November 22, 2016

பள்ளிவாசல் தாக்குதல்களுக்கு பின்னால் கோத்தபய, தற்போது பிக்குகளை தூண்டுகிறார் - அரசு பாராமுகம் - சமன் ரத்னப்பிரிய

இனவாதிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு எடுத்துக்கொண்டுள்ள கருவியே இராணுவ புரட்சி சதித்திட்டமாகும். வடக்கில் தற்கொலை அங்கி கண்டெடுக்கப்பட்டமை, ஐ.எஸ் தொடர்பில் கூறப்பட்ட கருத்துக்கள், பிக்குவின் இனவாத கருத்துக்கள் போன்ற வரிசையில் தற்போது ஆட்சியை கைப்பற்ற இனவாதிகள் எடுத்துக்கொண்ட ஆயுதமே இந்த இராணுவ புரட்சி கதையாகும்.  இவ்வாறான கருத்துக்கள் கண்டிக்கத்தக்கதும் வெட்கப்படகூடியவைலயாகும் என்று    சிவில் அமைப்புக்கள  தெரிவித்துள்ளன. 

மேலும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழலை அழிக்கும் செயற்பாடு பக்கச்சார்புடையதாக காணப்படுகின்றது.   உறுதியளித்த செயற்திட்டங்களை தற்போது மீறி செயற்படுகின்றது.   இந்நிலை தொடர்ந்தால் மீண்டும் ஜனவரி எட்டாம் திகதி நிகழ்ந்த மாற்றம் ஏற்பட கூடும் எனவும் சிவில் அமைப்பினர்  எச்சரித்தனர்.

நுகேகொடவில் அமைந்துள்ள சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.  இதன்போது கருத்து தெரிவித்த சமூக நீதிக்கான அமைப்பின் இணைப்பாளர் சரத் விஜயசூரிய,  

தற்போது இனவாதத்தை பரப்பும் வகையில் பல சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான செயல்களை அரசியல்வாதிகளும் தனக்கேற்றாற்போல் அரசியல் சுய இலாபங்களுக்காக பாவித்து வருகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும். உதாரணமாக மட்டக்களப்பில் பிக்கு வெளியிட்ட இனவாத கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் மன உளை ச்சல்களை ஏற்படுத்தியுள்ளன.

நல்லாட்சி அரசாங்கம் ஜனவரி எட்டாம் திகதி ஆட்சியை  கைப்பற்றியதில் இருந்த  சிவில் அமைப்புக்களின் பங்களிப்பிளை அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் பல இந்த ஆட்சிக்காலத்திலும் மீறப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச போலி வீசா மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டாரா இல்லை. அவர் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு சுயாதீனமாக செயற்பட்டார் . அவ்வாறெனில் அவ்வாறானதொரு பலத்தை அவருக்கு யார் கொடுத்தது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரியார் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள   ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரித்தார்களா இல்லை. இவ்வாறிருக்கும் போது இந்த ஆட்சியிலும் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

இதற்கு முன்னர் இருந்த பாதுகாப்பு செயளாளர் தான் பதவியேற்கும் முதல்நாள் ஊடகவியளாளர் சந்திப்பிலேயே கோட்டபாய ராஜபக்ஷவின் விருப்பின்படியே வேலைசெய்வதாக கூறியிருந்தார். அதற்கடுத்ததாக தற்போதுள்ள பாதுகாப்பு செயளாளரும் அரசியல் இலாபத்துக்காகவே செயற்படுகின்றார்.

இனவாதத்துக்கு எதிராக செயற்படும் எத்தனையோ குழுக்கள் நாள்தோரும் தோன்றி வருகின்றன. இதற்கு எதிராக சுயாதீன தீர்மானங்களை பொலிசாரினால் ஏன் எடுக்கமுடியவில்லை. இனவாத கருத்துக்களை பரப்பும் பிக்குவாக இருக்கட்டும் அல்லது முஸ்லிம் அடிப்படைவாத கருத்துக்களை வைத்து இனவாதத்தை பரப்புபவர்களாகட்டும் நிச்சயம் அவர்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதில் எவ்விதமான பாரபட்சங்களோ அல்லது தனிப்பட்ட விருப்புக்களோ இருக்க கூடாது.

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக ஊழல் வாதிகளையும் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களையும் இணங்காண பாரிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்தும் ஊழலை ஒழிப்பதற்காக செயற்படுகிறோம் எனும் பெயரில் காலதாமதப்படுத்துவது பெரும் தவறான விடயமாகும். தொடர்ந்தும் அரசு பாராமுகமாக செயற்படுமாக இருந்தால் ஜனவரி எட்டாம் திகதி ஏற்படுத்தப்பட்ட புரட்சி மீண்டும் தோற்றம் பெறலாம்.

இதன்போது கருத்து தெரிவித்த சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய,

பல்லின் சமூகம் வாழும் நாடு என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது. மறைந்த சோபித தேரர் புதிய அரசியலமைப்பு  தொடர்பிலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் அவசியம் குறித்தும்   தெளிவாக வலியுறுத்தியிருந்தார். இரத்தக்கரை படிந்த சமூகத்தில் இன்னொரு முறை இரத்த ஆறு ஓடுவதற்கான களத்தை யாரும் ஏற்படுத்திவிட கூடாது.  அதற்கான சந்தர்ப்பத்தையும் யாரும் ஏற்படுத்தி விட கூடாது.

