Header Ads



சிறுநீரகம் என்ற உடலின் கழிவுத் தொழிற்சாலையும், சிறுநீரகம் செய்யும் அற்புதப் பணிகளும்..!!

-டாக்டர்  கு.கணேசன்-

நெஞ்சில் வலி வந்தால், ‘எதுக்கும் ஒரு இசிஜி எடுத்துக்கோ… மாரடைப்பு ஏதாவது இருந்துடப் போகுது’ என அக்கறையோடு சொல்வதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். வயிற்றில் வலி வந்தால், ‘எண்டோஸ்கோப்பி பார்த்துக்கொள்வது நல்லது. அல்சராக இருக்கும்...’ என்று யோசனை சொல்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். இதுபோல் முதுகில், விலாவில் வலி வந்தால், ‘அது வாயுவாகத்தான் இருக்கும். பூண்டு சாப்பிடு, சரியாகிவிடும்’ என்றுதான் நெருங்கியவர்கள் சொல்வார்களே தவிர, ‘வயிற்றை ஸ்கேன் எடுத்து சிறுநீரகம் (Kidney) சரியா இருக்கான்னு பார்த்துக்கோ...’ என ஆத்ம நண்பர்கூட ஆலோசனை சொல்லமாட்டார்.

காரணம், நம் மக்களிடம் இதயம் மற்றும் இரைப்பையைத் தெரிந்த அளவுக்குச் சிறுநீரகம் குறித்த விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. படித்த ஆண்களுக்கே கூட சிறுநீரகம் எங்கே இருக்கிறது என்கிற விவரம் தெரியாது! சிறுநீர் வெளியேறுகிற உறுப்பைச் சுற்றி இருக்கும் விரைகளையே (Testes) சிறுநீரகங்கள் என்று கருதுபவர்கள்தான் அதிகம்!

இதயம் ஒரு பம்ப், மூளை ஒரு கம்ப்யூட்டர், நுரையீரல் ஒரு காற்று இயந்திரம் என்று வர்ணித்தால் சிறுநீரகம் ஒரு ஃபில்டர். வடிகட்டி! இது ஒரு இரட்டைப் பிறவி. இரைப்பைக்குப் பின்புறம், முதுகெலும்பின் இருபுறமும் கைக்கு அடக்கமான மாங்காய் அளவுக்குச் சிறுநீரகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 150 கிராம் எடையில், 12 செ.மீ. நீளத்தில், 6 செ.மீ. அகலத்தில், 3 செ.மீ. தடிமானத்தில் அவரைவிதை வடிவத்தில் அமர்ந்துள்ளது.

கழிவுகளை மறுசுழற்சி செய்கிற தொழிற்சாலையில் நடக்கும் வேலைக்குக் கொஞ்சமும் குறைவில்லாத வேலைகள் இங்கேயும் நடக்கின்றன. எப்படி? உடலில் ஒரு ரத்த நதி எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் நிமிடத்துக்கு ஒண்ணேகால் லிட்டர் ரத்தம் சிறுநீரகத்துக்குப் போகிறது. இதிலிருந்து நிமிடத்துக்கு 125 மில்லி சிறுநீர் ஆரம்பத்தில் பிரிக்கப்படுகிறது. அதாவது ஒரு நாளில் 150 முதல் 180 லிட்டர் வரை சிறுநீர் முதலில் உற்பத்தியாகிறது. இந்தக் கட்டத்தில் நெஃப்ரான்கள் மட்டும் ஒரு ஸ்ட்ரைக் அறிவித்தால் போதும், நாள்முழுக்க நாம் ரெஸ்ட் ரூமிலேயே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்! ஏனெனில், இனிமேல்தான் முக்கிய வேலைகளே நடக்க வேண்டும்.

சிறுநீரகம் செய்யும் இந்தச் சீரான பணிக்கு பிட்யூட்டரி சுரக்கும் ‘வாசோபிரசின்’ மற்றும் அட்ரீனல் சுரக்கும் ‘ஆல்டோஸ்டீரோன்’ ஹார்மோன் கைகொடுக்கிறது. இப்படிச் சிறுநீரகமானது ரத்தத்தில் தேங்கும் குப்பைகளை எல்லாம் பலதடவை வடிகட்டி சிறுநீரில் வெளியேற்றுவதால், உடலில் அதிகபட்ச கழிவுகளைக் கொண்ட திரவமாக சிறுநீர் இருக்கிறது. ஓர் அறையைச் சுத்தப்படுத்த வேண்டுமானால், நிறைய தண்ணீர்விட்டு மீண்டும் மீண்டும் அலசுவோம் அல்லவா? அதுபோலத்தான் இந்த நிகழ்வும்.

