Header Ads



மொசூல் உஸ்மானிய பேரரசின் ஓர் அங்கம் - ஈராக்கை நிராகரிதது, துருக்கி போரில் பங்கேற்பு

(தினகரன்)

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தீவிரவாத குழுவுக்கு எதிரான மொசூல் யுத்தத்தில் ஈராக்கிய மத்திய அரசின் எதிர்ப்பையும் மீறி துருக்கிய இராணுவம் பங்கேற்றுள்ளது.

குர்திஷ் பஷ்மர்கா படையினரின் கோரிக்கையை அடுத்து ஈராக்கில் ஐ.எஸ் நிலைகள் மீது துருக்கி இராணுவம் தாக்குதல் நடத்தியதாக துருக்கி உறுதி செய்துள்ளது. எனினும் துருக்கியின் உதவிக் கோரிக்கையை ஈராக் அரசு நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மொசூலில் இருந்து கிழக்காக அமைந்திருக்கும் பஷிகா நகரில் இராணுவ தாக்குதலில் துருக்கியும் பங்கேற்றதாக துருக்கி பிரதமர் பினாலி யில்திரிம் உறுதி செய்துள்ளார். துருக்கியின் உதவியை பஷ்மர்கா படையினர் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈராக்கின் இரண்டாவது தலைநகரான மொசூல் 2014 தொடக்கம் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. மொசூலை மீட்கும் பாரிய இராணுவ நடவடிக்கை கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இது 2003இல் அமெரிக்க படையெடுப்புக்கு பின் பிராந்தியத்தின் மிகப்பெரிய யுத்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் துருக்கி படையினர் நிலைகொண்டிருக்கும் பஷிகா முகாமை ஒட்டி குர்திஷ் படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றொரு முனையில் மொசூலை நோக்கி தாக்குதல்களை ஆரம்பித்தனர்.

“பஷிகா பிராந்தியத்தில் இருந்து டாயெஷை (ஐ.எஸ்) அகற்றுவதற்கு பஷ்மர்கா படை அணிதரண்டு வருகிறது. பஷிகா முகாமில் இருக்கும் எமது படையினரிடம் அவர்கள் உதவி கோரினர். அங்கிருக்கும் எமது பீரங்கிகள் கொண்டு அவர்களது டாங்கிகள் முன்னேற உதவினோம்” என்று யில்தரிம் குறிப்பிட்டார்.

பஷிகா முகாமில் சுமார் 500 துருக்கி படையினர் உள்ளனர். அவர்கள் குர்திஷ் பஷ்மர்கா மற்றும் சுன்னி போராளிகளுக்கு இராணுவ பயிற்சி மற்றும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

எனினும் ஐ.எஸ் எதிர்ப்பு போராளிகளுக்கு உதவ துருக்கி தனது படைகளை ஈராக் அனுப்பியது தொடக்கம் துருக்கி மற்றும் ஈராக் அரசுகளுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. துருக்கி, நாட்டின் இறையாண்மையை மீறுவதாக குற்றம் சாட்டும் ஈராக் அரசு துருக்கி தனது படையினரை உடன் வாபஸ் பெற வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்து வருகிறது.

எனினும் சுன்னி பெரும்பான்மை நகரான மொசூலை விடுவிக்க ஈராக் அரச தரப்பு ஷியா ஆயுததாரிகளை பயன்படுத்துவதாக துருக்கி குற்றம் சாட்டுகிறது. மொசூல் யுத்தத்தில் பயிற்சி பெற்ற சுன்னி போராளிகளை பயன்படுத்தும்படி துருக்கி வலியுறுத்துகிறது. மொசூல் முன்னாள் உஸ்மானிய பேரரசின் ஓர் அங்கமாகும். இந்நிலையில் பஷிகா நகரை முழுமையாக கைப்பற்றியதாக குர்திஷ் படையினர் அறிவித்துள்ளனர். மொசூலில் இருந்து 12 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் பஷிகா நகருக்குள் தமது படையினர் நுழைந்ததாக குர்திஷ் படையினர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தி உறுதி செய்யப்படும் பட்சத்தில் மொசூலை நோக்கிய பாதையில் மற்றொரு தடை அகற்றப்பட்டதாக இருக்கும் என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். பஷிகா கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ.எஸ்ஸின் அரணாக இருந்து வந்த பகுதியாகும்.

