்கள் மறந்து விடுகிற ஒரு இயல்பான போக்கு இப்போது உருவாகியுள்ளது.

இதற்கு அரசியல்வாதிகளின் ஏமாற்று வித்தையும் ஒரு காரணம் என்றால் அது தவறாகாது. உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது நடைபெறும் சம்பவங்களை அவரது பதவிக் காலத்துடன் ஒப்பிட்டு இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கூட்டுவதில் முன்னிலையில் இருக்கிறார்.

பொதுத்துறை ஊழியர்கள் இப்போது அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் அவர்களை துன்புறுத்துவதாகவும் அவர் கூறுகிறார். இதற்குக் காரணம், சட்டவிரோத, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பலரில் ஒரு சிலர் மட்டுமே விசாரணை செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். செல்வாக்குள்ள ஆயிரக்கணக்கான பொதுத்துறை ஊழியர்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர்தான் அரசாங்க அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இருக்கிறார்கள். பொதுத்துறை ஊழியர்கள் இம்சைப்படுத்தப்படுவதான பொதுவான குற்றச்சாட்டு ஒரு அப்பட்டமான பொய்யே தவிர வேறெதுவும் இல்லை என்பதே உண்மை.

ஒருவேளை, குற்றஞ்சாட்டப்பட்டவர்களைப் பற்றி அவர் குறிப்பிடுகிறாரோ தெரியவில்லை. ஏனென்றால், குற்றவாளிகளைக் காப்பாற்றுவது அவருடைய ஆட்சிக் காலத்தில் வழக்கமாக இருந்ததுதானே!

உதாரணமாக டொக்டர் பி. பீ. ஜயசுந்தரவை பொதுத்துறையிலுள்ள பதவிக்கு நியமிக்க வேண்டாமென உச்ச நீதிமன்றம் தீர்மானித்தும் மஹிந்த ஜயசுந்தரவை நியமித்தார். மஹிந்த தனது பதவிக் காலத்தின் போது பொதுத் துறை ஊழியர்களை நன்கு கவனித்திருந்தால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்காளர்கள் அவரை நிராகரித்திருக்க மாட்டார்களே. உண்மையில் அப்போதும் துன்புறுத்தல்கள் இடம்பெற்றனதான்.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாநரயாக்கா நீதிக்குப் புறம்பாக திடீரென பதவியிலிருந்து அகற்றப்பட்டது ஞாபகமிருக்கலாம். பொதுத் துறை ஊழியர் ஒருவர் மரத்துடன் கட்டி வைக்கப்பட்டார். அவருக்கு தண்டனை அளித்த அரசியல்வாதிக்கு பின்னர் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையும் மறுக்க முடியாது.

பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் குறுக்கீடுகள் செய்யப்பட்டன. சட்டவிரோத செயல்களுக்கு கட்டுப்படாத பொலிசார் அரசியல்வாதிகளால் துன்புறுத்தப்பட்டனர். யுத்த வீரர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்த குற்றச்சாட்டு. பொதுத் துறை ஊழியர்களைப் போல யுத்த வீரர்களிலும் ஒரு சிலர்தான் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலான யுத்த வீரர்கள் ஒழுக்கமாகவே நடந்து கொள்கிறார்கள். அவர்கள் துன்புறுத்தப்படுவதில்லை. கொலை, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், ஆட்கடத்தல்கள் போன்ற சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களுக்காக அவர்களில் சிலர் தடுத்து வைக்கப்பட்டும். விசாரணைகளுக்கு முகம் கொடுத்து வருவதும் உண்மைதான். அவர்கள் குற்றவாளிகள் இல்லையா என்பது விசாரணைகளின் பின்னரேயே தெரிய வரும்.

மனசாட்சிப்படி, ராஜபக்ஷவுக்கு இப்படி பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை. உலகின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி என அவரே கூறிய ஜெனரல் சரத் பொன்சேகாவை பின்னர் அவரேதான் அவமானப்படுத்தினார். இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் துன்புறுத்தப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்கள் என்பதும் மஹிந்தவின் மற்றுமொரு குற்றச்சாட்டு. கொலைக் குற்றத்துக்காக குற்றவளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவையா அல்லது வயதில் அவ்வளவு இளையவர் என்றும் சொல்ல முடியாத ரோஹித அபேகுணவர்தனவையா அவர் குறிப்பிடுகிறார்? இல்லையென்றால் அவர் நாமல் ராஜபக்ஷவை தான் குறிப்பிட வேண்டும்.

நாடு தற்போது சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது எனக் கூறுகின்ற அவருடைய பதவிக் காலத்தின் போதுதான் அரச நிறுவனங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டு சிரேஷ்ட நிர்வாக பதவிகள் இராணுவத்துக்கு வழங்கப்பட்டன. பாடசாலை அதிபர்கள் தன்னார்வ படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டு பல்வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டனர். அரசியலமைப்பின் 18வது பிரிவில் மாற்றம் செய்து தனது சகோதரர்களின் மூலம் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார கட்டமைப்பை குடும்ப கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர மஹிந்த முயற்சித்ததையும் மறக்க முடியுமா?

ஜயதிலக டி சில்வா 

1 கருத்துரைகள்:

ஒருவரில் என்னதான் பெரிய திறமைகள் இருந்தாலும், நீதி இல்லையென்றால் எல்லாமே அவுட்!

Post a Comment