Header Ads



அலெப்போவை காப்பாற்றுங்கள் - மன்றாடுகிறது ஐ.நா.


சிரிய நகரான அலெப்போவில் கிளர்ச்சியாளர் பகுதி மீது அரச படையின் முன்னேற்றம் அங்கு பாரியதொரு மயானத்தையே ஏற்படுத்தும் என்று ஐ.நா மனிதாபிமான தலைவர் ஸ்டபன் ஓபிரைன் பாதுகாப்புச் சபையை எச்சரித்துள்ளார்.

அலெப்போ நெருக்கடி குறித்து ஐ.நா பாதுகாப்பு சபை நேற்று முன்தினம் அவசர கூட்டத்தை நடத்தியபோது, மனிதாபிமான அடிப்படையில் அங்குள்ள சிவிலியன்களை பாதுகாக்கும்படி கோரினார்.

அரச படை கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது நடத்திய புதிய ஷெல் தாக்குதல்களில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு கிழக்கு அலெப்போவின் மூன்றில் ஒரு பகுதியை அரச படை மற்றும் அதன் ஆதரவு போராளிகள் கைப்பற்றியுள்ளனர்.

“கிழக்கு அலெப்போ பாரியதோரு மயானமாக மாறும் முன்னர் பலம்பொருந்தியவர்கள் அவர்களது செல்வாக்கை பயன்படுத்தி பொதுமக்களை பாதுகாக்கும் படி மனிதாமானத்தின் பெயரால் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்” என்று ஓபிரைன் பாதுகாப்புச் சபையிடம் மன்றாடினார்.

மோதல் காரணமாக குறைந்தது 25,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக குறிப்பிட்ட அவர், அரச எதிர்ப்பாளர்கள் பகுதியில் இருக்கும் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் தெரிவித்தார்.

கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு கிழக்கு அலெப்போவில் 250,000 பேர் வரை தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். இந்த பகுதியை கைப்பற்ற அரச படை நான்கு மாதங்களாக முற்றுகையில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு அலெப்போவில் ரஷ்ய அல்லது சிரிய அரச ஜெட் விமானங்கள் துண்டுப்பிரசுரங்களை போட்டுள்ளது. அதில் மக்கள் வெளியேறாவிட்டார் நிர்மூலமாக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

“உடனடியாக இந்த பகுதியை விட்டு நீங்கள் வெளியேறாத பட்சத்தில் நீங்கள் நிர்மூலமாக்கப்படுவீர்கள். அனைவரும் உங்களை கைவிட்டு விட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் பேரழிவை சந்திக்கும் வகையில் அவர்கள் கைவிட்டுவிட்டார்கள்” என்று அந்த துண்டு பிரசுரத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.