பஷிகாவுக்கு அருகாமை சிறு நகரான நவ்ரானில் இருந்து எடுக்கப்பட்ட ரோய்ட்டர்ஸ் வீடியோ காட்சியில், குர்திஷ் படையினர் மோட்டார் குண்டு, இயந்திர துப்பாக்கி மற்றும் துப்பாக்கிகள் கொண்டு உக்கிர தாக்குதல்களை நடத்தும் காட்சிகள் பதிவாகி உள்ளன. அந்த பகுதியில் இருந்து பெரும் புகை மூட்டம் கிளம்புவதும் பதிவாகியுள்ளது.

ஹெலிகொப்டர்கள் வானில் வட்டமிட, வீதி ஒன்றின் ஊடே கவச வாகனங்கள் முன்னேறும் நிலையிலேயே குர்திஷ் படையினர் நகருக்குள் நுழைந்துள்ளனர்.

இதன்போது பஷ்மர்கா படையினர் டாங்கிகள், ரொக்கெட் லோஞ்சர்கள் மற்றும் ஸ்னைப்பர் தாக்குதல்களையும் பயன்படுத்தியுள்ளனர். படையினருக்கு எதிரான குறைந்தது மூன்று தற்கொலை கார் குண்டு தாக்குதல்கள் முறியடிக்கப்படும் காட்சியும் ரோய்ட்டர்ஸ் படங்கள் காட்டுகின்றன.

இந்நிலையில் மொசூலில் படை நடவடிக்கையை ஆரம்பித்திருக்கும் கூட்டுப் படையினர் நகருக்கு 5 கிலோமீற்றர் வரை நெருங்கி விட்டதாக குர்திஷ் பிராந்திய அரசின் ஊள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஈராக்கிய இராணுவம், குர்திஷ் படையினர் மற்றும் சுன்னி பழங்குடி போராளிகள் என்று இந்த இராணுவ நடவடிக்கையில் சுமார் 30,000 துருப்பினர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே மேற்கு ஈராக்கில் பலுௗஜா, ரமடி மற்றும் சுன்னிக்களின் பலம்கொண்ட இடமாக கருதப்படும் மத்திய ஈராக்கின் டிக்ரித் நகரங்களை ஐ.எஸ்ஸிடம் இருந்து மீட்ட நிலையிலேயே மொசூலில் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் மொசூல் முன்னேற்றத்தை திசை திருப்பும் வகையில் ஐ.எஸ் குழு ஈராக்கின் வேறு நகரங்களில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கிர்குக் நகரில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் கடந்த ஞாயிறன்று ருட்பா நகர் மீது தாக்குதல் தொடுத்தது.

மறுபுறம் மொசூல் முன்னேற்றத்தை முறியடிக்கும் முயற்சியாக ஐ.எஸ் குழு நகருக்கு அருகில் இருக்கும் கந்தக தொழிற்சாலைக்கு தீமூட்டியுள்ளது. இதனால் ஏற்பட்ட நச்சு புகை பாதிப்பால் 1,000க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மொசூல் மீதான கூட்டுப்படையின் தாக்குதல்கள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுகின்றபோதும் நகரை மீட்பதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் என்று கூட்டுப்படை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நகரில் தொடர்ந்து 1.5 மில்லியன் மக்கள் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

மொசூலை தக்கவைத்துக் கொள்ள அங்கிருக்கும் 4,000 முதல் 8,000 வரையான ஐ.எஸ் கண்ணிவெடிகள், எண்ணெய் நிரப்பப்பட்ட அகழிகள் மற்றும் சுரங்கங்கள் தோண்டி தற்காப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன்போது அங்குள்ள மக்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தும் அபாயம் பற்றியும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. இன் ஷா அல்லாஹ் நடப்பதும் நடந்துகொண்டிருப்பதும் அதன் இருதியையோ அல்லது அதன் எல்லையையோதான் நோக்கிக்கொண்டு செல்வது தப்பில்லை. சிரியாவில் நடப்பது பித்னாக்கல் என்ராலும் அது அவ்மண்னை சுத்தப்படுத்துவதும் சத்தமான மக்களை தெரிவுபண்ரதும் என்றும் கூரலாம் என்னவெனில் ஈஸா நபி அலைஸலாம் வருவதற்கு அவ்விடம் சுத்தமாககூட இருக்கவேண்டும் அல்லவா ஆனால் அங்கவுள்ள உம்மத்துக்களை அல்லாஹ் பாதுகாப்பான் அவன் நீதியானவன் ( ஹிஐ்ரத் சென்ரவர்கள் சிரியா மக்கள் சாதாரனவர்கள் என்ருமட்டும் நினைக்கவேண்டாம்) அவர்கள் வரும் இன் ஷா அல்லாஹ்........

    ReplyDelete

Powered by Blogger.