Header Ads



ஊடகத்துறையில் மரணிக்கும் மனிதாபிமானம்

-Selvaraja Rajasegar-

(மீரியாபெத்தையில் மண்சரிவு இடம்பெற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நினைவுநாள் நிகழ்வில் வேதனையில் அழுதுகொண்டிருக்கும் பெண்ணொருவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கைத்தொலைப்பேசியை நீட்டி கருத்து கேட்டபோது எடுக்கப்பட்ட படம்)

மனசாட்சியற்ற, இன்னொருவரின் வேதனையை வியாபாரம் செய்யும் ஊடகக் கலாசாரத்தை மீண்டுமொரு முறை அண்மையில் பார்க்கக் கூடியதாக இருந்தது. மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலப்பகுதியில் கொல்லப்பட்ட தங்களுடைய சக நண்பரான லசந்த விக்கிரமதுங்கவின் உடலம் புதிய மேலதிக விசாரணைக்களுக்காக பொரளை மயானத்தில் தோண்டியெடுக்கப்பட்டபோது ஒரு சில புகைப்பட ஊடகவியலாளர்கள், செய்தியாளர்கள் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்தபோதே அவ்வாறு என்னுள் தோன்றியது.

7 வருடங்களுக்குப் பின்னர் தனது தந்தையின், கணவரின் உடல் தோண்டியெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு அனுமதியளிக்கவேண்டாம் என லசந்த விக்கிரமதுங்கவின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டனர். தங்களோடு சிரித்து பேசி வாழ்ந்தவரின் உடலை ஏழு வருடங்களின் பின்னர் தங்களால் பார்க்க முடியாது என்பதற்காகவே அவர்களால் இந்த மனிதாபிமான வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும், பொரளை மயானத்தின் வெளியே கூடியிருந்த புகைப்பட ஊடகவியலாளர்கள், செய்தியாளர்கள் தங்களை உள்ளே அனுமதிக்குமாறு பொலிஸாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். அந்த வேளையில் ‘ட்ரோன்’ கமராவை மயானத்தின் மேலே பறக்கவிட்டு லசந்தவின் உடல் மீட்பை வானிலிருந்த காட்சிப்படுத்த யாரோ முயற்சி செய்திருந்தார்கள். பொலிஸாரின் அனுமதி மறுப்பைத் தொடர்ந்து ஒரு சில புகைப்பட ஊடகவியலாளர்கள் மதில் மேல் ஏறியவாறு வியாபாரத்தைத் தொடங்கியிருந்தார்கள்.

இவ்வாறு இவர்கள் செயற்படுகிறார்கள்?

ஊடக ஒழுக்கநெறி மற்றும் மனிதாபிமானம் தற்போது ஊடகவியலாளர்கள் மத்தியில் இல்லாத காரணத்தினால். இன்னொருவரின் வேதனையை எந்நேரமும் புகைப்படமாக காட்சிப்படுத்துவதற்காக. இன்னொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைப்பதற்கு தங்களுக்கு உரிமை இருக்கிறது என்ற எண்ணம் இருப்பதால்.

பொதுவாக இலங்கையில், குற்றச்செயல்கள், கொலை சம்பவங்களைச் செய்தியாக்கச் செல்லும் ஊடகவியலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் – இயந்திரம் போன்று செயற்படுகிறார்கள். முக்கியமாக, மரண வீடுகளில் வேதனையுடன் இருப்பவர்களின் பக்கம் கமராவைத் திருப்பி கேள்வி கேட்பதை நாம் தொலைக்காட்சி (அனைத்து மொழி) செய்திகளில் பார்த்திருக்கிறோம். ஏனையவர்களின் வேதனையை விற்று பணம் பார்க்கும் ஊடகக் கலாச்சாரம் இலங்கை ஊடகத்துறையில் வியாபித்துக் காணப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடக ஒழுக்கநெறி பின்பற்றப்படுவது பெரிதும் குறைவடைந்துள்ளது.