மட்டக்களப்பில் பௌத்த பிக்கு நடந்துக்கொண்ட விதத்திலிருந்து அவர் எவ்வாறு பெளத்த தர்மத்தை பாதுகாக்க முடியும் என்பது தெரியவில்லை. அவரால் மக்களுக்கு நன்மைதர கூடிய வகையில் செயற்பட முடியாது என்பதுவும் தெளிவான உண்மை. இதுபோன்றதொரு சூழ்நிலையை கண்டியிலும் பல பிக்குகளைகொண்டு இனவாதம் பரப்புகின்றனர். 

கடந்த காலங்களில் இடம்பெற்ற பள்ளிவாசல் தாக்குதல்களுக்கு பின்னால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இருந்தார்  என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தற்போது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு  பிக்குகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது மிகவும் நகைப்புக்குறிய விடயமாகும். இது தொடர்பில் பொலிஸும் அரசாங்கமும் பாராமுகமாக இருக்கின்றது. எனவே இந்த நிலை மேலும் வழுவடைய இந்த அரசாங்கம் காரணமாகிவிடகூடாது.

இராணுவ புரட்சி

பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின்போது மீண்டும் இராணுவ புரட்சியயொன்று ஏற்படுவதற்கான சூழல் உள்ளது என குறிப்பிட்டிருந்தார். 

இவரது கூற்றின் மூலம் குற்றம் இழைத்தவர்களை பாதுகாக்க சொல்கின்றாரா அல்லது ஊழல் செய்தவர்களை விசாரணை செய்ய வேண்டாம் என கூறுகின்றார்களா என்பது தெரியவில்லை. இராணுவத்தின் பலமும் நற்பெயரும் இவர்கள் போன்றவர்களினாலேயே வீணாக்கப்படுகின்றது. இராணுவத்தின் சிறப்பு நம் அனைவருக்கும் தெரியும். எனவே அவரின் கருத்துக்களுக்கு நாம் ஒருபோதும் இடம்தரமுடியாது.இராணுவத்தை குழப்பி அல்லது இராணுவத்தை  கையகப்படுத்தி ஆட்சியை கைப்பற்றலாம் என்பது மிகவும் வேடிக்கையான விடயமாகும். 

ஐ. எஸ் தரவுகள் 

அத்தோடு நீதியமைச்சர் ஐ.எஸ் தொடர்பில் கூறியிருந்த தரவுகள் மிகவும் பழைய தரவுகள். அவர்களின் தற்போதய நகர்வுகள் எவ்வாறுள்ளன என்பதை அறியாது கூறிய கருத்துக்கள் அவரின் பொறுப்பின்மையை காட்டுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

கேள்வி: நாட்டில் இனவாத கருத்துக்கள் பரப்பப்படுகின்றன இந்நிலையில் நீங்கள் ஆட்சி மாற்றத்துக்கு உதவியவர்கள் என்ற வகையில் மீண்டும் மக்கள் மத்தியில் மக்களே தீர்மானிக்க வேண்டும் என இந்த விடயத்தை மக்கள் மீது கொண்டு செல்வது சரியா?

பதில்: நாம் எப்போதும் மக்களுக்காகவே செயற்படுகிறோம். நாட்டில் நடைபெறும் அனைத்து ஊழல்களின்போதும் நாம் தட்டிக்கேட்டுள்ளோம். மத்திய வங்கி பிணைமுறி விடயமாகட்டும், மீண்டும் அர்ஜூன மகேந்திரனுக்கு மத்திய  வங்கியில் பொறுப்பு கொடுக்க முயற்சித்தபோதும் முன்னாள் பாதுகாப்பு செயளாளர் பதவி விலகலின்போதும் நாமே அழுத்தம் கொடுத்தோம். எனவே தற்போது அரசாங்கத்தின் தாமத செயற்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டுகின்றோம். இது தொடர்பில் அரசியல் தலைமைகளுடன்   கார சாரமான கருத்துக்களை தெரிவித்திருந்தோம். எனவே மக்களுக்காக செயற்பட வேண்டும் என்பதே எமது நோக்காகும்.

கேள்வி: நாட்டில் தற்போது சுலபமாக சூட்டு சம்பவங்களும் கொலை கொள்ளைகளும் இடம்பெறுகின்றனவே இது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தீர்ளா?

பதில்:நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல பொலிசாரும் அரசாங்கமும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பின்வாங்குகின்றனர். . எனவே பாதுகாப்பு செயலாளர் தனது பொறுப்பிலிருந்து விலகி செயற்படுவதாக நாம் பலமுறை அறிவித்திருந்தோம். எனவே அவரை தொடர்ந்து ஏன் பதவியில் வைத்திருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அரசாங்கம் மௌனமாக செயற்படுவது பெரும் விபரீதத்தை ஏற்படுத்தும்.

0 கருத்துரைகள்:

Post a Comment