Header Ads



பிக்குவுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை - நசீர் அஹமட்

மட்டக்களப்பில் பௌத்த தேரர் ஒருவர் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரிடம் தகாத வார்த்தைகளையும் இனத் துவேச ரீதியாகவும் திட்டிய சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

சாய்ந்தமருதில் நேற்று இரவு (14) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் கூறியுள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

குறித்த தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இனவாத செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்காதவன் என்ற வகையில் தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்த தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்திற்கு சிறுபான்மை சமூகம் இரு கரம் நீட்டி தயாராகவுள்ள நிலையில் இவ்வாறு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் இனங்களிடையே மீண்டும் முறுகல் நிலையை தோற்றுவிக்கலாம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கிழக்கில் சிறுபான்மையினரை திட்டமிட்ட வகையில் ஒழிப்பதற்கு இனவாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனரா? என்ற சந்தேகத்தை இவ்வாறான தொடர் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன.

பெரும்பான்மையின தேரர் ஒருவர் நீதித்துறையின் செயற்பாடுகளை விமர்சிப்பதும் அதை மதிக்காமல் அதற்கு எதிராக செயற்பட முனைவதும் இலங்கையின் நீதிக்கட்டமைப்பையே கேள்விக்குட்படுத்தும் விடயம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை நீதித்துறை கட்டமைப்பில் தமக்கு எதிராக அநீதிகள் இடம்பெறும் போது அதற்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கின்றது என்பதுடன் இந்த தேரர் வழக்கு தொடர்ந்த அரச ஊழியர் ஒருவரை அச்சுறுத்துகின்றார் என்றால் அவர் இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார் என்றே கூற வேண்டும்.

இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம் பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம் என்பதில்லை தேரராக இருந்தாலும் ஐயராக இருந்தாலும் பாதிரியாராக இருந்தாலும் மௌலவியாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஆகவே நீதித்துறையின் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் இந்த தேரரின் நடவடிக்கையினை கண்டிப்பதுடன் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த தேரர் கைது செய்யப்பட வேண்டும்.

அது மாத்திரமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸ் அதிகாரிகள் சக அரச ஊழியர் ஒருவரை தூற்றப்படுவதை பார்த்துக் கொண்டு அருகில் இருந்து கைகட்டி வாய்மூடி மௌனமாக இருப்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் குறித்த அதிகாரிகள் மீதும் எவ்வித தயவு தாட்சணையும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய பொலிஸாரே சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை பார்த்தும் பாராமுகமாக இருக்கின்றார்கள் என்றால் எமது எதிர்கால இருப்புக்கும் பாதுகாப்புக்கும் என்ன உத்தரவாதம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இறக்காமத்தில் அண்மையில் சிலை வைக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக செயற்படும் சிறுபான்மையினரின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவான நல்லாட்சியின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தயா கமகே பதவி விலக்கப்பட வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தியிருந்தேன்.

இவ்வாறான அரசியல்வாதிகளின் தவறான முன்னுதாரணங்களின் மூலமே இவ்வாறான நடவடிக்கைகள் பகிரங்கமாக அச்சமின்றி முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் .

ஆகவே சிறுபான்மை மக்களை இரண்டாந்தர பிரஜைகளாக்கி அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறி சமூகங்களிடையே மீண்டும் மோதலை ஏற்படுத்த முற்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்,

இனவாதம் பேசி மக்களிடையே பிளவை ஏற்படுத்தி குளிர்காய நினைப்பவர்களுக்கு எதிராக புதிய சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

அது மாத்திரமன்றி பௌத்த தேரர் ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது பௌத்தர்கள் தொடர்பில் தவறான புரிதலை சர்வதேசத்தின் மத்தியில் ஏற்படுத்தும் என்பதையும் தௌிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Sabbash Mr. Naseer. Do it instead of telling

    ReplyDelete
  2. இந்தப்பேச்சு கிழக்கு மாகான போடரை தாண்டி கொழும்புக்கு போகுமா?

    ReplyDelete

Powered by Blogger.