Header Ads



முஸ்லிம் வயோதிபருக்கு, காருக்குள் நடந்த பயங்கரம்

-Ashroff Shihabdeen-

ஜாவத்தைத் தெருவில் முச்சக்கர வண்டியொன்றில் நேற்று -23- மாலை 7.20 அளவில் நானும் Farveen Mohamed நாச்சியாதீவு பர்வீனும் வந்து கொண்டிருந்தோம்.

முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒரு பெரும்பான்மை இளைஞன்.

தூறல் மழை!

சிக்னலில் காத்திருந்த போது ஏறக்குறைய 20 வாகனங்கள் நின்றிருந்தன. எமது முச்சக்கர வண்டிக்கு முன்னால் ஒரு கார் நின்றிருந்தது. ஐந்து நிமிடத் தாமதத்துக்குப் பின்னர் முச்சக்கர வண்டியை எமக்கு முன்னால் நின்றிருந்த காரின் அருகே நகர்த்திய ஓட்டுனர் மூடியிருந்த கார் ஜன்னல் கண்ணாடியைத் தட்டி..

“இந்தமாதிரிச் சண்டித்தனங்களையெல்லாம் வைத்துக் கொள்ள வேண்டாம்“ என்று கத்தினான்.

பதிலுக்கு கார்க்கண்ணாடியை இறக்கி விட்ட காருக்குள்ளிருந்த ஒருவன் பதிலுக்குக் கத்தினான்.. “உனது வேலையை நீ பார்த்துக்கொண்டு போ!”

எமக்கு எதுவும் புரியவில்லை.

சண்டை வலுத்தது. முச்சக்கர வண்டிச் சாரதியின் சத்தம் உயர்ந்தது. உரத்துப் பேசப்பட்ட வார்த்தைகளிலிருந்து விடயம் மொத்தமாகப் புரியவில்லை.

காருக்குள் இருவர். சாரதி ஆசனத்திலிருந்தவரின் கழுத்தை அருகே அமர்ந்திருந்தவன் இரு கரங்களாலும் நசித்திருக்கிறான். கிட்டத்தட்ட ஒரு கொலை முயற்சி.

முச்சக்கர வண்டிச் சாரதி பொறுக்காமல் இறங்கித் தெருவில் நின்ற பொலிஸ்காரரிடம் முறையிட்டு அவரை அழைத்து வந்து விட்டு முச்சக்கர வண்டியில் ஏறினான்.

காருக்குள் எட்டிப் பார்த்தேன்.. திக் என்றது.

சாரதி ஆசனத்தில் இருந்த அந்த முதியவருக்கு அதாவது கழுத்து நெரிக்கப்பட்டவருக்கு 60 - 65 வயதிருக்கலாம். வெண்பஞ்சுத்தாடி. தலையில் தொப்பி. ஒரு முஸ்லிம்!

கழுத்தை நசித்தவன் 25 வயது மதிக்கத்தக்க இளைஞன். அநேகமாக அவரது மகனாக இருக்க வேண்டும்.

“எனக்கு எந்த இனம், மதம் என்ற கவலை கிடையாது. மனிதனை மனிதன் தாக்கக் கூடாது. இம்மாதிரி விடயங்களைக் கண்டால் இலகுவில் பார்த்து விட்டுக் கடந்து போக மாட்டேன்!“ என்று வழி நெடுகிலும் சொல்லிக் கொண்டு வந்த அந்தப் பெரும் பான்மை இளைஞன் வான்படையில் கடமையாற்றுபவன். இரவில் முச்சக்கர வண்டியோட்டுவது வழக்கம்.

இன்னும் இந்தச் சம்பவம் மனதை விட்டு அகலவில்லை.

ஒரு வேளை கழுத்து நெரிபட்டு அந்த முதியவர் மரணித்திருந்தால் இன்று காலை எங்கோ ஓரிடத்தில் அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும்.

முஸ்லிம் வயோதிபர் கொலை என்ற தகவலுடன் இன்று ஏற்பட்டிருக்கும் இனமுறுகலுடன் சம்பந்தப்படுத்தப்பட்ட, அல்லது தொடுக்கப்பட்ட செய்தி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டிருக்கலாம்.

No comments

Powered by Blogger.