Header Ads



தாயின் வயிற்றில் இருந்து குழந்தை, வெளிவந்ததும் அழும் முதல் அழுகை

தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவந்ததும் அழும் முதல் அழுகையை மருத்துவத்தில் Good sign என்பார்கள். வயிற்றில் இருந்தவரை தொப்புள் கொடி மூலமாகவே ஆக்சிஜன் தேவைகளை எடுத்து வந்த குழந்தை, வெளியுலகத்துக்கு வந்த பின் முதன்முறையாக தானே சுவாசிக்க ஆரம்பிக்கும். அப்போது செயல்படத் துவங்கும் அதன் நுரையீரலின் சங்கிலித் தொடர் நிகழ்வுதான் குழந்தையின் அழுகை. எனவே, பிறந்த உடன் குழந்தை குரலெடுத்து அழுதால்தான் சுவாசம் ஆரோக்கியமானதாக இருக்கிறது என்று அர்த்தம். இந்த சுவாசப் பிரச்னை குறித்து குழந்தைகள் நல மருத்துவர் ஜெயக்குமார் ரெட்டியிடம் பேசினோம்.

‘‘பிறந்த குழந்தையின் சுவாச நோய் பிரச்னையை சுருக்கமாக RDS (Respiratory Distress Syndrome) சுவாச நோய்க்குறி என குறிப்பிடுவோம். குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கே இந்தப் பிரச்னை அதிகமாக வருகிறது. பிறவி நிமோனியா என்கிற நுரையீரலில் நோய்த்தொற்று காரணமாக நிறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த சுவாசப் பிரச்னை வரக்கூடும். சில குழந்தைகளுக்கு மூச்சுக்குழாயும் உணவுக்குழாயும் அரிதாக இணைந்திருக்கும். சில குழந்தைகளுக்கு வயிற்றுப்பகுதியில் இருக்க வேண்டிய குடல் உறுப்புகள் நெஞ்சுப் பகுதியில் அமைந்திருக்கும். 

இதுபோன்ற குழந்தைகளுக்கும் மூச்சுத் திணறல் வரலாம். பிறக்கும்போதே இதயக் கோளாறு இருக்கும் குழந்தைகளுக்கும் சுவாசத்திணறல் இருக்கலாம்’’ என்கிற டாக்டர் ஜே.கே.ரெட்டி, இதற்கான அறிகுறிகளை விளக்குகிறார்.‘‘இவ்வாறு பிறக்கும்  குழந்தைகள் சாதாரணமாக மூச்சு விடாமல் அதிவேகமாக சுவாசிக்கும். அவர்களின் இதயம் அதீதமாகத்  துடிப்பதுடன், சருமம் மற்றும் சளி சவ்வுகள் நீல நிறமாக மாறும். மூச்சு விடும்போது நெஞ்சுத்தசை உள்ளிழுத்தல் போன்ற அசாதாரண சுவாச நிலை காணப்படும். 

உடனடியாக மருத்துவர்களிடம் காண்பித்து,  ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளைச் செய்து உடனடியாக சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும்’’என்கிறார் அவர். ‘‘குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரலில் சா்ஃபக்டன்ட் என்கிற திரவம் சுரக்கப்படாததே இதற்கு காரணம். இத்தகைய குழந்தைகளுக்கு சர்ஃபக்டன்டை (surfactant)  டியூப் மூலம் நுரையீரலுக்குள் செலுத்துவதன் மூலம் சுவாசம் சுலபமாகும். இதன் பிறகு தொடர்ந்து நேரிடையாக காற்றுப்பாதை அழுத்தம் CPAP என்ற சிகிச்சை தேவைப்படலாம். 

சில குழந்தைகளை வென்டிலேட்டரிலும் வைக்க வேண்டி வரலாம். இது பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்தது. பச்சிளங் குழந்தைகளின் சுவாசப்பிரச்னைகளில் தேர்ச்சி பெற்ற மருத்துவக் குழுவினரால் சிசிச்சை அளிக்கப்பட வேண்டும். மூச்சுத் திணறல் உள்ள குழந்தைகளுக்கு தாயால் பாலூட்ட முடியாது. ட்ரிப்ஸ் வழியாகத்தான் உணவு (குளுக்கோஸ்) கொடுக்க முடியும். பக்க விளைவைத் தவிர்க்க இச்சிகிச்சையை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து நேரிடையாக காற்றுப்பாதை அழுத்த CPAP சிகிச்சையின் மூலம் வென்டிலேட்டரின் பயன்பாட்டைப் பல குழந்தைகளுக்குத் தவிர்க்கலாம். 

இதன் மூலம் காற்று மூக்கிற்குள் செலுத்தப்பட்டு காற்றுப்பாதை திறந்திருக்குமாறு வைக்கப்படுகிறது. இதிலும் சரியாகவில்லை என்றால், வென்டிலேட்டரில் வைப்பதுதான் இறுதி கட்ட நிலையாக இருக்கும். சரியான ஆன்டிபயாடிக் கொடுப்பதன் மூலம் இதனை சரிசெய்ய முடியும். பிறவி நிமோனியா என்கிற நுரையீரல் தொற்றுநோயை சரியான ஆன்டிபயாடிக் கொடுப்பதன் மூலம் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும்’’என நம்பிக்கையூட்டுகிறார் டாக்டர் ஜே.கே.ரெட்டி.

No comments

Powered by Blogger.