Header Ads



'தேநீர்க்கடை அரசியல், நடத்தும் முஸ்லிம்கள்'

- மொஹமட் பாதுஷா -

ஒரு சமூகம் இனத்துவ நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அதனை அச்சமூகத்தின் அரசியல்வாதிகள் உணராமல் இருப்பதும், அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனத்தை மக்கள் உணராமல் இருப்பதுமே மிகப் பெரிய கைச்சேதமும் உயிரோட்டமுள்ள சமூகத்துக்கான அபசகுணமும் ஆகும்.   
முஸ்லிம்கள் இன்னும் ‘தேநீர்க்கடை அரசியலை’த்தான் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேநீர் குடித்து முடிக்கும் வரை பேசுகின்றார்கள், பின்னர் மறந்து விடுகின்றார்கள். ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதை அலசுவது, அதைப் பற்றி விவாதிப்பது; பிறகு இன்னுமொரு பிரச்சினை வந்தால் பழையதை மறந்து விட்டுப் புதிய பிரச்சினையை தலையில் போட்டுக் கொண்டு ஒப்பாரி வைப்பதுமாக முஸ்லிம்களின் அரசியல் இருக்கின்றது.   
இதனால், முஸ்லிம் விரோத தரப்பினரால் மிக இலகுவாக போக்குக்காட்டக் கூடிய ஓர் இனக்குழுமமாக முஸ்லிம்களும் அவர்களுடைய நடப்பு விவகாரங்களும் கையாளப்படுகின்றன. முஸ்லிம்களை ஆட்சியாளர்கள், இனவாதம் மட்டுமன்றி அவர்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளும் போக்குக்காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதே பட்டறிவாகும்.   
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. முஸ்லிம்கள் பொதுவாகவே மதம்சார்ந்த விடயங்களில் கூருணர்வு கொண்டவர்கள் என்பதால் அவர்களைச் சீண்டிப்பார்த்து, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக, சிங்களவர்களுக்கு எதிரானவர்களாகக் காண்பித்து, எதையோ சாதித்துக் கொள்வதற்கு ‘யாரோ’ நினைக்கின்றார்கள் என்பது தெளிவானது.  
 இந்தத் தரப்பினருள் வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகள் மட்டுமன்றி பெருந்தேசியவாதிகளும் இருக்கலாம் என்பது பலரதும் அனுமானமாகும். தமிழர்களை ஓரளவுக்கு அடக்கியாயிற்று. அதேபோல முஸ்லிம்களையும் அடக்கி ஒடுக்க வேண்டும் என நினைக்கின்ற இனவாத சக்திகளுக்கு, உலகெங்கும் உருவாகியுள்ள முஸ்லிம் விரோதப் போக்கு, பெரும் துணையாக இருக்கின்றது. உள்நாட்டு அரசியல் நிலைவரங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.   
அதன் காரணமாக, கண்ணுக்கு முன்னே ஏவி விடப்பட்டுள்ள இனவாதிகளைக் கைது செய்யாமல் விட்டுவிட்டு, கண்ணுக்குத் தெரியாத அவர்களது பின்புலங்களை ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சுட்டவனைப் பிடித்து சிறையில் அடைத்தால் அவனுக்கு துப்பாக்கி கொடுத்தவன், திட்டம் தீட்டியவன், பணம் கொடுத்தவன், ஏற்றிக் கொண்டு வந்தவன் என எல்லா சூத்திரதாரிகளும் யார் என்ற முழு விவரமும் வெளியில் வரும். அதைவிடுத்து சுட்டுவிட்டு ஓடுகின்றவனை ஓடவிட்டுவிட்டு... திரைமறைவில் திட்டம் தீட்டியவனை சட்டம் ஒருக்காலும் தேடி அலைந்ததில்லை என்கின்ற மிகச் சாதாரண நடைமுறை நியதிகூட இங்கே மறுதலிக்கப்பட்டிருக்கின்றது.   
இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு மறுசீரமைப்பு, அதன் கீழ் முன்வைக்கப்படவிருக்கும் இனப் பிரச்சினைக்கான தீர்வுப்பொதி, தீர்வுப் பொதியின் பிரதான உள்ளடக்கமாக இருக்கக்கூடிய வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் போன்ற முக்கியத்துவம்மிக்க விடயங்களில் முஸ்லிம்கள் அக்கறை செலுத்திக் கொண்டிருந்த நேரத்திலேயே, இனவாதச் செயற்பாடுகள் உச்ச நிலையை அடைந்தன என்பது இவ்விடத்தில் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.   
இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள களச் சவால்களைத் தொகுத்து நோக்குங்கள். கடும்போக்கு சக்திகளின் செயற்பாடுகள் அபாயச் சங்குகளாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களின் புனித வேதமான குர்ஆனிலும் ஏக இறைவனான அல்லாஹ்விலும் குறைகாணும் அளவுக்கு இனவாதிகள் தைரியம் பெற்றிருக்கின்றார்கள்.   
ஆனால், இவ்வாறான முக்கியத்துவம் மிக்க காலப்பகுதியில் நமது முஸ்லிம் தலைமைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? சுருக்கமாகச் சொன்னால், தேசியத் தலைமை என்ற மாயைக்குள்ளும் அமைச்சுப் பதவி என்ற சுகத்துக்குள்ளும் அவர்கள் மயங்கிக் கிடக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையோ சம்பவங்கள் இடம்பெற்றிருந்தும் கூட, பொது ஒழுங்கு மற்றும் பொலிஸ், சட்ட வலுவூட்டல் பற்றிய (அரசியலமைப்புப் பேரவையின் வழிப்படுத்தல்) உபகுழுவுக்கு எழுத்துமூலப் பரிந்துரைகளை முன்வைக்க நேரமில்லாத நிலையிலேயே முஸ்லிம் கட்சிகள் இருக்கின்றன. அதேபோன்று, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியலமைப்பு மறுசீரமைப்பு, தேர்தல் முறை மறுசீராக்கம், வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற அத்தியாவசியமான விடயங்கள் குறித்து விளக்கமளிக்கும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யவும் இல்லை. 
அரசாங்கத்தில் அமைச்சராக, எம்.பியாக இருந்து கொண்டு ‘அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஒரு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரைப் போல முஸ்லிம் தலைவர்களும் அறிக்கை விடுவதைப் பார்த்தால் சிரிப்பதா, அழுவதா? என்று தெரிவதில்லை. 
இந்நிலையில், ஏனைய தளபதிகள், இரண்டாம் நிலைத் தலைவர்களைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அவர்களும் அறிக்கை விட்டுக்கொண்டு காலத்தைக் கடத்துகின்றார்கள்.  
மஹிந்த ஆட்சியிலே மௌனியாக இருந்த தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, தற்போதைய அரசாங்கத்தை விமர்சிப்பதில் திருப்தி காண்கின்றார். ஒவ்வொரு முஸ்லிம் பெருமகனும் நடப்பு விவகாரங்களின் பாரதூரத்தை, அதில் மறைந்துள்ள அபாயத்தை முன்னுணர்ந்து செயற்பட வேண்டும்.
 அரசியல்வாதிகள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தம்பாட்டில் இருக்கக் கூடாது. கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினைக்கே தீர்வு காண முடியாமல்,செயலாளர் பதவி, தேசியப்பட்டியல் எனத் தீராத தலைவலிகளோடு இருக்கும் மு.கா தலைவர் ஹக்கீமும், செயலாளர் பதவி சார்ந்த சட்டப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டும், தங்களது அடுத்த பதவி குறித்துச் சிந்திந்து கொண்டிருக்கின்ற ஏனைய அரசியல்வாதிகளும் இந்தச் சமூகத்தின் ‘பென்னம்பெரிய’ பிரச்சினைகளின் பாரத்தை தனியே சுமப்பார்களா? என்பதை முதலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்.   

1 comment:

  1. மொஹமட் பாதுஷா, மிகச் சரியாகவும், யதார்த்தமான கருத்துக்களை கூறியுள்ளீர்கள். உங்களது எழுத்துக்களை எதிர்காலத்திலும் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.