Header Ads



இரணவிலவில் இருந்து அமெரிக்கா வெளியேற, இடம்பிடிக்க சீனா தீவிரம், இந்தியா எதிர்ப்பு

இரணவிலவில் உள்ள, வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையத்தை மூடுவதற்கு, அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு இரணவிலவில் வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்புக் கோபுரத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது. எனினும், 1993ஆம் ஆண்டிலேயே இங்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆரம்பத்தில் இந்த ஒலிபரப்பு வளாகம், 920 ஏக்கர் கொண்ட, பலத்த பாதுகாப்புமிக்க, இராஜதந்திர விலக்குரிமை பெற்ற பகுதியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும் அந்தப் பகுதி மக்கள் நடத்திய போராட்டங்களினால், வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையப்பகுதி 520 ஏக்கர் பரப்பளவுக்குள் குறைக்கப்பட்டது. இந்தப் பிரதேசத்துக்குள் இலங்கையர்கள் எவரும் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இரணவில ஒலிபரப்பு கோபுரத்தின் மூலம் பிராந்தியத்தின் இராணுவத் தகவல்கள் இரகசியமாக சேகரிக்கப்படுவதாகவும், இங்கு இரகசிய ஓடுபாதை ஒன்று இருப்பதாகவும் முன்னர் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

இந்த ஒலிபரப்பு நிலையத்தையே மூடுவதற்கு அமெரிக்க முடிவு செய்துள்ளது.

இரணவிலவில் உள்ள ஒலிபரப்பு நிலையத்தை விலக்கிக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்பதை, சிறிலங்காவின் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உறுதி செய்துள்ளார்.

அதேவேளை, அமெரிக்கா கைவிடவுள்ள இரணவில பிரதேசத்தில், 5000 ஏக்கர் நிலத்தை தமக்கு வழங்குமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீன நிறுவனம் ஒன்றே இந்தக் கோரிக்கையை சிறிலங்கா அமைச்சர் ஒருவரிடம் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வான் அலைகளைப் பரிமாற்றம் செய்யும் கேந்திர மையமாக இந்தப் பகுதி இருப்பதாலேயே, இரணவில ஒலிபரப்பு நிலையத்தை உள்ளடக்கிய பிரதேசத்தை சீன நிறுவனம் கோரியுள்ளது.

எனினும், இந்தப் பகுதி நிலத்தை சீனா கோரியிருப்பது பற்றி தனக்குத் தகவல் தெரியாது என்று சிறிலங்கா அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

இரணவிலவில் ஒலிபரப்புக் கோபுரத்தை அமெரிக்கா அமைத்த போது, இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

எனவே, இந்தப் பகுதியில் நிலத்தை பெறும் முயற்சியில் சீனா இறங்கினால் அதற்கு இந்தியாவிடம் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பும் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. what is happening to the pieces of lands in srilanka?
    Every country is buying or taking ? Already hambanthota... to china.
    What ever happens like this does not sees to look for the good of srilanka's future.

    Citizens finally will finally restricted limited space.

    ReplyDelete

Powered by Blogger.