“ஊடகவியலாளர்கள் கொடூரமாக செயற்படக்கூடாது”

குறித்த நபரொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையுடன்  தொடர்புடைய சம்பவத்தை செய்தியாக்கும்போது ஊடகவியலாளர்கள் கொடூரமாக செயற்படக்கூடாது என்று சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் கூறுகிறார். பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியின்போது அவர் இவ்வாறு கூறினார். “இதுபோன்ற சம்பவங்களுக்கு அரசு சட்டங்களை அமுல்படுத்த வேண்டியதில்லை. ஊடகவியலாளர் இடையே ஊடக கலாசாரமொன்றை கட்டியெழுப்பிக்கொள்ளவேண்டும்.” “லசந்தவுக்குப் பதிலாக எலும்புக் கூடொன்றைக் நாங்கள் காட்டுவது நல்லதா? அது லசந்தவுக்கு நல்லதா?” என்கிறார் விக்டர் ஐவன். “இவ்வாறான உணர்ச்சிமிக்க சந்தர்ப்பங்களின்போது சமூகத்தில் பொறுப்புள்ள நிறுவனம் என்ற வகையில் ஊடகம் எச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியமாகும்” என்றும் அவர் கூறுகின்றார்.

“தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது, மனிதாபிமானம் இருக்கவேண்டும்” எங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராக, உறவினராக, தெரிந்த ஒருவராக இருந்திருந்தால் நாங்கள் இவ்வாறு செயற்பட்டிருப்போமா? ஊடக ஒழுக்கநெறி பற்றி கதைப்பதற்கு முன்னர் மனிதாபிமானம் பற்றி பேசுவதே இங்கு முக்கியமானது என்கிறார் கிரவுண்விவ்ஸ் தளத்தின் ஆசிரியர் சஞ்சன ஹத்தொட்டுவ. சஞ்சன ஹத்தொட்டுவ இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் ஊடக ஒழிக்கநெறியுடன் சட்டத்திற்கு உட்பட்டு எவ்வாறு ட்ரோன் ஊடகவியலில் ஈடுபடுவது என்பது தொடர்பாக செயலமர்வு நடத்திவருகிறார். லசந்த விக்கிரமதுங்கவின் உடலம் தோண்டியெடுக்கப்பட்ட போது ட்ரோனைக் கொண்டு காட்சிப் பதிவை மேற்கொண்டமை தொடர்பாக கேட்டபோதே மேற்கண்டவாறு சஞ்சன ஹத்தொட்டுவ கூறினார்.

புதைக்குழுயொன்று தோண்டப்படும்போது அதில் காணப்படும் சடலம் அல்லது தோண்டப்பட்ட புதைக்குழியின் படங்கள் செய்தி அறிக்கையிடலின்போது எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது? இதுபோன்ற செய்திகளுக்கு புகைப்படங்கள் அத்தியாவசியம்தானா? இந்த இடத்தில்தான் மனிதாபிமானம் உயிரிழக்கிறது என்கிறார் சஞ்சன ஹத்தொட்டுவ.

கூருணர்வு கொண்ட செய்தி அறிக்கையிடலின்போது ஊடகங்கள் தற்போது கையாண்டுவரும் முறையில் சிக்கல் இருப்பது தெளிவாகத் தெரிவதாகக் கூறும் சஞ்சன, தொழில்நுட்பம் வளர்ச்சியடைகின்ற போதிலும் ஊடக ஒழுக்க நெறியை மீறாத வகையில் ஊடகவியலை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் இலங்கை ஊடகத்துறையில் காணப்படுகிறதா? என்றும் சந்தேகம் வெளியிடுகிறார்.

என்னைப் பொறுத்த வரையில் ‘ட்ரோன்’ என்பது செல்பி ஸ்டிக்கைப் போன்றது, மொபைல் கமராவைப் போன்றது, லெப்டொப்பில் இருக்கும் கமராவைப் போன்றது. புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், ஊடக ஒழுக்கநெறி என்பது அப்படியேதான் இருக்கிறது. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியை – ட்ரோனை எவ்வாறு ஊடக ஒழுக்கநெறி என்ற சட்டகத்துக்குள் கொண்டு இயக்குவது என்பது குறித்துதான் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும் என்று கூறுகிறார் சஞ்சன ஹத்தொட்டுவ.

