Header Ads



மூத்த ஊடகவியலாளர், 'ஸ்டார் ராஸிக்' காலமானார்

மூத்த ஊடகவியலாளரும் தினகரன் ஹாரிஸ்பத்துவ குறூப் நிருபருமான ஸ்டார் ராஸிக் நேற்று(07) செவ்வாய்க்கிழமை பிற்பகல் காலமானார். சமீபகாலமாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 71வது வயதில் காலமானார்.

1977களில் பிற்பகுதியில் பிராந்திய ஊடகவியலாளராக இணைந்து சுமார் 40 வருடகாலமாக  மலையகத்தில் ஊடகத்துறைக்கு பெரும்பங்களிப்புச் செய்துள்ளார்.

ஆரம்பத்தில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மர்ஹும் ஏ.சி.எஸ். ஹமீதுடன் இணைந்து செயற்பட்ட ஸ்டார் ராஸிக் அவரது மறைவுக்கு பின்னர் தற்போதைய தபால்துறை முஸ்லிம் விவகார அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமுடன் இணைந்து செயற்பட்டு வந்தார்.

ஆரம்பத்தில் கல்வித் திணைக்களத்தில் அலுவலக அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஸ்டார் ராஸிக் 4 பிள்ளைகளின் தந்தையாவார். இவரது மூத்த மகன் ரியாஸ் தற்போது குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் பணிபுரிகின்றார்.

ஸ்டார் ராசிக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து வருவதோடு, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் மத்திய மாகாண செயற்பாட்டாளர்களாகவும் நீண்டகாலம் இயங்கி வந்துள்ளார்.

அன்னாரது மறைவையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என். எம். அமீன் மீடியா போரம் சார் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.

மறைந்த ராஸிக்கின் ஜனாஸா கட்டுகஸ்தோட்ட, வத்துவல இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் உகுரஸ்ஸ பிட்டிய ஜும்ஆம் பள்ளிவாசல் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

1 comment:

  1. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!
    துணிவு மிக்க மலையகக் குரல் ஒன்று ஓய்ந்துவிட்டது!

    ReplyDelete

Powered by Blogger.