November 15, 2016

தூசணம் சொல்லி, அடாவடி செய்யும் பௌத்த தேரரை கைதுசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதான வீதியை மறித்து இன்று(15) பட்டிப்பளை பிரதேச சிவில் அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் கருத்து வெளியிடுகையில், புத்த பிக்குவை கைது செய்ய வேண்டும் அல்லது இங்கிருந்து அகற்ற வேண்டும். இல்லையேல் இது போன்ற போராட்டங்கள் மாவட்டம் பூராகவும் வெடிக்கும்

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரெத்தின தேரரின் செயற்பாடுகளும் அட்டகாசங்களும் பல வருட காலமாக தொடர்கின்றது. அவர் மத குருவாகச் செயற்படாமல் ஏனைய இன மக்களை அடக்கி ஆளுகின்ற மதம் பிடித்த பிக்குவாகத்தான் செயற்பட்டு வருகின்றார்.
உங்களின் அப்பாவின் காணியா? அம்மாவின் காணியா? என கிராம சேவகரிடம் குறித்த புத்த பிக்கு கேட்டிருந்தார். மாறாக புத்த பிக்குவின் அப்பாவின் காணியா? அம்மாவின் காணியா? அல்லது சிங்கள இனத்தின் காணியா? என நான் புத்த பிக்குவிடம் கேட்கின்றேன். நாங்கள் வந்தேறு குடிகள் அல்ல. இந்த நாட்டில் ஆதிக் குடிகள். எனவே எங்களிடம் அப்படிக் கேட்பதற்கு என்ன அருகதை இருக்கின்றது?

குறித்த பௌத்த மத குரு 2016 ஆம் ஆண்டு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் கிராம சேவையாளர் ஒருவரை மறித்து வைத்தமை மற்றும் கடந்தவாரம் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களுடன் சட்டத்திற்கு முரணான முறையில் நடந்து கொண்டமை ஆகிய சம்பவங்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கமும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுகின்ற பொலிசாரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக நாம் இப்போது போராட்டத்தில் குதித்துள்ளோம். எனவே மத்திய அரசானது இவ்விடயத்தில் துரித கதியில் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சா.வியாளேந்திரன் கருத்து வெளியிடுகையில், குறித்த புத்த பிக்கு அரச நிருவாகத்தை முடக்கியுள்ளார். தமிழ், முஸ்லிம் மக்களை கடுமையாக அவமதித்துப் பேசியிருக்கின்றார். அடிப்பதையும் விட மன உழைச்சலை உண்டு பண்ணக் கூடிய விதத்தில் நடந்து கொண்டுள்ளார். இந்த விடயம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கிராம சேவை உத்தியோகத்தரும் பிரதேச செயலாளரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

மங்களகம பொலிஸ் பிரிவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸில் முறைப்பாடு செய்வதில் சட்ட ரீதியான சிக்கல் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் உயர் பொலிஸ் அதிகாரிகளின் பணிப்புரையின் போரில் தற்போது கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கருத்து வெளியிடுகையில், புத்த பிக்கு என்ற போர்வையில் நீண்ட காலமாக மிகவும் அராஜகமான வேலைகளை மேற்கொண்டு வருகின்றார். கடந்த காலத்தில் ஒரு மின்சார சபை ஊழியரைத் தாக்கியுள்ளார், பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்க முற்பட்டுள்ளார். நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இக்காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது விகாரைக்கு வரவில்லை என்பதற்காக விகாரையில் கட்டப்பட்டிருந்த நினைவுப் படிகத்தை அடித்து உடைத்துள்ளார்.

இலங்கையிலே தூசணம் சொல்பவர்களின் வரிசையில் குறித்த பிக்குதான் முதலாவதாக உள்ளார். எனவே இவ்வாறான செயற்பாடுகளை நாமும் வேடிக்கை பார்க்காமல் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். பொலிஸ்மா அதிபர், புத்த சாசன அமைச்சர், எதிர்க் கட்சித் தலைவர், பிரதமர், ஜனாதிபதி போன்றோருக்கு அறிவித்துள்ளோம்.

புத்த பிக்குவின் செயற்பாட்டுக்கு பொலிசார் ஒத்துழைப்பு வழங்கியதாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். அரச உத்தியோகத்தர்களுக்கு தகாத வார்த்தைப் பிரயோகம் செய்த குறித்த பிக்குவை பொலிசார் அவ்விடத்திலிருந்து கலைத்திருக்க வேண்டும். ஆனால் பொலிசார் அதனைச் செய்யவில்லை.

இதனை விட அண்மையில், பன்குடாவெளி எனுமிடத்திற்கு சென்ற இக்குறித்த புத்த பிக்கு அங்கு அரச மரம் நிற்கும் காணியைத் தருமாறு குறித்த தமிழ் மக்களிடம் கேட்டுள்ளார். அதனைத் தரமாட்டோம் என அவர்கள் மறுத்துள்ளார்கள். இவ்வாறான காடைத்தனமான இந்த புத்த பிக்குவின் செயற்பாட்டைத் தடுத்து குறித்த புத்த பிக்கு உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பட்டிப்பளைப் பிரதேச சிவில் அமைப்பு பிரதிநிதி எஸ்.பரமேஸ்வரநாதன் கருத்து வெளியிடுகையில், புத்த மத குரு புத்த மதம் பற்றியும் அதன் செயற்பாடுகளிலும் ஈடுபடாமல் அராஜக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். இவர் காணி அபகரிப்பதுவும் அராஜகங்களை விளைவிக்கவும், அடி தடிகளில் ஈடுபடுவதுமாகவே உள்ளார். இது பௌத்த மதத்திற்கே இழிவாகும்.

அவரது தோளிலே உள்ள காவிச் சால்வை எங்கே போகின்றது என்பது தெரியாமல் மது அருந்தியவர்கள் போல் செற்படுகின்றார். படுவான்கரைப் பகுதி விவசாயப் பிரதேசமாகும். ஏர் பிடித்து விவசாயம் மேற்கொள்ளும் கைகளில் ஏவுகணைகளை ஏந்துவதற்கு நல்லாட்சி அரசு தமிழினத்தைத் தள்ளக் கூடாது. எனவே குறித்த பௌத்த மத குருவின் செயற்பாடு இந்த மாவட்டத்தில் இல்லாது கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பௌத்த மத குருவின் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சாள்ஸ் உறுதி வழங்கியுள்ளதாக அந்த இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 கருத்துரைகள்:

When I watched that video, I was telling to the GS, "Man, what are you frozen and staring at him, break his face in just one shot so that he doesn't talk anymore, man!' and then I realized he did the right thing and also realized- 'He was better than me in temperament! That means Allah has created people that are better than me one way or another, Alhamdulillah!'

Well, they have atleast showed Muslims and Muslim Politicians how to take their issues to the street and protest and hopefully they get it resolved successfully.

இந்த மதகுருக்கெதிராக வழக்குப்பதிவு செய்து அதற்குரிய தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும்

Post a Comment