Header Ads



இலங்கை - அமெரிக்க இடையே இரகசிய உடன்பாடு

போர் உதவி வசதிகளுடன் தொடர்புடைய இரகசிய உடன்பாடு ஒன்றை அமெரிக்காவுடன், செய்து கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.

ஜேவிபியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,

“ அமெரிக்காவுடன் இதுபோன்றதொரு இரகசிய உடன்பாடு 10 ஆண்டுகளுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது அமைச்சரவைக்கோ, நாட்டுக்கோ தெரியாது.

அந்த உடன்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்காக, அதுபோன்றதொரு நகர்வு, தற்போது  முன்னெடுக்கப்படுகிறது.

அமெரிக்காவுடனான இந்தப் பாதுகாப்பு உடன்பாட்டினால் சிறிலங்காவுக்கு  பொருளாதார ரீதியாகவோ, பாதுகாப்பு ரீதியாகவோ நன்மை கிடைக்காது. ஆனால், சிறிலங்காவின் சுதந்திரத்துக்கும், சுயாட்சிக்கும் பேரிடியாக இருக்கும்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செய்தது போல, இந்த அரசாங்கமும் இரகசியமாக இந்த உடன்பாட்டில் கையெழுத்திட முனைந்தால், அதற்கு எதிராக மக்களைத் திரட்டி பெரும் போராட்டங்களை நடத்துவோம்.

போர்ச்சூழலில், விமானங்கள், கப்பல்களுக்குத் தேவையான வசதிகளை அளிக்கும் இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருந்தது. அப்போது இந்த உடன்பாட்டில் கோத்தாபய ராஜபக்சவும், அமெரிக்கா சார்பில் றொபேர்ட் ஓ பிளேக்கும் கையெழுத்திட்டிருந்தனர்.

எனினும், இந்த உடன்பாட்டின் உள்ளடக்கம் குறித்து மகிந்த அரசாங்கம் பொதுமக்களுக்கு எந்த தகவலையும் வெளியிடவில்லை” என்றும் ரில்வின் சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.