October 14, 2016

"என்னை எரித்து சாம்பலாக்கி விடுங்கள்"

-மவ்லவி, எஸ். லியாகத் அலீ மன்பஈ-

பனூ இஸ்ராயில்களின் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு சம்பவம்:

காலமெல்லம் இறைவனுக்கு மாறு செய்வதிலேயே மூழ்கி மதிமயங்கிக் கிடந்தவர். மரணத்தின் தூதர் மலக்குல் மவ்த் அவரது வாசற்கதவைத் தட்டுகின்ற பொழுதுதான், மரணத்தின் விளிம்பில் நிற்கின்றோம் என்ற எதார்த்தம் புரிந்தது. அவரால் எந்த நன்மையையும் செய்ய அவகாசம் கிடைக்கவில்லை எனினும் அவரது இதயத்தின் ஆழத்தில் வேரூன்றியிருந்த இறையச்சம் அவரை எப்படிக் கரை சேர்த்தது என்பதை அண்ணலம் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:

'மரணம் நெருங்கிய வேளையில்' ஒரு மனிதர் திரண்ட செல்வத்தையும் நிறையப் பிள்ளைகளையும் பெற்றிருந்தார். பொருள் வளமும் மக்கள் பலமும் கொண்டிருந்த அவர் பாவங்களைச் செய்வதில் ஆவலாயிருந்தார். அதுமட்டுமல்ல, அதுவரையில் எந்த நன்மையையும் அவர் செய்ததுமில்லை. இந்த நிலையில் அவருக்கு மரணம் வந்தது. தனது வாழ்வு முடியப்போகிறது என்பதை உறுதியாக அறிந்துகொண்டவுடன், அவருக்குத் தான் இதுவரை தீமைகளையே செய்து வந்திருப்பதும், தனது மறுமைப் பயணத்திற்காக எந்த நற்செயலையும் செய்யவில்லை என்பதும் புரிந்தவுடன் பறிப் போனார்.

தனது மக்களையும், குடும்பத்தார்களையும் ஒன்று கூட்டினார். 'என் பிள்ளைகளே உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்?' என்று வினவினார். அவர்கள் யாவரும் ஒரே குரலில், 'எங்கள் அன்புத் தந்தை அவர்களே! நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த தந்தையாகவே திகழ்ந்தீர்கள்' என்றனர். எதைக் கேட்ட அவர், 'அப்படியானால் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்நேரத்தில் நான் செய்யும் இறுதி உபதேசத்தை ஏற்பீர்களா? அதை செயல் படுத்துவீர்களா?'

'ஆம்! அவசியம் நிறைவேற்றுவோம்' என்று அவர்கள் சொல்ல, 'நீங்கள் அதைச்செய்யத் தவறினால் எனது பிள்ளைகளாக இருக்கவோ எனது சொத்துக்களுக்கு வாரிசுகளாக ஆகுவதற்கோ உங்களுக்கு உரிமையில்லை' என்று எச்சரித்துவிட்டு அவர் சொன்னர்:

'என்னை சாம்பலாக்குங்கள். நான் இறந்தவுடன் எனக்காக ஏராளமான விறகுகளைச் சேகரித்து அவற்றில் நெருப்பு மூட்டி அதை என் உடல் மீது எரிய வையுங்கள். எனது உடம்பை அந்த நெருப்பில் கரித்து எனது சதையை சாப்பிட்டு முடித்த பிறகு எனது எலும்புகளைத் திருகையில் போட்டு அரைத்துத் தூளாக்குங்கள். எனது உடம்பின் அத்தனை பகுதிகளும் கரித்து சாம்பலான பிறகு சூறாவளிக் காற்று வீசும் நாளொன்றில் எனது அஸ்தியில் பாதியை காற்றில் தூவி விடுங்கள். மற்றொரு பகுதியை கடலில் கரைத்து விடுங்கள். இவ்வாறு செய்தாவது என்னை இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள். இவ்வாறு செய்யவில்லையென்றால் அல்லாஹ்வின் பிடியிலிருந்து என்னால் தப்ப முடியாது. அவன் என்னை பிடித்துவிட்டால் உலகில் வேறு யாரையும் தண்டிக்காத அளவுக்கு என்னை வேதனை செய்வானே என சத்தியமாக நான் அஞ்சுகிறேன்'. இவ்வாறு சொல்லி முடித்ததும் அவர் மரணமாகிவிட்டார். அவரது பிள்ளைகள் (அவரது விருப்பப்படி) அவ்வாறே செய்தனர்.

