December 31, 2016

புலிகளின் கொடூரத்தை மிஞ்சிவிடும், மைத்திரியின் அறிவிப்பு

தமிழ் மொழிச் சமூகத்திற்கு அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகதிற்கு அநீதி இழைப்பதும் அவர்களது இருப்பை கேள்விக்குறியாக்கி இனவாத சக்திகளினால்   காட்டாப்பு அரசியலுக்குள்  இழுத்துவரப்பட்டு அப்பாவி சனங்களையும்  அவர்களின் தலைமைகளையும் கொத்தடிமைகளாக்கும் முயற்சிகளிலேயே சில  இனவாதக் காவிகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

கடந்த அரசில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களாலும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய  ராஜபக்ஷ அவர்களினாலும் தான் குறித்த இனவாத சக்திகள் உருவாக்கப்பட்டதாகவும் இவர்களின் ஏவலின் பெயரிலேயே  சங்கைக்குரிய இனவெறியர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான காடைத்தன செயற்பாடுகளை அவிழ்த்து விட்டனர் என்று முஸ்லிம் மக்களை நம்பவைத்து அவர்களின் வாக்குகளைப்பெற்று நல்லாட்சி எனும் பெயரில் த‌ற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது.

இனியாவது சமாதானமும் சமத்துவமும் ஓங்கட்டும், செழிக்கட்டும் என்ற நப்பாசையில் நல்லாட்சி என்ற பெயரில் மைத்திரிபால சிறிசேன அவர்களை சனாதிபதியாக்கி இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய கதைபோல் நல்லாட்சி இனவாத வக்கிர புத்தி ஜீவிகளை தலையில் தூக்கிவைத்துக்   கொண்டாடும் நரியாட்சியாய் , நாசம் நிறைந்த நரக ஆட்சியாய் தனது முகமூடியை விளக்கி காட்டுகின்றது.

அத்துமீறிய சிலைவைப்புக்கள், அடாவடி இனத்துவேச ஆர்ப்பாட்டங்கள், தமிழ் மொழிச் சமூகமான சிறுபான்மையினரின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் தனித்துவமான சமய நம்பிக்கைகள், பாரம்பரியங்களை கேள்விக்குள்ளாக்கியதோடு புனித குர்ஆன் ஹதீஸ் போன்ற வெற்றை கேலிக்குள்ளாக்கும் சம்பவங்கள் தொடராக நடந்தவண்ணமே உள்ளன.

குறித்த சம்பவங்களின் சூத்திரதாரிகள் யார் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது .  இந்த ஆட்சியில் சக்திவாய்ந்த அமைச்சர்களாக இருக்கும் சம்பிக்க மற்றும் ராஜித போன்றவர்கள் தான் இதன் பின்னணியில் உள்ளவர்கள் என்பதை முன்னாள் சனாதிபதியே வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார் . 

அதையும் தாண்டி  1990 ஆம் ஆண்டு காலப்பகுதில் தனது அனைத்து உடமைகளையும் இழந்து அகதியாக்கப்பட்ட  மரிச்சிக்கட்டி,காயாக்குழி, கரடிக்குழி,  பாலக்குழி, முசலி, கொண்டச்சி, மற்றும் வேப்பங்குளம் ஆகிய பிரதேச மக்கள் போர் முடிந்த கையுடன் தங்களின் 26 வருட இன்னல்கள் மறையும், தங்களின் பூர்வீக காணிகளில் குடியேறலாம், விவசாயம் உள்ளிட்ட ஜீவனோபாய  நடவடிக்கைகளில் ஈஈடுபடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் போதே 2012 ஆம் ஆண்டு இரவோடு இரவாக வன பரிபாலன சபையின் கீழ் குறித்த பூர்வீக பிரதேசங்கள் வரும்படி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இவற்றுக்கு ஒருபடி மேலேபோய் யாபாலன அரசர் அதிமேதகு மைத்திரிபால அவர்கள்  குறித்த மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமிக்கும் வகையில் விஸ்தரித்து வன ஜீவராசிகள் திணைக்களத்தின்   கீழ் கொண்டுவந்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கும்படி  கட்டளை பிறப்பித்துள்ளார். இச்சம்பவம் மரத்தால் விழுந்தவனை மாடேறி  மிதித்ததுபோன்று  நல்லாட்சியின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை குழிதோண்டி புதைப்பதோடு  1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் செய்த துன்பியல் சம்பவத்தையும் புதுப்பிக்கும் வகையில் அல்லது மிஞ்சும் வகையில்  உள்ளது என்றே குறிப்பிடவேண்டும் .

குறித்த  அறிவித்தலக்கு எதிராக இன, மத பேதங்களுக்கு அப்பால்   மனிதாபிமானமுள்ள அனைத்துத் தலைவர்களும் குரல் கொடுக்கவேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கவேண்டும்.

இப்படியான வரலாற்று துரோகங்கள் மற்றும் நேருக்குதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்குமேயானால் நல்லாட்சியின்மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை அடியோடு துடைத்து வீசப்பட்டு   மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்தையோ இனக்கலவரத்தையோ கொண்டுவரும் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்கப்போவதில்லை.

-எம்.ஏ.எம் முர்சித்-

5 கருத்துரைகள்:

Ellathukkum pulikala mudiyla😣

5 வருடங்களுக்கு பின் ஆட்சியில் இருக்கமாட்டேன் என்று ஏன் சொன்னார் என்று இப்போதுதான் தெரிகின்றது ..

So people still believe Mahinda s statement????

நல்லாட்சி அரசு மெல்ல மெல்ல நரித்தனமாக சிறுபான்மை இனத்தை வேரறுத்து வருகிறது.

Nearly 99.9% of Muslim lost confidence on Mitiri's presidency. The remaining 0.1%, Muslim politicians who are sucking for their seats.

Post a Comment