November 24, 2016

முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் உருவாக்கிய, ஒரு தீவிரவாதியை காட்டுங்கள் பார்க்கலாம் - பாரளுமன்றத்தில் சவால்

இலங்கையிலுள்ள முஸ்லிம் கல்வி நிலையங்களில் உருவாக்கப்பட்ட ஒரு தீவிரவாதியையேனும் காட்டுங்கள் என  அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவிடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் எம்.பி கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் விஜயதாச  தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே பாராளுமன்றத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடந்தும் உரையாற்றுகையில், 

தேசபற்றுமிக்க இலங்கை முஸ்லிம்கள் நாட்டில் சமாதானத்தையே விரும்புகின்றனர். அதற்காவே இந்த ஆட்சிமாற்றத்துக்கும் பூரண ஆதரவை வழங்கினார் என்பதையும் நான் உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

சுமார் 4 வருட காலமாக இனவாதிகள் இட்டுக்கட்டிய விடயங்களை இந்த சபையில் நீதி அமைச்சர் அவர்கள் நியாயப்படுத்த முயற்சித்ததன் பின்னணி மர்மமானது. முஸ்லிம்களின் முக்கிய கல்வி நிறுவனங்கள் அமையப் பெற்றுள்ள பேருவலை, கல்எலியா, கல்முனை, குருநாகல் போன்ற பகுதிகளில் உல்லாச பயணி விசாவில் வெளிநாடுகளிலிருந்து கணிசமானோர் வருகை தருவோர் அடிப்படை வாதத்தைப் போதிக்கின்றனர் என்று மிகவும் மோசமான குற்றச்சாட்டாகும். இன்று இந்த அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் பல ஆயிரம் சிறந்த மேதைகளை உருவாக்கி அவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் மேம்பாட்டுக்கும் பாரிய சேவையாற்றிவருவதை பட்டியலிட்டுக் கூற முடியும். 

ஆனால் அமைச்சர் அவர்களால் அங்கு உருவாக்கப்பட்ட ஒரு தீவிரவாதியை பெயரிட முடியுமா என கேற்க விரும்புகிறேன்.  அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் குறிப்பிடுவது போல சர்வதேச பாடசாலைகளில் தீவிரவாதம் போதிக்கப்டுவதாயின் அரசு ஏன் இந்த 104 சர்வதேச பாடசாலைகளையும் தடைசெய்து விட்டு இங்கு கற்கும் 1 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்களை உடனடியான அரச பாடசாலைகளில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதில்லை? அவ்வாறு செய்வதாயின் நாம் எமது பூரண ஆதரதவை வழங்குவோம்.

உதாணமாக கொழும்பு மாவட்டத்தைப் எடுத்துக் கொண்டால் வருடாந்தம் 5,000 முஸ்லிம் மாணவர்கள் பாடசாலைக்கான புதிய அனுமதி வேண்டிநிற்கின்றனர். ஆனால் துர்பாக்கியவசமாக அவர்களில் 2,000 போ் மாத்திரமே அரச பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். ஏனையோர் அவர்களாகவே விரும்பி இந்த சர்வதேச பாடசாலைகளுக்குச் செல்லவில்லை மாறாக இவர்கள் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே சர்வதேச பாடசாலைகளுக்குச் செல்லுகின்றனர். 

பாடசாலைகளில் கற்கும் காலத்தை நீடிப்பது ஒரு புறமிருக்க ஆரம்பக் கல்வியைக் கூட கற்க பாடசாலைகள் இன்றி ஏங்கும் சிறார்களுக்கு உரிய பாடசாலைகளை நிறுவி அவர்களையும் பாடசாலைகளில் இணைப்பதை அரசு ஊக்குவிக்க வேண்டும். வளமிக்க சமூகங்களுக்கு பாடசாலை கால நீடிப்பு ஒரு முக்கியமான விடயமாக இருப்பினும் பாடசாலைகளற்ற கொழும்புப் பிரதேசத்திலும், போதிய ஆசிரியர் மற்றும் வளங்கள் அற்ற கிராமியப்புறத்திலும் இதன் சாத்தியப்பாடு பற்றி நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

கல்வி உரிமை என்பது “அனைத்துச் சமூகங்களினதும் அடிப்படை உரிமையாகும்” எனவே குக்கிராமங்கள் தொடக்கம் நகர்ப்பிரதேச சோிகள் மற்றும் கொட்டில்களில் வாழும் அனைத்துப் பிள்ளைகளினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். “சமத்துவம்” அற்ற கல்வி முறையை ஒரு பாரிய மோசடி அல்லது துரோகம் என்றே  குறிப்பிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

1 கருத்துரைகள்:

இது ஒரு அறிவு பூர்வமான பேச்சு

Post a Comment