Header Ads



காஷ்மீர் மக்களுக்காக ஜெனீவாவில் ஒலித்த, இலங்கை முஸ்லிம்களின் குரல் (படங்கள்)


(ஜெனீவாவில் இருந்து ஏ.ஏ.எம். அன்சிர்)

காஷ்மீர் முஸ்லிம்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரிப்பதுடன், அவர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் கொடூரங்கள் உடனடியாக நிறுத்த சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டுமென இலங்கை முஸ்லிம்களின் சார்பில் ஜெனீவாவில் வலியுறுத்தப்பட்டது.

உலக முஸ்லிம் லீக்கின் இணை ஆதரவில் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செவ்வாய்கிழமை, 14 ஆம் திகதி காஷ்மீர் மக்களின் நிலை குறித்த மாநாடு நடைபெற்றது.

இதில் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பினரும் பங்கேற்றனர். இதன் தலைவர் அனீஸ் ரவூப் இங்கு உரையாற்றுகையில், 

இலங்கை முஸ்லிம்களும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அவர்கள் தமது பாரம்பரிய பூமியிலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளனர். தற்போதும் அவர்களின் அவல வாழ்வு தொடருகிறது. உலகில் எந்த மூலையில் மன்னாள் துன்புறுத்தப்பட்டாலும் அவர்களுக்காக உரத்துக் குரல் கொடுப்பதும், அந்தக் கொடுமைகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்தரக் கடமையாகும்.

அந்தவகையில் காஷ்மீர் மக்கள் தமது பூரண சுதந்திரத்திற்காக நீண்டநாட்களாக போராடி வருகின்றனர். எனினும் அவர்கள் இராணுவ பலம்கொண்டு இந்திய இராணுவத்தினரால் ஒடுக்கப்படுகின்றனர். 

அவர்கள் தமது வாழ்விடங்களின், பூரண உரிமை பெற்று வாழவும், அவர்களுக்கு எதிராக இந்திய இராணுவம் மேற்கொள்ளும் அடக்குமுறைகளை நிறுத்தவும் வேண்டுமென இலங்கை முஸ்லிம்கள் சார்பில் நாங்கள் இந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குரல் கொடுக்கிறோம் என்றார்.

இவரின் உரை முடிந்தவுடன் பார்வையாளர் அவையிலிருந்து எழுந்த நாம் தமிழர் கட்சி சார்பிலான ஒருவர், இலங்கை முஸ்லிம்கள் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டவர்கள் எனக் கூறுகிறீர்களே, அப்படியென்றால் இலங்கை இராணுவம் செய்த தமிழர்களுக்கு செய்த அநியாயங்களுக்கு உங்கள் பதில் என்ன..? தனித் தமழீழம் பற்றி முஸ்லிம்களின் நிலைப்பாடு யாது என வினா எழுப்பினார்.

இதற்கு  பதில் வழங்கிய அனீஸ், இலங்கையில் சகல சிறுபான்மை இனங்களுக்கு எதிராகவும் மேற்கொண்ட வன்முறைகள், அடாவடித்தனங்களை நாங்கள் நிராகரிக்கிறோம். எதிர்க்கிறோம். அத்துடன் ஐக்கிய இலங்கை என்பதே இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு எனவும் குறிப்பிட்டார்.

அதேவேளை ஐ.நா.வின் இந்த அமர்வில் பங்கேற்ற தமிழ் ஆதரவு மற்றும் புலி ஆதரவாளர்கள் இதுபற்றிய தொடர் கேள்விகளை எழுப்ப முயன்றபோதும், காஷ்மீர் ஏற்பாட்டுக் குழுவினரால் அந்த கேள்விகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது நேரப்பற்றாக்குறை என காரணம் கூறப்பட்டு நிகழ்வு அத்துடன் நிறைவு செய்யப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் காஷ்மீர் முஸ்லிம்களுக்கு எதிராக இந்திய இராணுவம் மேற்கொள்ளும் காட்டுமிராண்டித்தனம், பாலியல் வல்லுறவு கொடுமைகள், சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல கொடூரங்கள் வீடியோ மூலம் காண்பிக்கப்பட்டதும், அவை மனதை உருக்குபவையாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Indian army must be banned from entering Kashmir. Kashmir must be given autonomy.

    ReplyDelete

Powered by Blogger.