Header Ads



மைத்திரிபால மீண்டும் ஜனாதிபதியாக, போட்டியிருவது பற்றி முரண்பாடு

எதிர்வரும் 2020ம் ஆண்டில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்வது என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

எதிர்வரும் 2020ம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை போட்டியிடச் செய்வது என்பது குறித்து சுதந்திரக் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை. நான் கட்சியின் சிரேஸ்ட ஆலோசகராவேன்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வதாகவும், மீளவும் ஜனாதிபதியாக போட்டியிடப் போவதில்லை எனவும் கூறியே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.

அத்துடன், 2020ம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என சிலர் கூறுகின்றனர்.

மேலும், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் என்ற வகையில் இவ்வாறான ஓர் தீர்மானத்தை கட்சி எடுக்கவில்லை என்பதனை நான் அறிவேன் என சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

2

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவேயாகும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
கட்சியின் மகளிர், இளைஞர் சங்கங்கங்கள் உள்ளிட்டனவும் தொழிற்சங்கங்களும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்றே கோருகின்றன.
எனினும் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை. சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையினரது கோரிக்கைக்கு இணங்க ஜனாதிபதி கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.
இதேவிதமாக பெரும்பான்மையினரின் கோரிக்கைக்கு அமைய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பொறுப்பினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி வேட்பாளராக அடுத்த தேர்தலில் போட்டியிடுமாறு அவரிடம் நாம் அடிக்கடி கேட்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கத்திற்கு இன்னமும் பல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கின்றது.
இரண்டு கட்சிகளும் இணைந்து கொண்டதில் விருப்பமில்லாத தரப்பினரும் இரண்டு கட்சிகளிலும் இருக்கின்றார்கள்.
எனினும், இரண்டு கட்சிகளும் இணைந்து கொண்டதனால் பல்வேறு வெற்றிகள் ஈட்டப்பட்டுள்ளன.கட்சியை பலப்படுத்த உதவுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட தரப்பினரிடம் நாம் கோருகின்றோம் என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Yahapalanaya Jokers have failed in all aspects. They are dreaming of next President. No one will vote to My3.

    ReplyDelete

Powered by Blogger.