அவரது அஸ்தி கடலிலும் தரையிலும் ஆகாயத்திலுமாக எங்கெங்கோ பறந்து சென்றுவிட்டது. இப்போது அல்லாஹ் கடலுக்கு உத்தரவிட்டான். அவரது சாம்பலையெல்லாம் அது திரட்டிவிட்டது. அதேபோல் காற்றுக்கு ஆணையிட்டான். அது தரையிலும் ஆகாயத்திலும் பரந்துவிரிந்து கிடந்த அவரது உடலின் கரிந்து சாம்பலான அத்தனை துகள்களையும் ஒன்று சேர்த்தது. அவ்வளவுதான்! அந்த மனிதரின் உடல் மீண்டும் உருவானது. அவரை நோக்கி அல்லாஹ் கேட்டான்: 'என் அடியானே! என்னை விட்டு தப்பி விடலாம் என்றெண்ணி நீ இப்படிச் செய்திருக்கிறாயா? இவ்வாறு நீ செய்ததற்குக் காரணம் என்ன?'

உடனே அந்த மனிதர், 'ரட்சகா! உன்னால் இவ்வாறு செய்ய முடியாது என்று நான் கற்பனை செய்ததில்லை. என்றாலும் உனது வேதனைக்குப் பயந்துதான் அவ்வாறு நான் செய்யுமாறு கட்டளையிட்டேன்' என்று அந்த மனிதர் சொல்ல, அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான்.

இந்நிகழ்ச்சியைப் பற்றி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்கள் மத்தியில் கூற அதைப் பல தோழர்கள் அறிவித்துப் பல நூல்களில் (புகாரி உள்பட) பதிவாகியுள்ளது. ஒவ்வொரு அறிவிப்பிலும் சிற்சில மாற்றங்கள் உள்ளன. ஒரே விஷயத்தை பலர் சொல்லும்பொழுது சொல்லும் விதத்தில் சிற்சில மாற்றங்கள் இருக்குமல்லவா?

இந்த அரிய நிகழ்ச்சியிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பிணைகால் ஏராளமாக உள்ளன. அவற்றில் சில...

அம்மனிதரிடம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் மிக அதிகமாகவே இருந்துள்ளது. எந்த அளவுக்கென்றால், தாம் புரிந்துள்ள குற்றங்களுக்காக அல்லாஹ் தண்டிக்க ஆரம்பித்தால் உலகில் வேறு யாரையும் தண்டிக்காத அளவுக்கு தன்னை தண்டித்துவிடுவது நிச்சயம் என்று பயந்துவிட்டார். அதன் காரணமாகவே அவர் தனது மரணத்திற்குப் பின் அதுவரையில் உலகில் யாரும் செய்யாத ஒன்றை செய்யச் சொன்னார். ஆம்! இறந்துவிட்ட ஜனாஸாக்களைப் புதைப்பதுதான் இயற்கையான, இறைவனால் காட்டித்தரப்பட்ட வழிமுறையாக இருந்து வந்தது.

இவர்தான் முதன்முறையாக எரிக்குமாறு சொன்னவர் என்பதிலிருந்து அந்த மனிதர் இறை தண்டனையை அதிகமதிகம் அஞ்சியுள்ளார் என உறுதியாக நாம் அறியலாம். ஆனாலும், அவர் அல்லாஹ்வைப் பற்றிய அறியாமையிலும் அதிகம் மூழ்கியவர் என்பதும் புலனாகின்றது. ஆம்! தனது உடலை எரித்து சாம்பலாக்கி விட்டால்தான் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டார். என்னே அறியாமை!

இவ்வாறு செய்துவிட்டாலும் அவரைத் தன் முன் நிறுத்தி தண்டிப்பதற்கு அல்லாஹ் ஆற்றல் பெற்றவன் என்பதை அவர் உணரவில்லை. கடலில் இறந்து மீன்களுக்கு இரையாகும் மனிதர்களும், மண்ணறைகளில் மக்கிப்போகும் மனிதர்களும், நெருப்பில் பொசுங்கி உருத்தெரியாமல் உருக்குலைந்து போகும் மனிதர்களும்; இப்படி எத்தனையோ வகைகளில் மரித்துவிடக்கூடியவர்களெல்லாம் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியுமா என்ன?

