Header Ads



ஓரினச் சேர்க்கைக்கு மறுப்பு, ஜனாதிபதிக்கு அஸ்வர் பாராட்டு

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

பல சமயங்கள் வேரூன்றி இருக்கின்ற இந்த புண்ணிய பூமியில் தன்னின சேர்க்கையை அனுமதித்து சட்டம் இயற்றுவதற்கு எண்ணம் வைத்ததே பெரும் அபாய சமிக்ஞையை வெளிப்படுத்தும் விடயமாகும் என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ. எச். எம். அஸ்வர் குறிப்பிட்டார்.

இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த இழிவுச் செயலை இஸ்லாம் முற்று முழுதாக தடை செய்துள்ளது. அதே போன்று தான் பௌத்த சமயமும் இந்து சமயமும் கிறிஸ்தவமும். எனவே ஒரு அநாச்சார யுகத்தை நோக்கி நாம் செல்லுகின்றோம் என்பதற்கு இது ஒரு பெரும் அறிகுறி. ஏனெனில் இந்த அரசிலே உள்ள மேலிடத்தில் உள்ளவர்களாலேயே இந்த யோசனை மந்திரி சபைக்கு முன் வைக்கப்பட்டுள்ளதை எந்த விதத்திலும் நாம் ஆச்சரியம் கொள்ளத் தேவையுமில்லை. ஆச்சரியப்படவும் மாட்டோம். ஏனென்றால் சட்டம் இல்லாமலே இந்த இழி செயலை, பாவத்தனமான செயலை அவர்கள் நடாத்திச் செல்வதை முழு நாடும் நன்கறியும். எப்படி இருப்பினும் மந்திரி சபைக்கு இந்த ஆலோசனையை வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரதான் முன் வைத்துள்ளார்.

அவர் சமயங்களுக்கு விரோதமானவர். முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விடயங்களிலும், சர்வதேச ரீதியிலும்  முஸ்லிம்களுடைய உணர்வுகளுக்கு எதிராகச் செயற்படுவது பற்றி நாங்கள் அடிக்கடி சொல்லி வந்திருக்கின்றோம். எனவே இந்த விடயம் வெளிநாட்டு அமைச்சுக்கு சம்பந்தப்பட்ட விடயமல்ல. எனினும் ஏன் வெளிநாட்டு அமைச்சரின் மூலமாக இது மந்திரி சபைக்கு வருகின்றது என்பது  இன்று நன்றாக அவரது வாழ்க்கைச் சரித்திரத்தை நோட்டமிடும் மற்றும் அனைவருக்கு நன்றாகப் புரியும் ஒரு விடயமாகும். 

எப்படியிருந்தாலும் மந்திரிசபைக்கு வந்தபொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தில் தாம் தன்னுடைய சமுதாயத்தை அழிக்க முடியாது என்று கூறியதை நாங்கள் வரவேற்கின்றோம். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார். அதேபோன்றுதான் முஸ்லிம்களுக்கு விரோதமான பல செயல்கள் இந்த அரசாங்கத்தில் நடைபெறுவதாக முஸ்லிம் அமைச்சர்களும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூறுகின்ற அதேவேளை,  இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடிய பல தீய சக்திகள் ஊடுருவிச் செல்கின்றன என்பதை அறிந்திருப்பது மிகவும் முக்கயமானதாக இருக்கின்றது. எனவே இன்று முஸ்லிம் சமுதாயம் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் காரணமாக கிராம மட்டங்களிலே அடி மட்டங்களிலே முஸ்லிம்கள் அச்சத்தோடு வாழக் கூடிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த அச்சத்தை ஜனாதிபதிக்கும் பிரதம அமைச்சருக்கும் தெரிவித்து அச்சத்தை நீக்கி அவர்களுக்கு நிம்மதியாக வாழக் கூடிய ஒரு  சூழலை ஏற்படுத்தித் தாருங்கள் என்று அரசில் உள்ள அமைச்சர்களே வேண்டுகோள் விடுத்தும் ஒன்றும் சரி வந்தபாடில்லை என்று  றிஷாத் பதியுதீன் அமைச்சரும் ரவூப் ஹக்கீம் அமைச்சரும் வெட்ட வெளிச்சமாக இப்போது பத்திரிகையில் வெளிவரும் செய்திகளின் மூலமாகக் கூறி வருகின்றனர்.

எனவே குர்அன் சபித்துள்ள விடயங்களை சட்ட புத்தகத்தில் நுழைப்பதற்கு முனைகின்ற இவர்கள் அரசில் உள்ள சிலர் தனியார் சட்டத்தையும் நீக்குவதற்கு எந்த விதத்திலும் தயங்க மாட்டார்கள். எனவேதான் ஷரியா சட்டத்துக்கு விரோதமாக பேசியும் எழுதியும் வந்த சம்பிக ரணவக அமைச்சர் இன்று இந்த அமைச்சிலே இருக்கின்றார். இதனை நன்றாக கருத்திற்கொண்டு முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஏமாற்றமடையத் தேவையில்லை. அவர்களுக்கு கை கொடுத்து உதவுவதற்கு ஒரு சக்தி இப்பொழுது பிறந்துள்ளது. அதுதான் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலே உருவாகி இருக்கின்ற பொதுஜன ஐக்கிய மக்கள் முன்னணி. இதில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடாகி இருக்கும் மங்களப் பேரணி எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற இருக்கின்றது. இதில் இந்த அரசில் வெறுப்படைந்திருக்கும் வட கிழக்கு உட்பட அனைத்து முஸ்லிம்களும் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

எனவே அனைத்து மக்களும் எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற இருக்கின்ற கூட்டத்துக்கு அணி திரண்டு வருமாறும் அஸ்வர் அழைப்பு விடுத்துள்ளார்.  

No comments

Powered by Blogger.