Header Ads



'பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும், ஷைத்தான்கள் இறங்குகின்றனர்'

''எவர் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கவா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் ஷைத்தான்கள் இறங்குகின்றனர்.'' (அல்குர்ஆன் 26: 221, 222)

நல்லடியாபுகளில் பல பிரிவினர் உண்டு. நபிமார்களுக்கு அடுத்த இடத்தை "அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு வீரமரணம்" அடைந்தோர் பெறுகின்றனர். அவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் "அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டோரை மரித்தவர்கள் என்று நிச்சயமாக நீங்கள் எண்ணாதீர்கள்!" தம் ரப்பினிடத்தில் (இறைவனிடத்தில்) அவர்கள் உயிருடனே இருக்கிறார்கள். (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (அல்குர்ஆன் 3:196)

அவர்கள் இறைவனிடமும் எவ்வாறு உயிருடன் உள்ளனர் என்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கமுற்படும் போது, அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைக் கூட்டுக்குள் நுழைந்து சுவனத்தில், தான் நினைத்தபடி சுற்றித்திரிகின்றன," என்று குறிப்பிட்டார்கள். (ஆதாரம் : முஸ்லிம் அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு.

இத்தகைய உயர்ந்த நிலையை அடைந்துள்ள ஷஹீதுகள் தங்களுக்கு கிடைத்த இந்தபெரும் பேறை, உலகுக்கு வந்து சொல்லிவிட்டு திரும்புவதற்காக அல்லாஹ்விடம் அனுமதி கேட்டனர். அல்லாஹ் "உங்கள் சார்பாக உங்கள் நிலையை நான் உலகமக்களுக்கு அறிவிக்கிறேன்" என்று கூறி மேற்கூறிய வசனத்தையும், அதற்கு அடுத்து வருகின்ற இரண்டு வசனங்களையும் இறக்கினான்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் தந்தனர். ஆதாரம் : அபூதாவூது அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

மேற்கூறிய இரண்டு நபிமொழிகளும் "அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு வீரமரணம் அடைந்தவர்கள் சுவனத்தில் பறவை வடிவத்தில் வாழ்கின்றனர் என்பதையும், அவர்கள் இந்த உலகுக்கு வந்து உடனே திரும்பிச் செல்ல அனுமதி கேட்டும் அல்லாஹ் அதற்கு அனுமதிக்கவில்லை" என்பதையும் நமக்குத் தெளிவாக்குகின்றன,

"அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து வேறிடம் செல்ல விரும்ப மாட்டார்கள்" (அல்குர்ஆன் 18:108)

அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டோரின் உயிர்கள் இந்த உலகுக்கு வரமாட்டா என்று தெளிவாகின்றது. ஏனைய நல்லடியார்களின் நிலைபற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

கப்ரில் நல்ல மனிதனை வைக்கப்பட்டு அவனிடம் விசாரணைகள் முடிக்கப்பட்டவுடன் அவனுக்கு உரிய இடத்தைக் காட்டி "இதுவே கியாமத் வரை உனது தங்குமிடமாகும்" என்று மலக்குகள் கூறுவர் (நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) ஆதார நூல் : புகாரி, முஸ்லிம் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு

"கப்ரில் மனிதன் வைக்கப்பட்டு விசாரணை முடிந்த உடன் நான் எனது குடும்பத்தினரிடம் சென்று எனக்குக் கிடைத்த மகத்தான வாழ்க்கை பற்றி கூறிவிட்டு வருகிறேன்" என்று கேட்பார். (பேசாமல்) புதுமணமகனைப் போல் அயாந்து உறங்குவீராக! என்று அவருக்குக் கூறப்படும். (நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆதார நூல் : புகாரி, முஸ்லிம் அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு

கப்ரில் வைக்கப்பட்டு விசாரணை முடிந்த பின் சுவனத்து ஆடை அணிவிக்கப்பட்டு, சுவனத்து விரிப்பு விரிக்கப்படும். சுவனத்தின் நறுமணம் அவர்களை நோக்கி வீசிக் கொண்டிருக்கும். (நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) (ஆதார நூல் : அபூதாவூது, அறிவிப்பவர்: பரா, இப்னு ஆஸி)

மேற்கூறிய நபிமொழிகளிலிருந்து இறந்துவிட்ட நல்லடியார்கள் "சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்" என்றும், "இன்னும் சிலர் மண்ணறையிலேயே சுவனத்து இன்பங்களில் திளைத்துக் கொண்டுள்ளனர்" என்றும் அவர்கள் இவ்வுலகுக்கு வந்து செல்ல அனுமதி கேட்டும் அவர்களுக்கு அனுமதி தரப்படமாட்டாது என்பதையும் தெளிவாகவே நம்மால் விளங்க முடிகின்றது.

இறந்துபோன நல்லடியார்கள் எவரும் திரும்பவும் இந்த உலகுக்கு விஜயம் செய்கிறார்கள் என்றோ, இன்னொருவர் உடலுக்குள் வந்து புகுந்து கொள்கின்றனர் என்றோ, யாரேனும் நம்பினால் மேற்கூறிய அல்லாஹ்வின் வசனங்களுக்கும், நபிமொழிகளுக்கும், மாறு செய்த மாபெரும் குற்றவாளியாகின்றனர்.

மனிதனது உடலக்குள் புகுந்து கொண்டு ஆள்மாறாட்டம் செய்வது ஷைத்தான்தான், நல்லடியார்கள் அல்ல. பொய் சொல்கின்ற, தீய செயல்கள் செய்கின்றவர்கள் மீது தான் ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கு ஏற்ப, இன்று பேயாடுவோர், பல்வேறு இறை கட்டளைகளை உதாசீனம் செய்தவர்களே அவர்களையே ஷைத்தான் ஆட்டுவிக்கிறான்.

அழியாத பெருவாழ்வை அடைந்துள்ள நல்லவர்கள், அழிந்துவிடக் கூடிய இந்த அற்ப உலகத்துக்கு எப்படி வருவார்கள்? நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை.

"அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்தவர்களுக்கு "பிர்தவ்ஸ்" என்னும் சுவாக்கம் தங்குமிடமாக உள்ளது. அதில் (அவர்கள்) என்றென்றும் நிலைத்திருப்பாகள். அங்கிருந்து (வேறிடம்) திரும்பிச் செல்ல அவர்கள் விரும்பமாட்டார்கள். (அல்குர்ஆன்)

No comments

Powered by Blogger.