Header Ads



செல்பி, இவற்றுக்கு எல்லாம் உதவும்..!

உயரமான மாடியிலிருந்து தவறி விழுவது, அந்தரங்க வீடியோ எடுத்து அம்பலமாகி அவதிப்படுவது என்று செல்ஃபியால் ஏற்படும் விபரீதங்களைப் பற்றித்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம். முதன்முறையாக, செல்ஃபியை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த முடியும் என்பதை ஆய்வு செய்து நிரூபித்திருக்கிறார்கள் தமிழக மருத்துவர்கள். இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான பல் மருத்துவர் ரூபனிடம், ‘அப்படி என்ன ஆக்கப்பூர்வமான செல்ஃபி?’ என்று கேட்டோம்.

‘‘பல் துலக்குவதற்கென்று ஒரு சரியான முறை இருக்கிறது. அந்த விதிகளை முறையாகப் பின்பற்றினால் ஆரோக்கியமான பற்களையும், தவறாகப் பின்பற்றினால் பற்கள் சார்ந்த பிரச்னைகளையும் சந்திக்கிறோம். அதனால், பல் துலக்குவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த ஆய்வை மேற்கொண்டோம். இதற்காக எங்களது மருத்துவர்கள் குழு 4 நபர்களைத் தேர்வு செய்தது. தொடர்ந்து 14 நாட்கள் தினமும் பல் துலக்குவதை செல்ஃபி வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆரம்ப நாட்களில் பல் துலக்கிய வீடியோ பதிவுகளைக் கொண்டு வந்திருந்தார்கள். 

அவற்றைக் கவனித்து சில தவறுகளை சுட்டிக்காட்டியதோடு சரியான முறையில் பல் துலக்குவதற்கான பயிற்சிகளையும் கொடுத்தோம். பயிற்சி மற்றும் வீடியோ எடுத்த அனுபவத்தால் அவர்களது 14வது நாள் வீடியோவில் பல் துலக்கும் முறையில் பெரும் முன்னேற்றம் தெரிந்தது. இதன்மூலம் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்துகொண்டதோடு, மருத்துவரிடம் தகுந்த மருத்துவம் பெறவும் செல்ஃபி உதவியது’’ என்கிறார் மருத்துவர் ரூபன். ஆய்வில் பங்கு கொண்ட மனநல மருத்துவரான அனுஷா, செல்ஃபி வீடியோக்களின் மற்றொரு பயன்பாட்டை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘புற்றுநோய் மருத்துவத்தில் சுயபரிசோதனை செய்து கொள்ளவும், நோய்த்தாக்க நிலைகளை அறிந்து நோய் தீவிரமாகாமல் தடுக்கவும் செல்ஃபி வீடியோக்கள் பெரிதும் உதவி புரிகிறது. மார்பகப் புற்றுநோயை அறிந்துகொள்ளவும் செல்ஃபிக்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மார்பகத்தில் ஏதேனும் கட்டி போன்ற அறிகுறிகள் தோன்றினால் வீடியோ எடுப்பதன் மூலம் அதை கண்காணிக்க முடியும். தகுந்த பெண் மருத்துவரிடம் கொடுத்து நம் சந்தேகத்தையும் தீர்த்துக் கொள்ளலாம். இதை இந்திய மருத்துவ கழகமும் சர்வதேச பெண்கள் நல மருத்துவ கழகங்களும் பெண்களுக்குப் பரிந்துரை செய்திருக்கின்றன.

நம் உறவினரில் யாருக்கேனும் வலிப்பு ஏற்படும்போது மருத்துவ உதவிகளைச் செய்யும் அதே நேரத்தில், இன்னொருவர் அந்த வலிப்பு நிலையை வீடியோவாக எடுப்பதும் பயன் தரும். இதன் மூலம் வலிப்பு நோய் என்ன நிலையில் இருக்கிறது என்பதை மருத்துவர் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும். முதல் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு மாறாமல் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும். அதனால், தொழில்நுட்ப வசதிகளை தவறாகப் பயன்படுத்தி அவதிப்படுவதை மாற்றி, நம் உடல்நலத்துக்காகவும் பயன்படுத்தலாம் என்பதையே இதன் மூலம் புரிய வைத்திருக்கிறோம்’’என்கிறார் அனுஷா. அதனால், செல்ஃபியை இனி ஆக்கப்பூர்வமானதாகவும் பயன்படுத்துவோமாக !

No comments

Powered by Blogger.