March 06, 2017

ஐந்து பெண் பெற்றால்...?

-மெளலவி லியாகத் அலீ மன்பஈ-    

"ஐந்து பெண் பெற்றால்...? அரசனும் ஆண்டியாவான்!" என்பது பழமொழி. இங்கே நாம் இதற்கு முற்றிலும் வித்தியாசமான ஒருவரைப் பார்க்க உள்ளோம்.

சமீபத்தில் ஒரு சொற்பொழிவுக்காக நாம் கும்பகோணம் சென்றிருந்தபோது அங்கே வியக்கத்தக்க முறையில் அமையப்பெற்றிருந்த ஹாஜியார் பள்ளீவாசலுக்குத் தொழச் சென்றபோது அந்தப் பள்ளியின் இமாம் மவ்லானா மஸ்தான் ஆலிம் மிஸ்பாஹி அவர்கள் நம்மை அன்புடன் வரவேற்று உபசரித்தது மட்டுமின்றி, இன்றைய நாஷ்டா நம் வீட்டில் தான் என்றும் கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். வீடு எங்கே இருக்கிறது? என்று வினவியபோது, வாருங்கள் பஸ்ஸுக்கு என்றார்கள்.

குடந்தை அருகே உள்ள திருபுவனம் என்றொரு அழகிய கிராமம். அந்த ஊரையும் அவர்கள் சொந்தமாக வாங்கிக் கட்டியிருந்த வீட்டையும் பார்த்து வியந்து போன நாம், ''ஹஜ்ரத்! தாங்கள் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். அந்த பூமியைவிட்டு இங்கே எப்படி செட்டில் ஆனீர்கள்?" என்று கேட்டபோது தம் வரலாற்றை விளக்கினார்.

நான் நீடூர் மதரஸாவில் தஹ்ஸீல் ஸனது பெற்றது முதல் எனது இமாமத் பணி இந்த தஞ்சை மாவட்டத்திலேயே தொடர்ந்து சுமார் 36 வருடங்கள் உருண்டோடிவிட்டன. அல்லாஹ்வின் நல்லருளால் மிகக்குறைந்த சம்பளத்தில் துவங்கிய எனது இமாமத் பணியின் மூலம் நான் ஹஜ்ஜும் செய்து, ஐந்து பெண் பிள்ளைகளையும் திருமணம் செய்தும் கொடுத்துள்ளேன் என்றால் அதற்குக்காரணம் எனது வழிகாட்டியாக இருந்தவர்கள் எனது ஆன்மீகத்தந்தை S.R.ஷம்சுல்ஹுதா ஹஜரத் அவர்கள்தான்" என்றபோது நாம் ஆச்சரியத்தால் வாய்பிளக்காத குறைதான்.

அவர்கள் மேலும், "நாங்கள் 1968 ஆம் வருடம் நீடூர் மிஸ்பாஹுல் ஹுதாவில் ஸனது பெறும்பொழுது எங்களுக்கு உபதேசம் செய்த ஹளரத் அவர்கள், "நீங்கள் வாங்குகின்ற சமபளத்தில் மாதாமாதம் பத்து ரூபாய் சேமித்து வாருங்கள். அதைக்கொண்டு ஹஜ் செய்ய நிய்யத் வையுங்கள்" என்றார்கள். அதன்படி எனது முதல் மாத சமபளம் ஐம்பது ரூபாயில் பத்து ரூபாயைச் சேமித்தேன். அதுமுதல் எத்தனை கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் சேமிப்பை கைவிடவில்லை. படிப்படியாக சம்பளம் அதிகரித்தது. அதன் கணக்குக்கு ஏற்ப சேமிப்பையும் அதிகரித்து வந்தேன்.

1985 ஆம் வருடம் ஓரளவு பணம் சேர்ந்தவுடன் அந்தப் பணத்தைக் கொண்டு ஹஜ் செய்ய நாடியபோது வீட்டில் பிரச்சனை வேறு மாதிரி தலைதூக்கியது. அதையும் சமாளித்தேன்.

"என்ன பிரச்சனை அது? எப்படி சமாளித்தீர்கள்? என்றபோது,

"எனது மூத்த மகள் அப்பொழுது திருமணத்துக்கு தயாராக இருந்தது. அதைக் கரைசேர்க்க வேண்டிய நேரத்தில் ஹஜ்ஜுக்குப் போனால் எப்படி?" என்று துணைவியார் கேட்டவுடன் நேராக S.R.ஷம்சுல்ஹுதா ஹஜரத் அவர்களிடம் போய் விபரம் சொன்னேன்."

''எந்த நோக்கத்துக்காக நீ இந்த பணத்தை சேமித்தாய்? ஹஜ்ஜுக்குத்தானே! முதலில் அதை நிறைவேற்று. அல்லாஹ் உனது பெண் மக்களுக்குரிய ரிஸ்கை நிச்சயம் தருவான்'' என்று அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள்.

அதை அப்படியே ஏற்று செயல்பட்டேன். அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையினால் ஹஜ்ஜும் செய்தேன். படிப்படியாக ஐந்து பெண் மக்களையும் கரைசேர்த்தேன். இந்த வீட்டையும் சொந்தமாக நிலம் வாங்கிக்கட்டினேன்.

இவ்வாறு அவர் சொல்லி முடித்தவுடன் நமக்கு நினைவில் வந்த பழமொழிதான், "ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்."

ஆனால் இந்த ஆலிமின் வாழ்க்கையில் அது பொய்த்துப்போனது. காரணம், அல்லாஹ்வின் மீது முழு தவக்கல் வைத்து தனது ஆசிரியப்பெருந்தகையின் வழிகாட்டலை அப்படியே ஏற்று வாழ்ந்திருக்கிறார்.

இலட்சக்கணக்கில் தினந்தோரும் பணம் புரளும் எத்தனையோ பேர் 70 வயதைத்தாண்டிய பிறகுதான் ஹஜ் செய்ய வேண்டும் என்று சபதம் செய்து வாழ்கின்றார்களே! அவர்களுக்கெல்லாம் இந்த ஆலிமின் வாழ்க்கை முன்மாதிரியல்லவா?

1 கருத்துரைகள்:

"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி" : விளக்கம்
---------------------------------------------------------------

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்:

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் விளக்கமாகும்.

Post a Comment