November 22, 2016

மாவீரன் எம்.எம். மன்சூர்

-எம்.எஸ்.எம். ஜான்ஸின்-

யாழ் முஸ்லிம்களின் விளையாட்டுத் துறையில் பலரும் பலவிதமான சாதனைகளை புரிந்துள்ளனர். ஆனால் அவர்களில் சிலரே மக்கள் மனதில் வாழ்கின்றனர். அவ்வாறு மக்கள் மனதில் நிற்கின்ற வாழ்ந்து கொண்டிருக்கின்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர் தான் மன்சூர் அவர்கள். அன்னார் இறந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் அவருடைய பிரிவை யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகத்தால் மீள்நிரப்ப முடியவில்லை.

அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு  வயதிருக்கும். விறுவிறுப்பான ஒரு உதைப் பந்தாட்டப் போட்டியை ஜின்னா மைதானத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பந்துக்காக வீரர்கள் இருவர் போட்டி போடுக் கொண்டு வந்து முட்டி மோதினர். அவர்களில் கருத்த உருவம் கொண்ட சுருட்டை முடி கொண்ட வீரர் இறுதியில் பந்தை தன்வசமாக்கி கோலை நோக்கி அடித்தார். எதிரணி வீரர் முட்டியதால் அவர் நிலை தடுமாறி மைதானத்தின் வெளியே வந்து என்னை மிதித்து விட்டார். அப்போது ஆணிச் சப்பாத்து போடும் காலம். எனது மேல்பாதத்தில் சில கிழிசல் காயங்களை அவை விட்டுச் சென்றன. எழுந்த வீரர் என்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்று விளையாட்டைத் தொடர்ந்தார்.   ஆட்டம் முடிந்ததும் மீண்டும் வெளியே வந்து என்னைக் கண்டு எனது கால்களை தடவிவிட்டு மீண்டும் மன்னிப்புக் கேட்டுச் சென்றார். அந்த வீரரின் பெயர் அப்போது எனக்குத் தெரியாது. ஆனால் அவரின் முகச் சாயல் அப்படியே பதிவாகி இருந்தது. எனது காலில் மறையாத ஒரு வடுவை ஏற்படுத்தியதுடன் மன்னிப்புக் கேட்டதினூடாக எனது நினைவிலும் பதிவானார். 

அந்த முகம் நான் அடிக்கடி காணும் முகம் தான். சில வருடங்களின் பின்னரே அந்த நன்மனிதர் மன்சூர் காக்கா என்பதை அறிந்து கொண்டேன்.  என்னைக் காயப் படுத்டியதாலோ என்னவோ என்னைக் கண்டால் சுகம் விசாரித்து விட்டு புன்முறுவல் பூத்துவிட்டே செல்வார். இவ்வாறு தான் மன்சூரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அந்த மனிதர் தான் பின்னாலில் என்னையும் ஊரறியச்  செய்யப் போகின்றார் என்பதை நான் அப்போது நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.  அவரின் சாதனைகள் ஏராளம். யாழ் முஸ்லிம் அணியின் செயலாளராக 29 வருடங்கள் செயற்பட்டு அணியை திறம்பட வழிநடத்தியவர் அவர். 

சிறு வயதிலிருந்தே உதைப் பந்தாட்டம் உட்பட ஓட்டப் போட்டிகளில் பங்கு பற்றும் மன்சூர் அவர்கள் 1970 களில் மர்ஹூம் ராசதுறை ( எஸ்.எச்.தாஹிர்) அவர்கள் நடத்திய டைகர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்காக விளையாடினார். 1976 இல் அதிலிருந்து பிரிந்து சென்று சன்ரைஸ் எனும் உதைப்பந்தாட்ட அணியை உருவாக்கினார். அக்காலத்தில் காணப்பட்ட முப்பெரும் கழகங்களில் ஒன்றாக சன்ரைஸ் அணியை  உருவாக்குமளவுக்கு அவரது அர்ப்பணிப்பும் திறமையும்  காணப் பட்டது. 

