Header Ads



5 பவுண்டு நோட்டில், மாட்டுக் கொழுப்பு - பிரிட்டனில் சர்ச்சை


பிரிட்டனில் புதிய ஐந்து பவுண்டு நோட்டுக்களில் விலங்கு பொருட்கள் கலந்திருப்பது குறித்து வெளிப்பட்ட பிறகு, சைவ உணவகம் ஒன்று அந்த நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடம் பெற மறுத்துள்ளது.

கேம்பிரிட்ஜில் உள்ள ரெயின்போ கேஃப் என்ற உணவகத்தின் உரிமையாளர் ஷரோன் மெய்ஜ்லேண்ட், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அதுகுறித்த அறிவிப்புப் பலகையை வைத்துள்ளார்.

டாலோ எனப்படும் ஒரு வகையான விலங்கின் கொழுப்பு இந்த 5 பவுண்டு நோட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்த செய்தி வெளியானதை தொடர்ந்து சில சைவ உணவு உண்பவர்கள் மற்றும் மத குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நோட்டுக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ கடமை உள்ளதா என்பது குறித்து பேங்க் ஆஃப் இங்கிலாந்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

இந்த உணவகம் ஒரு நெறிமுறை சார்ந்த நிறுவனம் என்று எனது வாடிக்கையாளர்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளேன் என்று கூறுகிறார் மெய்ஜ்லேண்ட்.

''டாலோ ஒரு விலங்கின் பொருள் இல்லையா? இதுபோன்ற ஒன்றை இந்த வளாகத்தில் வைத்திருக்க கூடாது என்பது குறித்தே என்னுடைய மொத்த வர்த்தகமும் சார்ந்திருக்கிறது'' என்கிறார் அவர்.

நோட்டில் இறைச்சி உள்ளதாக வெளியான செய்தி தன்னை குழப்பமடைய செய்துவிட்டதாக ஷரோன் மெய்ஜ்லேண்ட் கூறுகிறார். மேலும், '' இது மிகவும் வெறுக்கத்தக்க செயல் .... உணவகத்தில் இந்த நோட்டுக்களை வாங்க மாட்டோம் என்பதை தெரிவிக்க உள்ளோம்'' என்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்த நோட்டுக்களை பேங்க் ஆஃப் இங்கிலாந்து புழக்கத்தில் விட்டுள்ள நிலையில், அதிலிருந்த கொழுப்பை அகற்ற கோரும் மனு ஒன்று பதிவு செய்யப்பட்ட சில தினங்களிலே 1,20,000 கையெழுத்து ஆதரவுகளை பெற்றுள்ளது.

புதிய 5 பவுண்டு நோட்டில் மாட்டுக் கொழுப்பு இருப்பது குறித்த பிரச்சனைக்கு சாத்தியமாகும் தீர்வுகளை விநியோகஸ்தர் ஆலோசித்து வருவதாக பேங்க் ஆஃப் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.