Header Ads



'இஸ்லாம் தவறாகப் புரியப்பட்ட மார்க்கம்' என பிரதமர் சொன்னதும், நமது பணிகளும்..!!

பூமி உள்ளிட்ட முழுப் பிரபஞ்சத்தையும் அல்லாஹ்தஆலா படைத்தான். அதிலே மனிதன் வாழக் கூடிய இடமாக பூமியைப் படைத்தான். அந்தப் பூமியை நிர்வகிப்பதற்கான வழிகாட்டல்களை காலத்துக் காலம் தனது தூதர்களுக்கூடாக அல்லாஹ்தஆலா அனுப்பி வைத்தான். அந்தத் தூதர்கள் வரிசையில் இறுதியானவராக முஹம்மத் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்தஆலா தெரிவுசெய்தான்.

நபிகளார் அனுப்பப்படுவதற்கு 500 வருடங்களுக்கு முன்னர் இயேசு நாதர் என அழைக்கப்படுகின்ற ஈஸா (அலை) கடைசிக்கு முந்திய அல்லாஹ்வின் தூதராக உலகுக்கு அனுப்பப்பட்டார்கள். உலகத்தை வழிநடத்த அடுத்தடுத்து அனுப்பப்பட்ட இரண்டு நபிமார்களுடைய பிறந்த தினத்தை இலங்கை இந்த மாதத்திலே அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறது.

மனிதனுக்கு வழிகாட்டுகின்ற இஸ்லாம் என்கின்ற கட்டடம் காலத்துக்குக் காலம் வழிகாட்டல்களுடன் அனுப்பப்பட்ட அதனுடைய தூதர்களாலேயே கட்டப்பட்டது. இறுதிக் கல்லாக முஹம்மத் (ஸல்) அவர்கள் வந்து கட்டடத்தைப் பூரணப் படுத்தினார்கள். இனி இதுதான் இறுதிவரைக்கும் உலகத்தாருக்கான மார்க்கம் எனப் பிரகடனப்படுத்தினார்கள். இன்றுடன் இந்த மார்க்கத்தைப் பூரணமாக்கி விட்டேன் என்று அல்லாஹ்தஆலாவும் முஹம்மத் நபியவர்களின் அந்திம காலத்தில் அறிவித்துவிட்டான்.

இனி உலகம் முடியும் வரைக்கும் வாழ்கின்ற மக்களுக்கான வழிகாட்டல் இதுதான். இந்த வழிகாட்டலின்படி உலகத்தாரை வழிகாட்டுகின்ற பொறுப்பு, இந்த வழிகாட்டலை அறிந்து வைத்திருக்கின்ற, இந்த வழிகாட்டலை கொண்டுவந்த வரை ஏற்றுக் கொள்கின்ற அனைவரதும் பணியாகும். அதற்காக அனைத்து சாதனங்களையும் பொழுதுகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அந்தப் பணியைச் செய்கின்றவர்களின் திறமையின்பாற்பட்டது. இந்த வகையில் தான் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்த இந்த மாதம், அவர் கொண்டுவந்த வழிகாட்டலை வேண்டி நிற்கின்ற இந்த நாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றது.

நபிகளார் இந்த வழிகாட்டலை பூரணப்படுத்துவதற்கு முன்னர் வந்த யேசுநாதரின் பிறந்த தினம் இந்த நாட்டில் கடந்த டிசம்பரில் அமோகமாக அனுஷ்டிக்கப்பட்டது. இது ஒரு கிறிஸ்தவ நாடா என்று எண்ணும் அளவுக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முழு நாடுமே கொண்டாடியது. அரச நிறுவனங்கள், பொது இடங்கள் என எல்லா இடங்களிலும் வித்தியாசமான வடிவங்களில் இயேசு நாதருடைய வழிகாட்டல்கள் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

உலக மக்களை துன்பங்களில் இருந்து மீட்க வந்த மீட்பர் எனவும், அனைத்து உயிரினங்களிடமும் அன்பு காட்டிய அன்பாளர் எனவும் அவரை மக்களுடைய மனதில் பதிய வைப்பதற்கான பல்வேறு முயற்சிகள் இந்தக் காலப்பிரிவில் எடுக்கப்பட்டன. முழு இலங்கையருக்கும் பொதுவான தேவதூதராக அவர் அடையாளப்படுத்தப்பட்டார்; கிறிஸ்தவ மத போதகராக அல்ல.

