Header Ads



எமக்கு எப்படி, உபதேசம் செய்ய முடியும்..?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு, இணை அனுசரணை வழங்குவது சிறிலங்கா அரசாங்கத்தின் பலவீனம் என்று குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

சிறிலங்கா படைகளுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் அறிக்கையை வெளியிடப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அனைத்துலக அரங்கில் குறிப்பாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தினால் கிடைத்துள்ள வாய்ப்புகளை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், சிறிலங்கா விவகாரத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அதிகாரிகளான நிஷா பிஸ்வால், சமந்தா பவர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

தீர்மானம் மீது தமக்கு அக்கறையில்லை என்பதை அமெரிக்கா தெளிவாக காண்பித்துள்ளது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம், அதனை தள்ளிக் கொண்டு சென்றிருக்கிறது. இது சிறிலங்கா அரசாங்கத்தினதும் வெளிவிவகார அமைச்சினதும் பலவீனம்.

தமது ஆயுதப்படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று பிரித்தானியப் பிரதமர் அண்மையில் கூறியிருந்தார். பிறகு எப்படி இந்த நாடுகள் எமது உள்நாட்டு விவகாரங்களில் உபதேசம் செய்ய முடியும்?

போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று மனித உரிமை காவலர்கள் ஆகிவிட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள். அவர்கள் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

“ஆயுதப் படைகளின் பாதுகாப்பு-ஒரு உண்மை மதிப்பீடு அறிக்கை: ஆயுதப்படைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விவாதித்தல்” என்ற தலைப்பில், 200 பக்கங்களைக் கொண்டதாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

வண. பெங்கமுவ நாலக தேரர் தலைமையிலான தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் அழைப்பின் பேரில், தர்சன் வீரசேகர தலைமையிலான சட்டவாளர்கள் குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீது போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தும் வகையிலும், சிறிலங்கா படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலும், தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை நேற்று கொழும்பில் உள்ள சிறிசம்புத்தத்வ ஜயந்தி மந்திரயவில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, முன்னாள் கடற்படை அதிகாரிகளான றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம, றியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், றியர் அட்மிரல் சரத் வீரசேகர உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.