1978 முதல் கழகங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் நிலமைகள் வீரர்கள் பலரை விளையாட்டை விட்டு ஒதுங்கச் செய்தது. இதனால் யாழ்ப்பாண முஸ்லிம்களின் கழகங்கள் எல்லாம் தொடர் தோல்விகளைச் சந்தித்தன. இந்தத் தோல்விகளை கண்டு மனம் பொறுக்க முடியாமல் மர்ஹூம்களான ஹாமீம் மாஸ்டர், மக்பூல் ஜீ.ஏ போன்றவர்கள் துரையப்பா ஸ்டெடியத்தில் வைத்து அழுதுவிட்டு ஒரு தீர்மானத்துக்கு வந்தனர். இதனூடாக 1979 ஆம் ஆண்டு  டைகர்ஸ், சம்சுன் மற்றும் சன்ரைஸ் போன்ற மூன்று கழகங்களும் ஒன்றினைக்கப் பட்டு யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகம் உருவாக்கப் பட்டது. 

இந்த ஒன்றினைப்பின் பிரதி பலனாக 1979 ஆம் ஆண்டே யாழ் முஸ்லிம் அணி யாழ் மாவட்ட சம்பியனாக பரிணாமம் பெற்றது. அப்போது முதல் மரணிக்கும் வரை கழகத்தின் செயலாளராக செயற்பட்டவர் மர்ஹூம் மன்சூர் அவர்கள். 

 1980களில் வீரர்கள் பலர் வெளிநாடு சென்றதனால் கழகம் பாரிய பின்னடைவைச் சந்தித்தது. இவ்வாறான கால் கட்டத்தில் எம். எஸ். அனீஸ், ஏ. சஹீத்,  மர்ஹும் நகீப், எம்.ஏ.சி. ஆஸாத் , நௌபான் போன்ற வீரர்களை யாழ் முஸ்லிம் அணியில் அறிமுகப் படுத்தி விளையாட்டுக்களை தொடர்ந்தார். 1985 ஆம் ஆண்டு யாழ் ஒஸ்மானியாவின் இரண்டாம் பிரிவு யாழ் மாவட்ட சம்பியனான போது அவர்களை  மன்சூரும் ஜேமீலும் (பிரான்ஸ்) சேர்ந்து ரொலெக்ஸுக்கு அழைத்துச் சென்று விருந்துபசாரம் ஒன்றை வழங்கியிருந்தார்கள். இவ்வாறு இளவயது வீரர்களை பாராட்டும் பண்பு மன்சூரிடமும் ஜமீலிடமும் காணப்பட்டது. 

1985 ஆம் ஆண்டு யாழ் முஸ்லிம் அணியிலிருந்து இரண்டு பேர் விலகிச் சென்று யாழ் முஸ்லிம் பிரன்ட்ஸ் விளையாட்டுக் கழகம் என்ற பெயரில் கழகமொன்றை உருவாக்கியதனால் யாழ் முஸ்லிம் அணி வீரர் தட்டுப் பாட்டை எதிர் நோக்கியது. 1985 இல் இஹ்திஸாம், நௌசாத் (பிரான்ஸ்), ஹிபதுல்லாஹ் போன்றோருடன் என்னையும் யாழ் முஸ்லிம் கழகத்தின்   உதைப் பந்தாட்டக் குழுவில் சேர்த்தவர் அவரே. இந்த அணி வெற்றிகளை அள்ளிக் குவிக்கத் தொடங்கியதால் பிரிந்து சென்றவர்கள் 1986 ஆம் ஆண்டு மீண்டும் யாழ் முஸ்லிம் அணியுடன் இனைந்து கொண்டனர்.

