November 12, 2016

சீன – சிறிலங்கா உறவுகளுக்குள், என்ன நடக்கிறது..?

சிறிலங்காவின் அரசியல் வரலாற்றின் பிரகாரம், சீனா மற்றும் சிறிலங்காவின் உறவு மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுகிறது. எனினும், 1952-2014 வரையான ஆறு பத்தாண்டு கால சீன-சிறிலங்கா உறவு நிலையானது மேலும் நெருக்கமானதாகக் காணப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அண்மையில் சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் மற்றும் சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு இடையிலான சூடான வார்த்தைப் பிரயோகங்கள் இந்த உறவில் மேலும் சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் ராஜபக்சவின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா மீது  சீனா அதீத செல்வாக்கைச் செலுத்தியிருந்தது. இதன் காரணமாக தற்போதைய அரசாங்கமானது பாரிய நிதி நெருக்கடிக்கு முகங் கொடுத்துள்ளது. சீன ஆயுதங்களைக் கொண்டு தமிழ்ப் புலிகளுடன் யுத்தம் புரிந்த ராஜபக்ச அரசாங்கம் போருக்குப் பின்னான அபிவிருத்தித் திட்டங்களுக்காக 15.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்டது. ராஜபக்ச அரசாங்கம் மீது மேற்குலக நாடுகளால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது தன்னை அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ராஜபக்ச சீனாவின் உதவியைப் பெரிதும் நாடினார். இதனை சீனா சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.

ராஜபக்சவின் இந்தச் செயலால் சீன நிறுவனங்கள் சிறிலங்காவில் தமது திட்டங்களை மேற்கொண்டன. ராஜபக்சவும் சீன வங்கிகளிடமிருந்து உயர் வட்டி வீதத்தில் கடன்களைப் பெற்றுக் கொண்டார். ஆனால் சிறிலங்காவின் சில அரசியல்தரப்பினர் ராஜபக்சவின் சீன நிதித் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு வினாக்களை வினவினர். போருக்குப் பின்னர் ராஜபக்சவால் அதிகாரத்துவ மற்றும் ஊழல் மோசடி மிக்க ஆட்சி மேற்கொள்ளப்பட்டதால் சீனாவிற்கு எதிரான சிறிலங்கா வாழ் அரசியற் சமூகமானது ராஜபக்சவின் ஆட்சியை எதிர்க்கத் தொடங்கியது. இதன்விளைவாக ராஜபக்ச அரசாங்கத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான நிதித் திட்டங்களில் ஏற்பட்ட பல்வேறு மோசடிகள் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பல மில்லியன் டொலர் திட்டங்கள் எந்தவொரு ஏலங்களுமின்றி ராஜபக்ச அரசாங்கத்தால் சீனாவிடம் கையளிக்கப்பட்டன. இந்நிலையில், ஜனவரி 08, 2015 அன்று இடம்பெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்ச தோல்வியடைந்ததுடன் சீன –சிறிலங்கா உறவு நிலையும் ஆட்டம் காணத் தொடங்கியது. இத்தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட கூட்டு எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். சிறிசேனவிற்கு ஆதரவான ஐக்கிய தேசியக் கட்சி 2015 யூலை மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது.

அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் முதற்கட்டமாக சீனத் திட்டங்கள் சில இடைநிறுத்தப்பட்டன. இது சீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது சீன அதிபர் ஷி ஜின்பிங்கால் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களே ஆகியிருந்தன. சீனத் திட்டங்கள் அனைத்தும் சிறிலங்கா அரசாங்க முகவர்கள், அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தால் சரிபார்க்கப்பட்டே அனுமதியளிக்கப்பட்டதாக சீனா தெரிவித்தது.

