Header Ads



ரியாத் நகரில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின், மாபெரும் கலாச்சார நிகழ்வு

(றியாதிலிருந்து பௌஸான்)

சவுதிஅரேபியாவின் தலைநகரான ரியாத் மாநகரில் வசிக்கும் இலங்கை முஸ்லிம் சமூகம் அங்குள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து மாபெரும் கலாச்சார நிகழ்வொன்றை நடாத்தவுள்ளது. 

நாளை வெள்ளிக்கிழமை மார்ச் 17ம் திகதி நடைபெறவுள்ள இந்நிகழ்வினை ரியாத்திலுள்ள “மன்னர் பஹத் கலாச்சார மண்டபத்தில்” நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

“இஸ்லாம் : சமாதானத்தின் மார்க்கம் மற்றும் வாழ்வதற்கான வழி” எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ள இக்கலாச்சார நிகழ்வில் இலங்கை முஸ்லிம்களின்; கலாச்சாரம், வரலாறு, பங்களிப்பு என்பவற்றை பிரதிபலிக்கும் வகையிலான போட்டிகள், கண்காட்சி, கலைநிகழ்வுகள் மற்றும் ஆவணப்படக் காட்சி ஆகியன நடைபெறவுள்ளன. மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், மருத்துவ முகாம், இரத்தான நிகழ்வு போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் ரியாத் நகரிலுள்ள அனைத்து இலங்கைவாழ் மக்களும் வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்புவிடுக்கின்றனர்.

சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் முஹம்மத் அஸ்மி தாஸிமின் வழிநடத்தலில் ரியாத்வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் 14ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இணைந்து முதல்முறையாக இந்நிகழ்வினை ஏற்பாடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ரியாத் வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கிடையிலிருக்கும் உறவை வலுப்படுத்தல், சவூதி வாழ் ஏனைய இலங்கை சமூகங்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற்குமிடையிலுள்ள நல்லுறவை மேன்மேலும் பலப்படுத்தல், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, கலாச்சாரம், பங்களிப்பு என்பவற்றை அறியச் செய்தல் மற்றும் அவற்றை முன்வைப்பதற்கான பொதுக்களமொன்றை ரியாத் வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுத்திக்கொடுத்தல் என்பவை இந்நிகழ்வின் பிரதான இலக்குகளாகும்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளோர், ஏனைய சமூகத்து சகோதரர்களை அழைத்து வர விரும்புவோர் மற்றும் நிதி மற்றும் ஏனைய வகையில் பங்களிப்பு செய்யக்கூடியவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புகொள்ளுமாறும் கீழ்க்கானும் இணைப்பின் ஊடாக தம்மை முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ளுமாறும் ஏற்பாட்டுக்குழுவி
ஏற்பாட்டுக்குழுவினர் வேண்டிக்கொள்கின்றனர். 0546867925, 0546974055, 0549621048, 0559859065, 0557635639, 0509305186, 0558859213 


1 comment:

Powered by Blogger.