Header Ads



தேர்தலில் தோல்வியடைந்திருந்தால், எமது சடலத்தை புதைத்திருப்பார்கள் - ராஜித

கடந்த தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் எமது சடலத்தை புதைத்திருப்பார்கள் அல்லது சமாதி கட்டியிருப்பார்கள் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கலுக்கு இலக்காகியவர்களின அமைப்பு ஏற்பாடு செய்திருந்த வருடாந்தக் கூட்டம் இன்றைய தினம் காலை கொழும்பு விஹாரமகாதேவி வெளியரங்கு மைதானத்தில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தலில் வழங்கப்படுகின்ற அத்தனை வாக்குறுதிகளும் தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பொய்யானவைகளாகும். அப்படியான வாக்குறுதிகளை நாங்கள் ஜனவரி 8 ஆம் திகதி வழங்கவில்லை.

நாங்கள் அலசி ஆராய்ந்து, இந்த நாட்டிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், வெகுசன அமைப்புக்கள், ஜனநாயகத்தை மதிக்கும் பிரிவினரும், சுதந்திரத்தைக் கோரிய ஊடகவியலாளர்கள் ஆகியோருடன் பேச்சு நடத்தியே எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்தோம்.

எங்களுக்கு உறக்கம் இருக்கவில்லை. தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் எமது சடலத்தை புதைத்திருப்பார்கள் அல்லது சமாதி கட்டப்பட்டிருக்கும்.

இதனால் எமக்கு உறக்கமும், பசியும் இருக்கவில்லை. எமக்கு இருந்த ஒரே அடைக்கலம் மக்களாகும். எமக்கு பணமும் இருக்கவில்லை.

பணபலம் உடைய முதலாளிகள் தமது பணப் பொதிகளை எடுத்துக் கொண்டு அலரிமாளிகையிலுள்ள மஹிந்த ராஜபக்சவை சந்திப்பதற்குச் சென்றனர்.

பத்திரிகையில் முதலாவது தேர்தல் விளம்பரத்தை செய்வதற்குக்கூட எமக்கு பணம் இருக்கவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேனவிடம் பேசி 60 மில்லியன் ரூபாவை எனது மகன் பெற்றுக்கொண்டுவந்த பின்னரே முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினோம்.

நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவோம். அப்போது பணம் கிடைக்கும். அவற்றைக்கொண்டு உங்களது கணக்குகளைத் தீர்ப்போம் என்று பொய்யைக் கூறியே வர்த்தகர்களிடம் உதவிகோரினோம்.

அவ்வாறே எமது தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினோம். அது ஜனாதிபதிக்கும் தெரியும். மஹிந்த ராஜபக்சவுக்கு 50 கோடி ரூபாவைக் கொடுத்த வர்த்தகர்கள் எமக்கு வெறும் 5 இலட்சம் ரூபாவையே கொடுத்தனர்.

சிலவேளை மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுவிட்டால் என்ற எண்ணத்திலேயே அவர்கள் வழங்க முன்வந்தனர். எனினும் யாரும் எதிர்பாராத கீழிருந்தான சக்தி ஒன்று எமக்கிருந்தது. இந்த நாட்டு மக்களே அந்த சக்தியாகும் என தெரிவித்தார்.

1 comment:

  1. மரியாதைக்குரிய ராஜித அவர்களே. அளுத்கம பிரட்சினையில் தாங்கள் செய்த சேவை அளப்பரியது.
    இப்போது வாயில் வந்ததை எல்லாம் கண்டபடி பேசாமல் இருந்தால் இன்னும் முன்னேறி செல்லலாமே.

    ReplyDelete

Powered by Blogger.