‘ட்ரோன்’ எதிர்காலத்தில் மலிவான விலையில் இன்னும் சிறிதாக வரவும் கூடும். இன்னும் 10 வருடங்கள் அனைவரது கைகளிலும் ‘ட்ரோன்’ இருப்பதாக வைத்துக்கொண்டால், இதுபோன்று ஒரு சடலம் தோண்டியெடுக்கப்படும்போது வானில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் வட்டமிடலாம். தொழில்நுட்ப வளர்ச்சியைப் எம்மால் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், எம்மிடம் மனிதாபிமானம் இருக்கவேண்டும், ஒழுக்கநெறி இருக்கவேண்டும் என்கிறார் சஞ்சன ஹத்தொட்டுவ.

ஒழுக்கநெறியைப் பின்பற்றுவதில் நிலவும் வறட்சி

லசந்த விக்கிரமதுங்கவின் உடலம் தோண்டியெடுக்கப்படும் போது ஊடகங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோள் நியாயமானது என்று தெரிவிக்கும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் லசந்த ருஹுனுகே, 7 வருடங்களுக்கு முன்னர் நம்மத்தியில் இருந்த ஒருவரின் தற்போதைய உருவம் செய்தி அறிக்கையிடலில் முக்கியத்துவம் பெறுவது இலங்கையில் ஊடக ஒழுக்கநெறியைப் பின்பற்றுவதில் நிலவும் வறட்சி நிலையை தெளிவாகக் காணக்கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். தகவலை தெரிவிப்பதற்கான உரிமைதான் ஊடக சுதந்திரம் என்பதற்காக கூருணர்வு கொண்ட – ஏனையவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதை நாம் எப்படி ஊடக சுதந்திரமாக கொள்ள முடியும் என்று குறிப்பிடுகிறார் லசந்த ருஹுனுகே.

லசந்தவின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட விடயத்தில் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்திருக்காவிட்டாலும், பொலிஸார் அனுமதி அளித்திருந்தாலும் கூட ஊடகங்கள் மனிதாபிமான ரீதியில் செயற்பட்டிருக்க வேண்டும். ஊடகவியலாளர் என்ற கவசத்தை கழற்றி வைத்துவிட்டு மனிதன் என்ற அடிப்படையில் இந்த மாதிரியான விடயத்தை அணுக வேண்டும் என்று கூறுகிறார் லசந்த. பொதுவாக தற்போது இலங்கையில் உள்ள ஊடகங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்கள், விபத்து, கொலைச் சம்பவங்களின்போது ஊடக ஒழுக்கநெறியை மீறி படங்கள், வீடியோக்கள், பெயர்களை வெளியிடுகின்றன. எதிர்காலத்தில் இது இன்னும் அதிகரிக்கக்கூடும். அதேவேளை, இதனால் பாதிக்கப்படும் தரப்பினருக்கு நியாயம் கிடைப்பதற்கான சந்தர்ப்பமும் குறைந்துகொண்டே வருகிறது.

ஆகவே, இந்தப் போக்கை நிறுத்துவதாக இருந்தால் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் இடையே கலந்துரையாடல் உருவாகவேண்டும்; ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும். அப்படி இல்லாவிட்டால் மனிதாபிமானமற்ற ஊடகப்போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்று கூறுகிறார் லசந்த ருஹுனுகே.

1 comment:

  1. மனிதாபிமானம் என்பது எல்லோருக்கும் இருக்க வேண்டிய விடயம். நிறைய ஊடகவியலாளர்கள் பணத்துக்கும், விளம்பரத்துக்கும், பிரபலம் அடைவதுக்கும், இனவாதியாகவும் செயட்படுகிறார்கள். உண்மையை மறைத்து தங்களது விருப்பு, வெறுப்புக்களுக்கு செய்திகளை வெளியிடுகிறார்கள். ஒரு முறை சந்திரிக்கா பண்டாரநாயக்கவே ஊடக மாபியாக்கள் என்று கூறியிருக்கிறார். ஆக ஊடகத்துறை நாட்டுக்காகவும், உண்மைக்காகவும், இன நல்லிணக்கத்துக்கும், தங்களை நிறைய திருத்திக் கொள்ள வேண்டி உள்ளது. அதட்கான அறிவும் பயிட்சியும் தேவைப்படுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.