November 07, 2016

அஷ்ஷேக் அகாரின் ஆளுமைக்கு, மெருகூட்டிய சுரையா

(என்.எம்.அமீன்)

பேருவளை ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதித் தலைவரும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற பேச்சாளருமான அஷ்ஷேக் அகார் முஹம்மதின் பாரியார் சுரையா மரிக்காரின் அகால மரணம் இவ்வாரத்தில் முழுநாட்டு முஸ்லிம்களையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்திய ஒரு நிகழ்வாகும்.
இரு வாரங்களுக்கு முன் இடம்பெற்ற இளம் ஆதில் பாக்கீர் மாகாரின் மரணம் போன்று நாட்டில் முஸ்லிம்கள் மத்தியில் கூடுதலாகப் பேசப்படும் ஒரு மரணமாக திருமதி அகார் முஹம்மதின் மரணம் அமைந்திருக்கிறது.
நுவரெலியா பிரதேசத்தில் வீடற்ற வறிய மக்களுக்காக அஷ்ஷேக் யூசுப் முப்தி தலைமையில் ஸம்ஸம் பவுண்டேசனின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட 40 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு தொடர்பாக நுவரெலிய ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக அஷ்ஷேக் அகார் முஹம்மத் அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிகழ்வுக்கு பொதுப் பணிகளுக்கு உதவும் தனவந்தர்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அகார் முஹம்மத் குடும்பத்தினர் சகிதம் சென்றிருந்தார்.
நுவரெலியப் பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். பெண்கள் மேல் மாடியிலிருந்தும் ஆண்கள் கீழ் மாடியிலிருந்தும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இப்பள்ளிவாசலில் இடம்பெற்ற மஃரிப், இஷா தொழுகையிலும் ஜமாஅத்தாக தொழும் பாக்கியம் திருமதி அகாருக்குக் கிடைத்துள்ளது.
நிகழ்ச்சி முடிந்த பின் அடுத்த நாள் நுவரெலியாவில் தங்கியிருந்த அகார் முஹம்மதின் குடும்பத்தவர்கள் இரு வாகனங்களில் வருகை தந்துள்ளனர். ஒரு வாகனத்தில் அகார் முஹம்மதும், மருமகன் அல் - ஹாபிஸ் அஸ்லமும், மகள் ஹானிமும் வந்துள்ளனர். மற்ற வாகனத்தில் அகார் முஹம்மதின் பாரியாரும் மகன் அஸ்ரமும் வெர் மனைவி ஹிசாமாவும் கடைசி மகள் மனாருல் ஹுதாவும் வந்துள்ளனர்.
உணவகத்திலே பகல் உணவை உண்டபின் கை கழுவுவதற்காக கெலிஒய வலிகல்ல கின்னாரந் தெனியவில் உள்ள பழக்கடை ஒன்றின் முன்னால் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த திருமதி சுரையாவும் மகள் மனாருல் ஹுதாவும் முதலில் இறங்கியுள்ளனர். அப்போது வாகனத்தில் மகனும் மகளும் இருந்துள்ளனர். வெளியிறங்கி நின்ற கணப் பொழுதில் பின்புறமாக ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த லொறி தானாக இயங்கி முன்னே வந்துள்ளது. முதலில் அகார் முஹம்மதின் மனைவி மீது மோதிய லொறி நிறுத்தப்பட்டிருந்த காரில் மோதி காரை கீழே தள்ளிவிட்டது. அதிஷ்டவசமாகக் காரிலிருந்த இருவருள் முதலில் இறங்கிய மகள் மனாருல் ஹுதா மயிரிழையில் உயிர் தப்ப தாயார் சுறையா ஸ்தலத்தியேயே உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளையிலிருந்து வெங்காயம் ஏற்றி வந்த சிறிய ரக லொறி தானாக இயங்குவதைக் கண்ட அங்கு கூடியிருந்தவர்கள் சத்தம் போட்ட போதும் இறை நியதிப்படி எவராலும் அதனைத் தடுக்க முடியவில்லை. கூடியிருந்தவர்கள் ஒன்று சேர்ந்து வாகனத்துக்குள் இருந்தவர்களை வெளியே எடுத்துள்ளனர். அப்போதே உயிரிழந்த அகார் முஹம்மின் மனைவியை கம்பளை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
இந்த விபத்து இடம் பெறும் போது அஷ்ஷேக் அகார் முஹம்மத் வந்த வாகனம் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்துள்ளது.
வெங்காயம் ஏற்றிவந்த லொறியின் சாரதி மறு பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. சாரதி லொறியின் இயக்கத்தை முற்றாக நிறுத்தி விடாமையே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் ஞாயிறன்று மாலை 3.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது. ஜனாஸா உடனடியாக கம்பளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் அத்தினம் ஞாயிற்றுக்கிழமையாகையால் பிரேத பரிசோதனை, மரண விசாரணை என்பன அடுத்த தினமே நடை பெற்றது.
ஞாயிறன்று நண்பகல் ஜனாஸா மாவனல்லை ஹிங்குலையிலுள்ள அகார் முஹம்மதின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
விபத்து இடம் பெற்ற அடுத்த நிமிடமே விபத்து பற்றி பல்வேறு விதமாக செதிகள் பரவின. தகவல் அறிந்த அநேகர் கம்பளை வைத்தியசாலைக்கு விரைந்தனர். கம்பளை வைத்தியசாலைக்கு வரவேண்டாம் என சமூக ஊடகங்களூடாக வேண்டுகோள் விடுக்குமளவுக்கு மக்கள் வந்து குவிந்துள்ளனர்.
அம்பாறை சென்றிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் வரும் வழியில் தகவல் கிடைத்து கம்பளை வைத்தியசாலைக்கு விஜயம் செதார்.
இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை நடத்துவதில்லையாகையால் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை திங்களன்றே நடைபெற்றது.
விபத்து பற்றிய செய்தி பரவியது முதல் நாட்டின் நாலா புறங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் ஞாயிறு இரவு முதல் மாவனல்லை ஹிங்குலையிலுள்ள அகாரின் வீட்டுக்கு வருகை தரத் தொடங்கினர். ஜனாஸா தொடர்பாக சட்ட ரீதியான பரிசோதனைகள் முடிக்கப்பட்ட பின் திங்கள் நண்பகல் வீட்டுக்கு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. அங்கு பெண்களுக்கும் மற்றும் குடும்ப உறவினர்களுக்கும் ஜனாஸா காண்பிக்கப்பட்டு பின் தெல்கஹகொட ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஸர் தொழுகைக்கு முன் நல்லடக்கம் செயப்பட்டது.
மாவனல்லைப் பிரதேச வரலாற்றில் காணாதளவு மக்கள் கூட்டம் இந்த ஜனாஸாவில் கலந்து கொண்டுள்ளனர். தெல்கஹகொட ஜும்ஆப் பள்ளிவாசலின் இரு மாடிகளிலும் மக்கள் நிரம்பிய நிலையில் ஜனாஸாத் தொழுகை நடத்தப்பட்டது. 25 வருடங்களுக்கு மேலாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்த சுரையாவின் ஜனாஸாத் தொழுகையை அழுத வண்ணம் அஷ்ஷேக் அகார் நடத்தினார். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷேக் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி அங்கு அழுத வண்ணமாக உரை நிகழ்த்தினார். கடைசியாக வெள்ளியன்று நடைபெற்ற தனது மகனின் வலீமாவில் அகார் தம்பதிகள் கலந்து கொண்டதனைக் குறிப்பிட்டு சுருக்கமாக உரை நிகழ்த்தினார். அஷ்ஷேக் யூசுப் முப்தியும் அங்குரையாற்றினார்.
ஜனாஸாவில் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், முஸ்லிம் புத்திஜீவிகள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். ஹிங்குல போதிமலுவ விஹாரை அதிபதி மாவத்தகம சுமங்கல தேரர், அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்ன, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ. ஹலீம், கபீர் ஹாசிம், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பெருந்தொகையானோர் ஜனாஸாவில் கலந்து கொண்டனர்.
அகார் முஹம்மதும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரும் எவ்வளவு தூரம் மனிதர்களைச் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள் என்பதனை நாட்டின் நாலா புறங்களிலிலிருந்தும் ஜனாஸாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோரின் வருகை சான்றாகவுள்ளது.
அஷ்ஷேக் அகார் முஹம்மத் என்ற ஆளுமையின் பின் மறைந்திருந்த மற்றொரு ஆளுமையான 48 வயதினையுடைய இத்தா மாவனல்லை ஹிங்குலோயாவில் புகழ்பெற்ற மர்ஹும் காலித் மரிக்கார், சகீனா உம்மா தம்பதியினரின் கடைசி மகளாவார். மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியில் கற்ற இவர், அஷ்ஷேக் அகாரின் தஃவா பணிக்கு நிறைந்த பங்களிப்புச் செதுள்ளார். ஒரு கணவனின் வெற்றியின் பின்னால் மனைவி இருக்கின்றார் என்பதனை நிரூபித்துச் செயற்பட்ட ஒரு ஒரு நல்ல மனைவியாகவும், ஒரு சிறந்த தாயாகவும் மர்ஹுமா சுரையா திகழ்கிறார். ஒரு சிறந்த தாயாகவும் பணி புரிந்துள்ளார்.
சுரையா எனக்கு மனைவி மட்டுமல்ல, என்னை இயக்கிய லைப் வயறும் அவரே என அங்கு சென்ற போது, சிறுபிள்ளை போன்று என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அஷ்ஷேக் அகார் அழுதவாறு என்னிடம் கூறியது இப்பெண்மணியின் பிரிவு அவரது வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்பதனை உணரக் கூடியதாக இருந்தது.
குடும்பத்தின் கடைசிப் பிள்ளையாக இருந்த சுரையாவின் பதிவுப் பெயர் சித்தி கரீமா என்பதாகும். மூன்று பிள்ளைகளின் தாயான இவர், இரு பிள்ளைகளுக்கு திருமணம் செது வைத்து மூன்றாவது மகளுக்கும் திருமணப் பேச்சவார்த்தையைப் பூரணப்படுத்திவிட்டே இறைவனடி எதியுள்ளார்.
முஸ்லிம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தனது பேச்சு, எழுத்து மூலம் நிறைந்த பங்களிப்பினைச் செதுள்ள, செது வரும் அஷ்ஷேக் அகார் முஹம்மதின் பின்னணியில் நிழலாக இருந்த சகோதரி சுரையாவுக்கு செயும் நன்றிக்கடன் தன் அன்புத் துணைவியின் திடீர் மரணத்தால் தளர்ந்துவிடாது அவர் பணிகளை மேலும் வேகமாக முன்னெடுத்துச் செல்வதாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா சுரையாவுக்கு ஜென்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக!

2 கருத்துரைகள்:

‘O Allaah, forgive and have mercy upon her, excuse her and pardon her, and make honorable hers reception. protect her from the punishment of the grave and the torment of the Fire.’

This comment has been removed by the author.

Post a Comment