அதனால்தான், ‘ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், சிறுநீரகம் எனும் கழிவுத் தொழிற்சாலை சரியாக இயங்க வேண்டுமானால், தண்ணீர் எனும் மூலப்பொருள் தாராளமாக கிடைக்க வேண்டும். அதுசரி, பகலில் நாம் அடிக்கடி பாத்ரூம் போகிறோம். அதுபோல் இரவிலும் போனால் நிம்மதியாகத் தூங்கமுடியுமா? இதற்கும் ஒரு சூப்பர் சிஸ்டம் சிறுநீரகத்தில் இருக்கிறது. மனிதப் படைப்பின் அடுத்த ஆச்சரியம் இதுதான்.

மருத்துவமனையில் குளுக்கோஸ் ட்ரிப் இறங்குவதைப் பார்த்திருப்பீர்கள். அதில் குளுக்கோஸ் இறங்கும் வேகத்தைக் குறைக்கவும் கூட்டவும் ஒரு ரெகுலேட்டர் இருக்கும். கிட்டத்தட்ட அதே சிஸ்டம்தான் சிறுநீரகத்திலும் இருக்கிறது. ஆனால், ரெகுலேட்டர் மட்டும் மிஸ்ஸிங். நெஃப்ரான் இயல்பாகவே பகலில் டக்... டக்கென்று வேகமாகவும், இரவில் டொக்… டொக்… டொக்… டொக்கென்று மெதுவாகவும் சிறுநீரைச் சொட்டுகிறது.

இப்படிச் சொட்டுச் சொட்டாக உற்பத்தியான சிறுநீர் ஒரு மாப்பிள்ளை அழைப்பு கார் வேகத்தில் சிறுநீர்ப்பையில் சேருகிறது. நமக்குச் சிறுநீர்ப்பை மட்டும் இல்லாவிட்டால் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். சரியாக மூடப்படாத தண்ணீர்க் குழாய் மாதிரி சிறுநீர் எந்நேரமும் சொட்டும். தாங்குவோமா? நம் படைப்பின் கூடுதல் அற்புதம் சிறுநீர்ப்பை. இரண்டு சிறுநீரகங்களுக்கும் சேர்த்து ஒரு பைதான். இதில் சுமார் அரை லிட்டர் சிறுநீர் பிடிக்கும்.

சிறுநீரகம் செய்யும் அற்புதப் பணிகள்

* உடம்பிலுள்ள கழிவுகளை அகற்றி ரத்தத்தைச் சுத்தமாக்குகிறது.
* ‘ரெனின்’, ‘ஆஞ்சியோடென்சின்’ எனும் ஹார்மோன்களைச் சுரந்து ரத்த அழுத்தத்தை ஏறவிடாமல் பார்த்துக்கொள்கிறது.
* உடம்பின் அமிலம், கார அளவுகளை சரிவிகிதத்தில் வைத்துக்கொள்கிறது.
* ‘எரித்ரோபயாட்டின்’ என்ற ஹார்மோனைச் சுரந்து ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.
* ‘கால்சிட்ரியால்’ ஹார்மோனைச் சுரந்து எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்கிறது.
* ‘புராஸ்டோகிளான்டின்’ ஹார்மோனைச் சுரந்து மூச்சுக்குழாய், ரத்தக்குழாய், குடல் திசுக்கள் போன்றவற்றின் இயக்கங்களை ஊக்குவிக்கிறது.
* ரத்தத்தில் இருக்க வேண்டிய பொருட்கள் இருக்க வேண்டிய அளவுகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியம் நிலைக்கும். இதற்கு ‘உடலின் உட்சூழல்’ (Internal environment) என்று பெயர். இதைச் சரியாக வைத்துக்கொள்வது சிறுநீரகங்களே! உதாரணத்துக்குக் குளிர்காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிவதும் கோடையில் குறைவாக கழிவதும் உடலின் உட்சூழலை பராமரிக்கத்தான்.

1 comment:

  1. எமது உடலின் உதிரிப்பாகங்களை கச்சிதமாகப் படைத்த படைப்பாளன் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் - அல்ஹம்துலில்லாஹ்...!

    ReplyDelete

Powered by Blogger.