November 28, 2016

முஸ்லிம்களுக்கு எதிராக பூதங்கள், எம்மீது மிகப்பெரும் பாய்ச்சல் நடக்கிறது என்கிறார் ஹக்கீம்

(அஸ்லம் எஸ்.மௌலானா

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கிளம்பியுள்ள பூதங்களை அடக்குவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் நாம் மிகவும் இறுக்கமாக பேசி வருகின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூட்டிணைந்து செயற்படுவதற்காக ஜம்மியத்துல் உலமா, சூரா சபை உட்பட புத்திஜீவிகளும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.     

இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவின் இரண்டாம் நாள் இறுதி நிகழ்வாக மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதி தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற 'நான் எனும் நீ" நூலின் மீள் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு மேலும் தெரிவிக்கையில்;

"சில தினங்களுக்கு முன்னர் ஒரு ஆங்கில பத்திரிகையில், முஸ்லிம்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அதனை மறுதலித்து நான் ஒரு கட்டுரையை தயார் செய்து கொண்டிருக்கின்றேன். ஏனெனில் இப்படி பகிரங்கமாக, பாரதூரமாக, மிகவும் கேவலமாக எழுதுகின்ற கட்டுரையாளர்களுக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டியுள்ளது.

அண்மையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் இடம்பெற்ற ஒரு சந்திப்பின்போது முஸ்லிம்களுக்கு எதிரான இத்தகைய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளோம். இவற்றின் பின்னால் இருந்து செயற்படுத்துகின்ற சக்திகள் யார்? அவர்களது பின்புலம் என்ன? என்பவை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் மிகவும் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தனர். அதன் மூலம் அக்குழுக்கள் யார் என இனம்காணப்பட்டுள்ளன. அப்போது நாமும் எமது கருத்துக்களை வெளிப்படையாக எடுத்துரைத்தோம். ஆனால் எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியாத சூழலும் இருக்கிறது. எவ்வாறாயினும் எழுத்து மூலமோ நாடாளுமன்றத்திலோ அவற்றை பதிவு செய்ய எண்ணியுள்ளேன். 

அது மாத்திரமல்லாமல் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கிளம்பியுள்ள பூதங்களை அடக்குவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் நாம் மிகவும் இறுக்கமாக பேசி வருகின்றோம். கடந்த ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியிலும் இது போனறு புரளிகளும் பூதங்களும் கிளம்பியபோது நான் அமைச்சராக இருந்து கொன்டே மிகவும் துணிச்சலுடன் அப்பிரச்சினைகளை சர்வதேச சமூகத்திடம் கொண்டு சென்றிருந்தோம். அது ஜெனீவா பிரேரணையில் மாற்றம் செய்கின்ற அளவுக்கு வெற்றியைக் கொடுத்திருந்தது.

இப்போது முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகளுக்கு நாம் எதிர் நடவடிக்கைகளை செய்ய முற்படுகின்றபோது அதனை சகித்துக் கொள்ள முடியாமல் மிகப்பெரும் பாய்ச்சல் எம்மீது நடக்கிறது. ஆகையினால் இப்போதைய நிலைவரத்தில் தூரநோக்கு, பக்குவம், சாணக்கியம் போன்றவற்றுடன் தீர்வுகளைத் தேட வேண்டியுள்ளது.

அதற்கு முன்னோடியாக எமக்குள் தெளிவான கலந்துரையாடலும் ஒற்றுமையும் அவசியமாகும். அதற்கான வழிகாட்டல்களை ஜம்மியத்துல் உலமா, சூரா சபை உள்ளிட்ட சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒன்றிணைத்து செயற்பட வைப்பதற்காக அவர்கள் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அன்று அஷ்ரப் எனும் ஆளுமை மீது கொண்டிருந்த காழ்ப்புணர்வு காரணமாக அவரை ஒடுக்குவதற்கே முனைப்புக் காட்டப்பட்டது. இன்று முழுமையாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது நடத்தப்படுகின்ற பாய்ச்சலாக அது பரிணாம மாற்றம் பெறுகின்ற நிலைக்கு வந்துள்ளது. ஆகையினால் கடந்த கால படிப்பினைகளை வைத்து, தூர நோக்கு சிந்தனையுடன் மிகவும் பக்குவமாக பிரச்சனைகளை அணுக வேண்டியுள்ளது" என்றார்.

4 கருத்துரைகள்:

Mr. Rauff! Nothing different as usually....... SL Muslims wake up .

எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு

But neenga SLTJ ku appattamana poyyaana eattukkolla mudiyaatha purattugalaiyum...evano solluvatharkellam thalaya aattikittu porathum sariyaaa saanakkiyame...!

பக்குவம்,சாணக்கியம்,தூரநோக்கு என்ற வார்த்தை ஜாலங்கள் மாத்திரமே ஹக்கீமிடமுண்டு ஆக்கபூர்வமான எந்தசெயற்பாடுமே அவரிடமில்லை என்பதே உண்மை.

Post a Comment