1987 ஆம் ஆண்டு தூய ஒளிக் கிண்ணம் யாழ் முஸ்லிம் அணியால் கைப்பற்றப் பட்டது. 1987 முதல் 1990 வரை யாழ் பிரதேச சபைக் கிண்ணத்தை யாழ் முஸ்லிம் அணியே சுவீகரித்தது. 1987 இல் ஜாபிர், நசூர் , அஸ்கர் (பிரான்ஸ்), ரியாஸ் (கீப்பர்), நௌபீல்( கீப்பர்) போன்றவர்களை கழகத்துக்கு அறிமுகப் படுத்தினார். 1988 ஆம் ஆண்டு சித்தீக், யகீன் , ஹாரிஸ் போன்றவர்களையும் அறிமுகப் படுத்தினார். 1988, 1989 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் யாழ் முஸ்லிம் அணி யாழ்ப்பாணத்தில் பல கிண்ணங்களை சுவீகரித்திருந்தது. இவ்வாறான போட்டிகளில் பங்குபற்றுவதற்காக அணியை பதிவு செய்தல் வீரர்களை தெரிவு செய்தல் போன்ற பல்வேறு பணிகளில் முஸாதீக் மாஸ்டர், நஸார், அமீன்  ஆகியோருடன் ஈடுபட்டார். வீரர்களைத் தெரிவு செய்யும் போது முஸாதீக் மாஸ்டர் மற்றும் மன்சூர் ஆகியோர் எனது ஆலோசனைப் பிரகாரமே முன்னனி மற்றும் மத்திய தர வரிசை வீரர்களை தெரிவு செய்வார்கள். இதனூடாக யாழ் முஸ்லிம் அணியின் கோல் தாக்குதல்களை எதிரணிகள் தடுக்க முடியாமல் தடுமாறும் நிலமைகள் ஏற்படுத்தப் பட்டது. 

1990 இடம் பெயர்வின் பின் குடும்பச் சுமை காரணமாக அணியிலிருந்து சில மாதங்கள் ஒதுங்கியிருந்தாலும் போட்டிகளில் தவறாது கலந்து கொண்டார்.  பின்னர் தொழிலில் தன்னை சுதாகரித்துக் கொண்ட மன்சூர் அவர்கள் தொடர்ந்து செயலாளராக செயற்பட்டார்.  இடையில் சில வருடங்கள் யாழ் முஸ்லிம் அணி புத்தளத்தில் விளையாடாத போதும் 2000 ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்க அவரே முன்னின்று பாடுபட்டார்.  அந்த சூழ்னிலையிலும் நிப்ராஜ் நிலோபர் போன்ற புதுமுக வீரர்களை அறிமுகப் படுத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.  

2008 ஆம் ஆண்டு எம். எஸ். ஆர். ராசீக் என்பவறின் ஆலோசனைக்கு அமைய வெள்ளிவிழா கொண்டாட வேண்டும் என கூறியபோது அதற்காக முன்னின்று பாடுபட்டு வெற்றிகரமாக அந்த நிகழ்ச்சியை நடத்த உதவிபுரிந்தார். அந்தக் கூட்டத்தில் புதியவர்கள் அணியை முன்னெடுக்க வேண்டும் எனக் கூறியது அடுத்த ஆறு மாதத்தில் தான் மரணமடையப் போவதை உணர்ந்து தான் கூறினாரோ என்னவோ யாழ்முஸ்லிம் அணியின் இருதயம் 2008 ஆகஸ்டில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தது. 

யா அல்லாஹ் மன்சூர் அவர்களின் பாவங்களை மன்னித்து அவருடைய கபுரிலும் நாளை மறுமையிலும் அவருக்கு ஈடேற்றத்தை கொடுப்பாயாக! ஆமீன். எமது வெற்றிகளை நிர்ணயித்து பல சாதனைகளை யாழ்ப்பாணத்திலும் புத்தளத்திலும் செய்வதற்கு சந்தர்ப்பம் அளித்த  அல்லாஹ்வுக்கே  எல்லாப் புகழும்.

0 கருத்துரைகள்:

Post a Comment