Header Ads



நஸீர் அஹமட் எடுக்கவுள்ள, சிறந்த தீர்மானம்


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-

அரசியல்வாதிகளை வரவேற்பதற்காக மாணவர்களை வீதியோரங்களில் நீண்டநேரம் காத்திருக்கவைத்து, அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து, அழைத்துவந்து, பட்டாசு கொழுத்தும் இவ்வாறான விடயங்களைத் தடைசெய்யும் தீர்மானத்தை, மாகாணசபையில் கொண்டுவரும் யோசனை உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.  

இது தொடர்பில் நேற்றுத் திங்கட்கிழமை அவர் மேலும் தெரிவிக்கையில், 

“பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு, அரசியல்வாதிகள் விஜயம் செய்யும்போது, அவர்களை வரவேற்பதற்கும் மலர்மாலை அணிவிப்பதற்கும் பட்டாசு கொளுத்துவதற்கும் ஆரத்தி எடுத்து, அழைத்து பவனி வருவதற்கும் மாணவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இது ஒரு கலாசாரமாகவே வந்துவிட்டது” என்றார்.   “இவ்வாறான விடயங்களை அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரில் ஒரு சிலரே விரும்புகின்றபோதிலும், இதனால் மாணவர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்பதைப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் அறியக்கிடைத்துள்ளது.  

மழை, வெயில் என்று பாராது வீதியோரங்களில் நீண்டநேரமாக மாணவர்கள் கால்கடுக்க நிற்க வைக்கப்படுவதால், அவர்கள் மன, உடல் உளைச்சலுக்கு உள்ளாகுவதுடன், அவர்களின் கற்றலுக்கான நேரமும் வீணாகுகின்றது. எனவே, இவ்வாறான விடயங்களைத் தவிர்த்து, மாணவர்களின் கற்றலுக்கும் அவர்களின் உடல், உள ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்காதவாறு பாடசாலைகளில் நடக்கும் நிகழ்வுகளில் மாணவர்களைப் பயன்படுத்துவதில் கல்விப்புலம் சார்ந்தோர் அக்கறை காட்ட வேண்டும்.  

இந்த விடயத்தை மாகாணசபையில் தீர்மானமாகக் கொண்டுவந்து, அதனை நிறைவேற்றிச் சட்டமாக்கி அமுல்படுத்தும் யோசனை உள்ளது.  என்னைப் பொறுத்தவரையில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த விடயத்தில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரின் நன்மை கருதி எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்வார்கள்” எனவும் அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.