இந்தப் பிரசாரங்களுக்கு மத்தியில் இலங்கையில் நடந்த இறுதித் தூதரின் பிறந்த தின நிகழ்வுகள் அவரை ஒரு காலத்துக்குப் பொருத்தமற்ற பிற்போக்கான மனிதராகக் காட்டுவதாகவே அமைந்திருந்தன. ரஸூலுல்லாவின் இரத்தத்தைக் குடித்து நபித்தோழர் ஒருவர் பாவமீட்சி பெற்றார் என்று ஒரு கதீப் குத்பாவிலே முழங்கினார். காறித் துப்பிய எச்சிலையும், வுழு செய்து விட்டு எஞ்சிய தண்ணீரையும் உடம்பிலே பூசி நபித்தோழர்கள் தம்மை புனிதப்படுத்திக் கொண்டார்கள் என்று மேடைகளிலே நபிகளாரைப் பற்றி உலகத்தாருக்கு உலமாக்கள் எடுத்தோதிக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் அறிவுலகுக்குப் பொருந்தாத ஒரு வழிகாட்டியாக நபிகளாரைக் காட்டுவதற்கு நபிகள் பிறந்த தினத்தினை நம்மவர்களே கச்சிதமாகப் பயன்படுத்துகிறார்கள்.

இஸ்லாம் தவறாகப் புரியப்பட்ட ஒரு மார்க்கம் என தேசிய மீலாத் விழாவிலே பிரதமர் கூறியது நம்மவர்களது பிரச்சாரங்களை முன்வைத்துத் தானோ? அப்படியானால் அந்தத் தவறான புரிதலை நம்மவர்களிடம் இருந்தும் நாட்டின் ஏனைய சமூகங்களிடம் இருந்தும் களைய வேண்டிய பாரிய பணி நம் முன்னால் இருக்கிறது.

ராமனையும், சாயிபாபாவையும், அம்மாவையும், இறை நேசர்களையும் தெய்வீக அந்தஸ்துக்கு உயர்த்திவிடுகின்ற இந்தியப் பாரம்பரியத்திலிருந்து மீண்டு, அறிவுலகுக்குப் பொருத்தமான தீர்வுகளை வழங்கும் வழிகாட்டியாக நபிகளாரை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது.

நாட்டின் பொருளாதார மீட்சிக்கான தீர்வு, பண்பாட்டுச் சூழலைப் பாதுகாப்பதற்கான தீர்வு, அறிவு வளர்ச்சிக்கான வழிகாட்டல் என நபிகளாரின் ஒளியில் பல வழிகாட்டல்களை நாங்கள் நாட்டுக்கு வழங்க முடியும். முஸ்லிம் சமூகம் ஒன்று கூடி ஒவ்வொரு தேசிய மீலாதிலும் நாட்டின் பிரச்சினைக்கான ஒரு தீர்வை முன்வைக்குமானால், இன்னும் சில வருடங்களில் இலங்கையின் பிரச்சினைகள் நபிகளாரின் வழிகாட்டலில் தீர்க்கப்பட்டிருக்கும். நாட்டை பிரச்சினைகளில் இருந்த மீட்ட மீட்பராக நபிகளாரை நாடு கொண்டாடும்.

நபிகளாரை கண்ணியப்படுத்துவதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

எழுவாய், பயமிலை| இரண்டு நபிகளின் பிறந்த நாள்

 – அபூ ஷாமில் + மீள்பார்வை -

No comments

Powered by Blogger.