Header Ads



கோடிக்கணக்கு வரி செலுத்தாமல், சொகுசு வாகனங்களை இறக்குமதிசெய்த - Mp கள் இவர்கள்தான்

தீர்வை வரி இன்றி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிக்கமைய, இதுவரை 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு கூறியுள்ளார். 

இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள ஒரு வாகனத்திற்கான தீர்வை வரி மட்டும் 33.5 மில்லியன் ரூபா என அவர் கூறியுள்ளார்.  இவ்வாறு கொண்டுவரப்பட்ட வாகனங்கள் சில விற்பனை நிலையங்களில் செஸ் இலக்கங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

அரசாங்கத்தின் வரிக் கொள்கையை மீறி இவ்வாறு வாகனங்கள் கொண்டுவரப்படுவதனால், அரசாங்கத்திற்கு ஆண்டொன்றுக்கு 40 பில்லியன் ரூபாவை இழக்க நேரிடுவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்த நவம்பர் 20ம் திகதி வரவு செலவு திட்ட உரையின் போது கூறியிருந்த போதிலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளதாகவும், முன்னர் போன்ற இந்நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தீர்வை வரி செலுத்தாமல் வரப்பிரசாதங்களை பயன்படுத்தி வகனங்களை கொள்வனவு செய்வதனால் ஒரு வாகனத்தின் மூலம் மாத்திரம் அரசாங்கத்திற்கு 33.5 மில்லியன் ரூபா வருமானம் இல்லாமல் போவதாகவும், இந்த அனுமதிப்பத்திரத்தை வாகன விற்பனையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் அந்தப்பணத்தில் 25 மில்லியன் ரூபாவை பாராளுமன்ற உறுப்பினரும் மீதி 8.5 மில்லியன் ரூபாவை வாகன விற்பனையாளரும் பெற்றுக்கொள்வதனால் அரசாங்கத்திற்கு 5 சதமேனும் வருமானம் கிடைப்பதில்லை என்று அவர் கூறியுள்ளார். 

தீர்வை வரியின்றி வாகனங்களை கொண்டுவருவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியில் இடம்பெறுகின்ற வரி மோசடிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறி தான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திடம் முறைப்பாடு செய்த போதிலும், அரசாங்கத்தின் கொள்கைப் படி இவை மேற்கொள்ளப்படுவதால் அரசாங்கத்திற்கு ஏற்படுகின்ற வருமான இழப்பு சம்பந்தமாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலையீடு செய்ய முடியாதென்று அவர் தனக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

எவ்வாறாயினும் ஊழல் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் நம்பகரமான மற்றும் முறையான விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு பொறுப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

வரப்பிரசாதங்களை பயன்படுத்தி தமது பெயர்களில் வாகனங்களை கொண்டுவந்து விற்பனை செய்வது ஊழல் சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் பாரிய குற்றம் என்றும், அவ்வாறு விற்பனை செய்வதாயின் முழுமையான வரி செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறாக இந்த அனுமதிப் பத்திரத்தை விற்பனை செய்வதன் மூலம் பெருந்தொகை பணத்தைப் பெற்றுக் கொள்வதுடன், வாகன வர்த்தகர்களும் மில்லியன் கணக்கில் பணத்தை பெற்றுக் கொள்வதாகவும், இதன் மூலம் வரிப்பணமாக அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான பணம் இல்லாமல் போவதாகவும் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு கூறியுள்ளார். 


No comments

Powered by Blogger.