Header Ads



பர்தாவை கழற்றுங்கள், என்றுகூற எவருக்கும் உரிமை கிடையாது - அநுரகுமார


பார்தாவை கழற்றுங்கள், முந்தானியை கழற்றுங்கள், சாரி அணியுங்கள் என்று நாட்டில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இலங்கை மூன்று இனங்களுக்கும் உரித்தான நாடு. சம உரிமையினூடாக மாத்திரமே நாட்டின் முன்னேற்றம் சாத்தியமாகும். நாம் அரசியலில் இருக்கும்வரை சிறுபான்மையினருக்கு எதிரான இனக் கலவரங்களுக்கு இடமளிக்கமாட்டோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த நீதி, நேர்மையான நாடு, நீதியான சமூகம், சுதந்திரமான மனிதன் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

சுதந்திரத்தின் பின்னரான இலங்கையை நான்கு உயர் குலத்தினரே ஆட்சி செய்துள்ளனர். உயர் குலத்தினரிடையே இனவாதமில்லை. அவர்கள் இன முரண்பாடுகளையும் இனவாதத்தையும் தோற்றுவித்து அவர்களின் இருப்பை உறுதிசெய்துகொள்வதாகவும் அவர் தெரிவித்தார். 

விளையாட்டமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் சனியன்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரவித்ததாவது, 

சுதந்திரத்தின் பின்னரான 70 ஆண்டுகளை நான்கு வலவுக் காரர்களே ஆண்டுள்ளனர். போத்தலே வலவ்வ, ஹொரகொல்ல வலவ்வ, கொள்ளுபிடிய வலவ்வ, மெதமுலன வலவ்வ ஆகியனவே அவை. அவர்கள் தமது இருப்புக்காக மக்களை ஒன்றுபட விடமாட்டார்கள். இனவாதத்தை பரப்பி அரசியல் இலாபம் தேடுகின்றனர். 

பொருளாதாரம் ஸ்திரமடையாது நாட்டின் எந்த துறையும் முன்னேற்றமடைவது சாத்தியமில்லை. பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில் சமூக நீதியும், சமத்துவமும் மலராது. கடன் பெறுவதை பெரும் வெற்றியாக கருதும் தலைவர்களையே நாம் இதுவரை கண்டுள்ளோம்.பெற்றுக்கொண்ட கடன்களுக்கு பயன்மிக்க வேலைகள் நடந்ததாகவும் இல்லை. நாட்டின் மொத்த கடன் தொகை எவ்வளவு என்று பிரதமருக்கும் தெரியாது. ஊழல் ஒழிக்க வந்த அரசிலும் ஊழல். இந்த அரசாங்கத்தையும் துரத்தியடிக்க வேண்டும். ஆனால் பழைய முறையில் துரத்தப்படுவதில் பயனில்லை. மீண்டும் மஹிந்தவே ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார். சுதந்திர கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் மேலும் 50 வருடங்கள் ஆட்சி நடத்த வாய்ப்பளித்தாலும் நாடு இதே நிலையில்தான் இருக்கும். மக்களுடன் ஒன்றித்துள்ள கட்சியுடன் 

சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற  மூவினத்தினதும் பெரும்பான்மையான மக்கள் ஒன்றுபடவேண்டும்.  நாம் இனவாதத்தை ஒருபோதும் ஆதரித்ததில்லை. இனியும் இனவாதத்துக்கு இடமளிக்கப்போவதில்லை. மொழி, மத உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். யாரையும் மதத்தின் பெயரால் வற்புறுத்தவும் முடியாது. யாருக்கும் பர்தாவை கழற்றும்படி கூறவும் முடியாது. பல கலாசார அம்சங்களே நாட்டுக்கு அழகு. ஒரு இனவாதத்துக்கு எதிராக இன்னோர் இனவாதத்தால் ஒற்றுமையை எதிர்பார்க்க முடியாது. இனவாதத்தால் இனவாதத்தை தோற்கடிக்கவும் முடியாது.  ஆட்சி என்பது உயர் குலத்தில் இருந்து பொது மக்கள் கைகளுக்கு வரவேண்டும். இனிமேலும் இனவாத தலைதூக்க விடமாட்டோம். 

இந்நிகழ்வில் கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் வை.எம்.இப்றாஹிம், மனோ தத்துவவியலாளர் எம்.இம்றான், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்காவின் தலைவர் என்.எம்.அமீன், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத் உட்பட அரசியல், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.  

பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயகவுக்கு முஸ்லிம்கள் சார்பில் விசேட விருதொன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கொழும்பு வர்த்தகர்கள் சார்பில் யுனைடட் டிரேடர்ஸ் உரிமையாளர் செல்லையாவால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

1 comment:

  1. A clear message to the minorities by Anura Kumara. Let us support the JVP in its forward towards the emancipation of all the people of Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.