தன் மீதான ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டை சீனா ஏற்கமறுத்தது. உடன்படிக்கைகளுக்கு மாறாக சிறிலங்கா அரசாங்கம் செயற்பட்டால் அது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் சிறிலங்காவின் நற்பெயருக்குக் களங்கத்தையே ஏற்படுத்தும் என சீனா எச்சரித்தது. ஆனால் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் இதனைக் கருத்திற் கொள்ளவில்லை. நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக சீனாவால் வழங்கப்பட்ட கடனானது அனைத்துலக ரீதியில் கைக்கொள்ளும் செலவீனத்தை விட 55 சதவீதம் அதிகமானதாகும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் வல்லுனரும் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான அமல் எஸ். குமாரகே தெரிவித்திருந்தார்.

அனைத்துலக ரீதியாக நோக்கில், ஒரு கிலோ மீற்றர் நெடுஞ்சாலைப் புனரமைப்பிற்கு இந்தச் செலவானது 7 மில்லியன் அமெரிக்க டொலர் தொடக்கம் 10 மில்லியன் வரை மட்டுமே காணப்பட வேண்டும். ஆனால் சிறிலங்காவின் விடயத்தில், இந்தச் செலவானது 55 சதவீதம் தொடக்கம் 135 சதவீதம் வரை அதிகரித்திருந்தது. இது இந்தியாவால் ஏற்படுத்தப்படும் செலவீனத்தை விட 5 தொடக்கம் 10 மடங்குகள் அதிகமானதாகும். புறச்சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு ஒரு கிலோமீற்றருக்கு 56 மில்லியன் டொலர் செலவு ஏற்படுவதாகவும் சீனாவால் அமைக்கப்பட்ட கடுவெல-கடவத்த புறச்சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலைக்கு ஒரு கிலோமீற்றர் புனரமைப்பதற்கு 43 மில்லியன் டொலர் செலவிடப்பட்டதாகவும் ஆனால் யப்பான் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணைந்து மேற்கொண்ட கொற்றாவ-கடுவெல புறச்சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு இந்தத் தொகையின் மூன்றில் ஒரு பகுதியே செலவிடப்பட்டதாகவும் பொருளியலாளரும் பிரதி நிதி அமைச்சருமான கலாநிதி ஹர்ச  டீ சில்வா சுட்டிக்காட்டினார்.

சீனக் கடன் வட்டியானது மிகவும் அதிகமானதாகும். சீனக் கடன்களின் பெரும் பகுதியானது 2 சதவீதக் கடனிற்கே வழங்கப்பட்டதாகவும் ஆனால் சிறிலங்கா இதனை ஆறு சதவீதத்திற்கு அதிகரிக்க வழிவகுத்ததாகவும் சீனத் தூதுவர் ஜி சியான்லிங்க் சுட்டிக்காட்டினார். ஆனால் சீனாவின் 2 சதவீதக் கடன் கூட அதிகம் எனவும் யப்பான் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியால் 0.1 தொடக்கம் 1 சதவீத வட்டி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் சில்வா தெரிவித்தார். களனிப் பாலத்தை அமைப்பதற்கான 342.8 மில்லியன் டொலர் நிதியானது யப்பானிடமிருந்து 0.1 சதவீத வட்டிக்கே பெறப்பட்டது. இந்தக் கடனானது 10 ஆண்டு சலுகைக் காலத்தின் அடிப்படையில் 40 ஆண்டுகளில் மீளச் செலுத்தப்பட வேண்டும்.

புறச்சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலைக்காக சீனாவிடமிருந்து பெறப்பட்ட 520 மில்லியன் டொலர் கடனானது 2 சதவீதம் வட்டியுடனும் சேவைக் கட்டணமாக மேலதிகமாக 0.25 சதவீத வட்டியுடனும் வழங்கப்பட்டது. அம்பாந்தோட்டை வீதிப் புனரமைப்பிற்கான 100 மில்லியன் டொலர் பெறுமதியான கடனானது சீனாவிடமிருந்து 3.5 சதவீத வட்டிக்கே பெறப்பட்டது. அம்பாந்தோட்டை முதற் கட்ட அபிவிருத்திக்காகப் பெறப்பட்ட 350 மில்லியன் டொலர் கடன் 2 சதவீத வட்டிக்கு சீனாவால் வழங்கப்பட்டது. ஆனால் இந்த வட்டி வீதமானது பின்னர் 6.3 சதவீதம் வரை அதிகரித்தது. இதன் இரண்டாம் கட்டத் திட்டத்திற்காகப் பெறப்பட்ட 808 மில்லியன் டொலர் கடனானது தவணை அடிப்படையில் 2-4 சதவீத வட்டியுடன் பெறப்பட்டது.

எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறாத அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்காக வழங்கப்பட்ட 1.5 பில்லியன் டொலர் கடன் மற்றும் செயற்பாடுகளற்ற மத்தல விமானநிலையத்திற்காகப் பெறப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலரை வட்டியில்லாக் கடனாக மாற்றுவது தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக பிரதமர் விக்கிரமசிங்க இரண்டு தடவைகள் சீனாவிற்குப் பயணம் செய்திருந்தார். இத்தொகையில் எண்பது சதவீதத்தை வட்டியில்லாக் கடனாக மாற்றுவதற்கு சீனா உடன்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஆனால் இதனை சீனத் தூதுவர் ஜி மறுத்ததுடன் இது தொடர்பான பேச்சுக்கள் தற்போதும் இடம்பெறுவதாகத் தெரிவித்தார். வினைத்திறனற்ற மற்றும் ஊழல் மோசடி மிக்க சிறிலங்காவின் பொதுத்துறை நிறுவகங்களுடன் சீன நிறுவனங்கள் பணியாற்றுவதற்கு சீனக் கொள்கை வகுப்பாளர்கள் விரும்பவில்லை. தற்போதைய ஏற்பாடுகளின் அடிப்படையில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் நான்கு கடற்படுக்கைகளை உருவாக்குவதற்கு விரும்பலாம். சீனா ஏற்கனவே இலாபம் தரக்கூடிய கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு கொள்கலன் முனையத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கமானது தொழில் பண்பற்றவர்கள் என சீனா குற்றம் சுமத்தி வருகிறது. அம்பாந்தோட்டை தொடர்பாகவும் சீனாவின் பேராசை தொடர்பாகவும் அமைச்சர் கருணாநாயக்க கருத்துத் தெரிவித்ததை எதிர்த்து அண்மையில் தூதுவர் யி சிறிலங்கா தொடர்பாக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

ஐரோப்பிய நாடுகள் 5 சதவீத வட்டியுடன் கடன் கொடுப்பதாகவும் ஆனால் சீனாவால் இரண்டு சதவீத வட்டிக்கே கடன் வழங்கப்படுவதாகவும் யி தொடர்ந்தும் கூறிவருகிறார். சீனாவால் ஆறு சதவீதக் கடன் வட்டி பெறப்பட்டால் ஏன் சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் மீண்டும் கடன் கேட்கிறது என சீனத் தூதுவர் வினா எழுப்பியிருந்தார். இலங்கையர்கள் வினைத்திறனற்றவர்கள் மற்றும் சோம்பேறிகள் எனவும் ஏற்கனவே சீனாவால் சிறிலங்காவிற்கு 15.5 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ள போதிலும் இலங்கையர்கள் நன்றிமறந்தவர்களாக உள்ளதாகவும் சீனத் தூதுவர் குற்றம் சுமத்தியிருந்தார். ‘சீனா இரண்டு சதவீத வட்டிக்கே கடன் வழங்கியிருந்தால் நாங்கள் இரண்டு சதவீத வட்டிக்கே மீளவும் கடனைச் செலுத்துவோம். இது எமக்கு நல்லதல்லவா?’ என கருணாநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

வழிமூலம்       – New Indian express ஆங்கிலத்தில்  – P.K.Balachandran மொழியாக்கம் – நித்தியபாரதி

1 கருத்துரைகள்:

Lending money for interest is a chronic curse for people. Allah never offer progress in such type of transaction.
Whoever does the bottom-line would be destruction.

Post a Comment