Header Ads



'நல்லவர்களை போல் நடிப்பதில், மஹிந்த போன்று வேறு யாரும் இருக்க முடியாது'

கேடுகெட்ட ஆட்சியினை செய்து விட்டு நல்லவர்களை போல் நடிப்பதில் மஹிந்த ராஜபக்ச போன்று வேறு யாரும் இருக்க முடியாது என அமைச்சர் சரத் பொன்சேகா ஆவேசத்தோடு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் தொடர்பிலான இன்று -17- இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

கோடி கோடியான திருட்டில் ஈடுபட்ட மஹிந்த தற்போது நல்லாட்சி தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். இது வேடிக்கையான விடயம்.
அவரது ஆட்சியில் 100 பில்லியன் வரையிலான பணம் கொள்ளையிடப்பட்டது, அவை எங்கே போனது? என முடிந்தால் கூறுங்கள். அவை அனைத்தும் மக்களுடைய பணம்.
யுத்தம் செய்தோம் எனக் கூறுகின்றார் மஹிந்த, ஆனால் அவர் யுத்தம் செய்தது கடன் பெற்றுக் கொண்டே, 2020 வரை அவர் யுத்தத்திற்கு பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அவருடைய சொந்தப்பணத்தில் யுத்தம் செய்தவரைப்போல் மார் தட்டிக் கொள்கின்றார்.
தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணம் மற்றும் துறைமுகங்களில் கொள்ளையிட்டது போன்றவை சுமார் 1000 கோடிகளாகும். அவை எங்கே என கூறுங்கள். நாட்டையே கொள்ளையிட்டு ஆட்சி செய்து விட்டு இப்போது நல்லவர்களைப் போன்று வேடமிட்டுள்ளார்.
நாடு பூராகவும் வாள் ஒன்றினை வைத்துக்கொண்டு புதையல் தோண்டித்திரிந்தவர் மஹிந்த. அதே போல் யுத்தம் நடந்த போது வெளிநாட்டுக்கு சென்று பதுங்கிக்கொண்டவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்.
அவர் இராணுவ வீரர்களுக்கு சேர வேண்டிய 450 கோடி பணத்தை கொள்ளையிட்டவர். மற்றும் நாட்டில் தற்போது புதுப்புது குழுக்கள் உருவாக காரணமும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரே.
அவர் மூலமாகவே நாட்டில் குழப்ப நிலைகளை உருவாக்கப்பட்டு வருகின்றது. தனி இலாபத்துக்காக ஆட்சி நடத்திய வெட்கம் இல்லாதவர்களே கடந்த கால ஆட்சியாளர்கள்.
மேலும், மகாநாயக்க தேரருக்கு மதிப்பை கொடுக்க வேண்டும். இல்லாவிடின் நரகத்திற்கு போக வேண்டிய நிலை ஏற்படும் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின் போது மல்வத்து பீடத்தினை இரண்டாக பிளவு செய்வேன் என எச்சரிக்கை விடுத்ததும், அதன் மீது குண்டு போடுவேன் எனவும் தெரிவித்தது யார்? என்பதை மறந்து விட்டு மஹிந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறாக நாட்டையே அதி பாதாளத்தில் தள்ளிய திருட்டு ஆட்சியை நடத்தியவர்கள், தற்போது புத்தகங்களை வெளியிட்டு, மற்றவர்களை விமர்சித்து வருகின்றனர் எனவும் சரத் பொன்சேகா ஆக்ரோசமான பாணியில் மஹிந்த தரப்பினர் மீது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அவர் ஒரு பழைய நாடக நடிகன்.

    ஆனால் உங்களயும் நம்பமுடியாது.

    ReplyDelete

Powered by Blogger.