March 06, 2017

அல்லாஹ்விடம் துஆ கேட்டால், தேசியப்பட்டியலை இல்லாமல் செய்துவிடு என்றுதான் கேட்பேன் - ஹக்கீம்

ஹஸன் அலி வேதனையுடன் இருக்கிறார். அவர் கூட்டம் நடத்துவதை நாங்கள் ஆமோதிக்கிறோம். ஆனால், ஒரு தனிமனிதனின் வேதனையை பகடைக்காயாக வைத்து ஊர் ஊராக பிரசாரம் செய்யப்போவதாக சிலர் சித்து விளையாட்டு காட்டுவதை அனுமதிக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்‌ தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிந்தவூர் கிளையின் கூட்டமும், நிந்தவூர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜப்பார் அலி தலைமையில் நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;

இந்தக் கட்சியை வழிநடத்துவதாக இருந்தால் குருடனாகவும், செவிடனாகவும் இருந்தாக வேண்டும் என்று மறைந்த தலைவர் கூறுவார். சிலவேளை என்று அதனை திருத்துகிறார். நான் செவிடனாகவே இருந்துவிட்டு போனால் என்ன என்றும் யோசித்திருக்கிறேன். நேற்று நடந்த விடயம் பற்றி 8 மாதங்களுக்கு முன்னரே எனக்குத் தெரியும். அதற்கான முஸ்தீபுகள் நடைபெற்றது விளங்காத ஒரு விடயமல்ல.

ஹஸன் அலி வேதனையுடன் இருக்கிறார். அவர் கூட்டம் நடத்துவதை நாங்கள் ஆமோதிக்கிறோம். நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஹஸன் அலி அவருடைய பிரச்சினையை என்னுடனும் கதைத்திருக்கிறார். கட்சியிடமும் கதைத்திருக்கிறார். ஆனால், அவரை பகடைக்காயாக வைத்து, ஊர் ஊராக பிரசாரம் செய்யப்போவதாக சிலர் சித்து விளையாட்டு காட்டுவதை அனுமதிக்க முடியாது.

கட்டாய உச்சபீடக் கூட்டத்தில் என்னை தலைவராக பிரேரித்தவர் ஹஸன் அலி. அவருடைய கூட்டத்தில் வைத்தும் அதை மீண்டும் ஆமோதித்துவிட்டு சென்றிருக்கிறார். அப்படியான ஒருவரை நான் இழிவுபடுத்த முடியாது. அது மனிதப் பண்பு அல்ல.

தலைமைத்துவத்தை இலக்குவைத்து செய்யப்படும் இந்த வேலைகளில், முரண்பாடுகள் இருந்தால் நேரில் பேசுங்கள். முரண்பாடுகளாக சொல்லப்படுபவை எல்லாம் பொதுவான விடயங்களாக இருந்தன. ஒரு சில தனிநபர்களின் விவகாரங்களை நான் கண்டுகொள்வதில்லை என்றும் சொன்னார்கள். இவையெல்லாம் இந்த செயார்மன் சங்கத்தினால் ஏற்பட்ட பிரச்சினை.

மற்றவர்கள் சவால்களை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்காக அதற்காக ஓடி ஒளியும் ஒருவராக கட்சித் தலைமை ஒருபோதும் இருக்க மாட்டாது. சவால்களை எதிர்கொள்ளும் திராணி தலைமைக்கு அவசியம். மக்களுக்கு மத்தியில் வெளிப்படையாக பேசுவதுதான் எங்களுக்கு மத்தியிலுள்ள கடமை.

கரையோர மாவட்டத்தை மறந்துவிட்டோம் என்று மிகப்பெரியதொரு அபாண்டத்தை சொல்லவருகிறார்கள். முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். நேர்மையான அரசியல் செய்துகொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் நெருக்கமானதொரு சினேகத்தை பேணிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அதனை லாவகமாக பெற்றெடுப்பதற்காக வியூகங்களை வகுத்துக்கொண்டிருந்தோம்.  

நான் கஃபத்துல்லாவுக்கு சென்று அல்லாஹ்விடம் துஆ கேட்டால், ஒன்றை மட்டும்தான் கேட்பேன். இந்த தேசியப்பட்டியலை மட்டும் இல்லாமல் செய்துவிடு என்றுதான் கேட்பேன். அப்போதுதான் இந்தக் கட்சியை காப்பாற்றமுடியும்.

கறுப்பு ஆடுகளை நான் கண்டுகொள்ளவில்லை என்று யாரும் நினைக்கவேண்டாம். அந்த கறுப்பு ஆடுகள் எங்கு மேய்கிறது என்று எனக்குத் தெரியும். இப்படியான கூட்டத்தினரை நான் நெடுங்கயிற்றில் விட்டிருக்கிறேன். ஆனாலும், நான் நிதானத்துடன் இருக்கிறேன்.

அணிகள் உருவாகுவது என்பது கட்சிக்கு ஆரோக்கியமானதல்ல. ஆனால், அவற்றையும் மீறி பலர் அணிகளை அமைத்திருக்கிறார்கள். அவர்கள் எந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சிப் போராளிகளுக்கு நன்றாகத் தெரியும். அதனை தலைமை சொல்லவேண்டிய தேவையும் இல்லை. ஆனால், முகஸ்துதிக்காக வெளியில் அதனை சொல்லாமல் இருக்கிறோம். 

பிறவ்ஸ்


5 கருத்துரைகள்:

பெரிய சுத்தமான தலைவர்.
மற்றவர்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டு வீராய்ப்பு பேசுகின்றார்.
கறுப்பு ஆடு யார் என்பதை கண்ணாடி முன் நின்றால் தெரியும்.
ஹஸன் அலி பிரேரிக்கவில்லை என்றால் அவரும் துரோகிகளின் பட்டியலில்தானே.
மனசாட்சியை தட்டுங்கள்.
சுய அறிவு இருந்தால் புரியும்.

தேசியப்பட்டியலை இல்லாமல் செய்ய துஆ கேட்க வேண்டிய அவசியம் இல்லை தலைவரே,

நீர் யாரிடம் இருந்து இந்த தேசியப்பட்டியலை பெற்றுக்கொண்டீரோ, அவரிடமே இது வேண்டாம் என்று திருப்பிக்கொடுத்து விட்டு அதட்கு பகரமாய் மேலும் பல கோடிகளை பெற்றுக்கொண்டால் போதும்.

ஆனால் நீர் அதனை செய்யமாட்டீர். உமது அரசியல் சித்த விளையாட்டுக்கான துரும்ம்புசீட்டே இந்த தேசியப்பட்டியல் எனும் எலும்புத்துண்டுதானே ஐயா.....

ஹக்கீம் அவர்களே ,நீங்கள் இறைவனிடம் கேட்க வேண்டிய பிரார்த்தனை "யா அல்லாஹ் என்னை தலைமை பொறுப்பில் இருந்து நீக்கி விடுவாயாக "

முஸ்லிம்களின் நலனுக்கு எது நல்லதோ அது கிடைக்கட்டும் என்று மட்டும் துஆ கேளுங்கள்.

இப்பதான் புரிகிறது தேசியபட்டியல் பிள்ளை வரம் மாதிரி அல்லாஹ் கொடுக்கின்ற ஒன்று என்று ஐயா! பெரியவரே அல்லாஹ்விடம் மூன்று தே/பட்டியலை கேட்க இருந்திச்சி ரொம்ப புத்திசாலி மடையன் இருக்கும் வரைக்கும்

Post a Comment