Header Ads



விக்னேஸ்வரன் சொல்லுவதை கேளுங்கள் - முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்பாக, பொது அரங்கில் உறுதியளித்துள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணத்தில் நேற்றுமாலை நடந்த காலைக்கதிர் நாளிதழ் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் இணைப் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

“சம்பந்தன் அவர்கள் இங்கிருப்பதால் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுதல் நன்மை பயக்கும் என்று எண்ணுகின்றேன். என்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை சீர்குலைந்து போகக்கூடும் என்ற கருத்து பத்திரிகைகளால் மேலும் மேலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் அல்லது தனிப்பட்டவர்களின் அரசியலின் பிரதிபலிப்பாக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் நான் எந்த மனோநிலையுடன் அண்ணன் சம்பந்தன் அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்குள் இறங்கினேனோ அதே மனோநிலையில் தான் இப்பொழுதும் இருக்கின்றேன். எனக்குப் பதவிகள், அதிகாரங்கள் பெரிதன்று. அவற்றை அடைய வேண்டும் என்ற அவாவும் எனக்கில்லை. பல்லாயிரம் மக்களின் எதிர்பார்பொன்றே என்னைத் தொடர்ந்து இந்தப் பதவியில் வைத்துக் கொண்டிருக்கின்றது.

ஆகவே கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் கருத்துக்களில் வலு இருக்கின்றதா என்பதைக் கூட்டமைப்பினர் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கிருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் அது கொள்கை ரீதியானது. ஒரு அமைப்பின் கொள்கைகள் மாறலாம். அதனால் அந்த அமைப்பை அடித்துடைக்கவே அவ்வாறான மாற்றுக் கொள்கை வெளியிடப்படுகின்றது என்று எண்ணுவது மடமை. அது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான கருத்து.

முரண்பாடுகள் இருப்பதால்த்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உயிரோட்டம் நிறைந்த ஜனநாயக கூட்டமைப்பாக இருந்து வருகின்றது என்பதே எனது கருத்து. சில சமயங்களில் எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதைக் கூறியிருந்தாலும் அவற்றை மாற்றிப் பேரம் பேசத் தலைவர்களுக்கு உரித்துண்டு என்ற கருத்து வெளியிடப்படுவதுண்டு. தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் அம் மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் என்பதே எனது கருத்து. அவ்வாறில்லை என்றால் பெண், பொன், காணி, பதவி, அதிகாரம் என்பவற்றால் எமது தலைவர்களை மற்றவர்கள் விலைக்கு வாங்கிவிட முடியும்.

எந்தளவுக்கு எமது பேரம் சார்ந்த மாற்றங்கள் செல்லலாம் என்ற கேள்வி எழும் போது சுயநலத்திற்கு ஏற்றவாறு தலைவர்கள் நடந்து கொள்ள இடமிருக்கின்றது என்பதை இங்கு கூறி வைக்கின்றேன்.” என தெரிவித்தார்.

2

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு இன்றைக்கும் சரியானதே, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த காலைக்கதிர் நாளிதழ் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“வடமாகாண முதல்வராக விக்னேஸ்வரனைத் தெரிவு செய்ய எடுத்து முடிவு சரியானது என்றே நான் நினைக்கிறேன். வடக்கு- கிழக்கில் முதலமைச்சராக இருப்பவர்கள் தரம்வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதுவே எமது மக்களின் எதிர்பார்ப்பு. அவ்விதமான ஒரு முதலமைச்சர் இருப்பது எமக்கு ஒரு பலமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும், தமிழ் மக்களின் விசுவாசமான பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.

அந்த நிலை தொடர வேண்டியது அவசியம். அதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்த எவரும் முனையக்கூடாது. பல கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில், பல குறைகள் இருக்கலாம். ஒவ்வொரு கட்சிகளினதும் கருத்துக்களை மதிக்க வேண்டும். இல்லாவிடின் ஒற்றுமையாக செயற்பட முடியாது. பயங்கரமான சர்வாதிகார ஆட்சியில் இருந்து இந்த நாடு விடுபடுவதற்கு தமிழ்ப் பேசும் மக்கள் முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

எனினும், எமக்கு தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளில் முழுமையான திருப்தி இல்லை. காணாமற்போனோர் பிரச்சினை, காணிகள் விடுவிப்பு,அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவப் பிரசன்னம், குடியேற்றம், புனர்வாழ்வு, வேலைவாய்ப்பு என்று பல்வேறு பிரச்சினைகள் விடயத்தில் குறைபாடுகள் உள்ளன. இந்தக் குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்த நாட்டின் ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும். அனைத்து மக்களினதும் இறைமை மதிக்கப்பட வேண்டும். மக்கள் தமது இறைமையின் அடிப்படையில்- தாம் வாழ்கின்ற பிராந்தியத்தில் தமது அதிகாரத்தை பயன்படுத்தக் கூடிய நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்விதமான நிலை ஏற்பட்டால் தான் மக்களின் இறைமையின் அடிப்படையிலான ஆட்சி நடக்கும். அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தவே நாம் பாடுபடுகிறோம்.

அனைத்துலக சமூகம் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. எமக்கு இது ஒரு முக்கியமான நேரம். இப்போது கிடைத்துள்ள சந்தர்ப்பம் குறித்து மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.  மக்களால் ஏற்றுக் கொள்ளமுடியாத தீர்வை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

அதேவேளை எமக்குத் தேவையான சட்டரீதியான உள்ளடக்கங்களைக் கொண்ட தீர்வு ஒன்று அமைந்தால் அத்தகைய சந்தர்ப்பத்தை நாம் இழந்து விடக் கூடாது. ஏனென்றால் அதிகாரம் எமது கைக்கு வர வேண்டும். எனவே இந்த விடயத்தில் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. அதுல்லாக்களிற்கு சமர்ப்பணம்

    ReplyDelete
  2. ஐப்னா முஸ்லீம் சம்பந்தமே இல்லாமல் தலைப்பில் முஸ்லீம்களை இழுத்து குரோதத்தை ஏற்படுத்திலாபமீட்ட பார்க்கிறது.
    யார்மீதும் தாம் அவதூறு பரப்பவிலை யென்றும் செய்திகளை திரிவுபடுத்தவில்லை என்றும் வீராப்பு பேசியதெல்லாம் வீணே!!

    ReplyDelete
  3. புத்தன் சொல்லியும் நாய் வாலு நிமிருமா?

    ReplyDelete
    Replies
    1. அதானே! சிபேர்த்த பிரிந்தால் நன்மை, சிலர் சேரந்தால் நன்மை!
      எந்தப் பிரயோசனுமும் இல்லாதவர்கள் இணைந்தாலென்ன? பிரிந்தாலென்ன?

      பாம்பின் கால் பாம்பறியும்,உமக்குத்தெறிந்திருக்கு உனது இனத்தைப்பற்றி!

      Delete

Powered by Blogger.