'மக்கிப்போன எலும்புகளுக்கு யார் உயிர் கொடுத்து எழுப்ப முடியும் என மனிதன் கேட்கிறான். யார் ஆரம்பத்தில் (ஒன்றுமே இல்லாமலிருந்து) அவனைப் படைத்தானோ அந்த இறைவன் மக்கிப்போன எலும்புகளுக்கு உயிர் கொடுக்க சக்தியுள்ளவன் இல்லையா? என நபியே கேளும்' என்ற திருக்குர்ஆன் வசனத்தின் படி அந்த மனிதர் தண்டனையிலிருந்து தப்புவதற்காகத் தேர்ந்தெடுத்த வழி சற்றும் அறிவுக்குப் பொருந்தாத, இயற்கைக்கு மாற்றமான அறியாமை என்பதில் சந்தேகமே இல்லை. இருப்பினும் வல்ல ரஹ்மான் அவரை மன்னித்து விடுகின்றான். காரணம் அவரது அறியாமையை விட அவரது இறையச்சம் மிகைத்திருந்தது.

தன்னை பயந்துதான் அவர் அவ்வாறு சாம்பல்லாக்க வேண்டும் என்று உத்தரவிட்டாரேயன்றி, தனக்கு அவரை தண்டிக்கும் ஆற்றல் கிடையாது என்ற தைரியத்தினால் அல்ல என்பது இறைவனுக்கு நன்றாகவே தெரியும். எனவே அறியாமையின் காரணமாக அவர் அதைச் செய்திருந்தாலும் அவரது அச்சத்தின் காரணமாக அவரை இறைவன் மன்னித்து விடுகிறான். காரணம் அவரது அறியாமையை விட அவரது இறையச்சம் மிகைத்திருந்தது.

உலகில் சில பகுதிகளில் இறந்த உடல்களை எரித்து சாம்பலாக்கி அஸ்தியை கடலில் கரைப்பதும், உடலின் பாகங்களைத் துண்டு துண்டாக நறுக்கி பறவைகளுக்கு இரையாகப் போடுவது போன்ற பழக்கங்களும் மேற்படி மனிதரின் செயலுக்குப் பின்புதான் வந்திருக்கும் என்று நாம் யூகிக்க இடமிருக்கிறது. ஏனெனில், இவருக்கு முன் யாரும் இவ்வாறு செய்திருந்தால், இவர் தனது மக்களிடம் அதைச்செய்யும்படி உபதேசித்திருக்கவும், செய்யாவிட்டால் உங்களுக்கு எனது வாரிசாகும் உரிமையில்லை என எச்சரித்திருக்கவும் தேவையில்லையே!

தனது பாவச் செயல்களை ஒப்புக்கொண்டு தனது அறியாமையையும் இயலாமையையும் அல்லாஹ்விடம் சமர்ப்பித்து அவனது அருளை வேண்டி நிற்கும்பொழுது அல்லாஹ் தன் அடியார்களை மன்னிப்பான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். அல்லாஹ்வின் உண்மையான அச்சம் உள்ளத்தில் இருந்தால் அது நிச்சயம் நம்மைக் காப்பாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

அதே சமயம் இறைவனை விசுவாசம் கொண்டு இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர்களாகிய முஸ்லிம்கள் எவரும் 'எரிந்து சாம்பலாகும்' இதுபோன்ற முடிவை எடுத்துவிடாதீர்கள். ஏனெனில் நமக்கு தெள்ளத்தெளிவான இறைவேதமாம் அல்குர்ஆனையும், அதன் விளக்கமாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அனுப்பி மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டான் அல்லாஹ்.

இறைவேதமாம் அல்குர்ஆனையும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையையும் பின்பற்றும் காலமெல்லாம் நாம் வழி தவறிப்போக மாட்டோம் என்பது இஸ்லாம் நமக்கு வழங்கியிருக்கும் உத்தரவாதம் என்பதை நினைவில் கொள்வோம். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

0 கருத்துரைகள்:

Post a Comment