March 13, 2017

பர்சாத்தின் ஜனாஸா நல்லடக்கத்தில் சிக்கல் - சோகத்துடன் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்

-மூத்த ஊடகவியலாளர் எம்.ஜே.எம். தாஜுதீன்-

அவுஸ்திரேலியாவில் படுகொலை செய்யப்பட்ட நீர்கொழும்பு, பலகத்துறையைச் சேர்ந்த பர்சாத் மன்சூரின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பர்சாத் மன்சூரின் தந்தை ஏ.டபிள்யூ.எம் மன்சூர் தெரிவித்தார்.

நான் அவரை ஞாயிற்றுக்கிழமை (12.03.2017) மாலை பலஹத்துறையில்  'மாயபஸார்'  பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்தித்து  ஆறுதல் கூறியபோதே  அவர்  இதனைத் தெரிவித்தார்.

பர்சாத் மன்சூரின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக நான் விளக்கம் கேட்டபோது மன்சூர் ஹாஜியார் மிகவும் சோகத்துடன் இவ்வாறு கூறினார்.

எனது மகன் அநியாயமாகக் கொல்லப்பட்டு 12 நாட்கள் கடந்துவிட்டபோதும் இதுவரையில் நல்லடக்கம் செய்யமுடியாமல் போனது குறித்து நான்  பெரும் கவலையடைகிறேன்.

அவுஸ்திரேலியாவின் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கடுமையாக அமுல்படுத்தப்படுவதே அதற்கான காரணமாகும். அதில் அந்த நாட்டுப் பிரதமருக்குக்கூட தலையிட முடியாதாம்.

கொலைக்குற்றச்சாட்டு  தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டு புலன் விசாரணைகள் நடைபெற்று வருவதால் அவை முடிந்து நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை   நாம் காத்திருக்கவேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இலங்கைத் தமிழர்கள் என ஆரம்பத்தில் சொன்னார்கள். நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.

சில வேலை அவர்கள் நேபாள பாஸ்போட் வைத்துள்ள இலங்கையர்களாக இருக்கலாம் என்பது எனது கணிப்பு.

எனது மகன் சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியா சென்று ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.  வீசா பிரச்சினை  காரணமாக அவர் சிலகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

விசாரணைகளின் பின்னர் 'மஞ்சல் அட்டை' வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்த மஞ்சல் அட்டை மூலம் அவருக்கு மேலும் ஐந்து வருட காலம் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்த நிலையில்தான் அவர் இலங்கை வந்துபோக தான் சீட்டுப்போட்டு சேமித்த 10 லட்சம் ரூபாவைக் கேட்டுப்போன நேரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக படுகொலை செய்யப்பட்டார்.

வீசா பிரச்சினை காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது என் மகனுடன் கூடவே இருந்த நண்பனே அவர் படுகொலை செய்யப்பட்டபோதும் கூடவே இருந்துள்ளார். இப்போது அவர் அச்சம் காரணமாக தலைமறைவாகிவிட்டார். அவுஸ்திரேலிய பொலிஸார் அவரையும் கைது செய்யத் தேடிவருகின்றனர்.

ஜனாஸா நல்லடக்கம் தாமதமடைய இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

அவுஸ்திரேலியாவில் உள்ள பள்ளிவாசலில் இயங்கும் ஜனாஸா நலன்புரிச்சங்கத்தில் கண்டியைச் சேர்ந்த ருஸ்தீன் என்பவர் ஓர் உறுப்பினராவார்.

எனது மகனின் ஜனாஸா கிடைத்தவுடனேயே நல்லடக்கம் செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் அவர் செய்துள்ளதாக எனக்கு தொலைபேசிமூலம் உறுதியளித்தார்.

அடக்கம் செய்யும் மையவாடிக்கு ஏழாயிரம் டொலர் செலுத்த வேண்டும் என்றும் அதனை அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து பெற்றுத்தருவதாகவும் அவர் கூறினார்.

பலஹத்துறையைச் சேர்ந்த முஜீபுர்ரஹ்மான் என்பவர் அங்கு குடியுரிமை பெற்று வாழ்கிறார். அவரும் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஜனாஸா நல்லடக்கத்துக்கு பூரண ஒத்துழைபப்பு வழங்குவதாகத் தெரிவித்தார்.

ஜனாஸா எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தில் நாம் பொறுமையோடு காத்திருக்கிறோம்.

எப்படியும் இம்மாதம் 22 அல்லது 23 ஆம் திகதி கிடைக்குமென்ற  நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அங்கு கொலை செய்யப்பட்ட பாகிஸ்தானியர் ஒருவரின் ஜனாஸா,  விசாரணைகள்  முடிந்து ஒரு  மாதத்துக்குப் பின்னரே நல்லடக்ககம் செய்யப்பட்டதாக அறியமுடிந்து.

எனது மகனுக்கு 9 மற்றும் 7 வயதில் இரண்டு பெண்பிள்ளைகளும், 5வயதில் ஒரு ஆண்பிள்ளையும் உள்ளனர். எல்லோருக்கும் அல்லாஹ் போதுமானவன்.

இவ்வாறு சோகத்துடன் கூறிமுடித்தார் மன்சூர் ஹாஜியார்.

1 கருத்துரைகள்:

தமிழ் தீவிரவாதிகளுக்கு இறைவனின் சாபம் உண்டாகட்டும்

Post a Comment