Header Ads



நேற்று ஆபாச வீடியோ, இன்று வரி ஏய்ப்பில் சிக்கிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் தொழிலில் தனக்கு 916 மில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.6,100 கோடி) நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காட்டியுள்ளதாக 'நியூயார்க் டைம்ஸ் ஏடு' தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஹிலாரி கிளிண்டனும் சமீபத்தில் நேருக்கு நேர் விவாதித்தனர். அப்போது, “வருமான வரி கணக்கு விவரங்களை டிரம்ப் வெளியிடாமல் மறைக்கிறார்” என ஹிலாரி குற்றம்சாட்டியபோது, “நீங்கள் அமெரிக்க வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் 33,000 இமெயில்களை அழித்ததை மீண்டும் எப்போது வெளியிடுகிறீர்களோ, அப்போது நானும் என் வருமான வரி கணக்கை வெளியிடுவேன்” என டிரம்ப் பதிலடி தந்தார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக டொனால்டு டிரம்ப் 1995-ம் ஆண்டு, தொழிலில் தனக்கு 916 மில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக 1995-ம் ஆண்டு கணக்கு காட்டியுள்ளார். இதன்மூலம் அவர் 18 ஆண்டுகளாக வரி செலுத்தாமல், சட்டப்பூர்வமாக தப்பி வருவது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிக்கை, “இதுவரை ஒருபோதும் வெளியிட்டிராத 1995-ம் ஆண்டு வரி ஆவணங்கள் மூலம், டிரம்ப் அசாதாரணமாக பலன் அடைந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. அட்லாண்டிக் நகரில் 3 சூதாட்ட விடுதிகள், விமான நிறுவன தொழில், மேன்ஹட்டன் நகரில் பிளாசா ஓட்டலை வாங்கியது ஆகியவற்றின் மூலம் அவர் நிதி இழப்பை சந்தித்துள்ளார் என தெரிய வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இதுபற்றி டிரம்பின் பிரசார குழுவினர் மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை. மாறாக, “நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை சட்டத்துக்கு புறம்பாக வருமான வரி ஆவணங்களை பெற்று தகவல்கள் வெளியிட்டுள்ளது. இது ஹிலாரி கிளிண்டன் பிரசார குழுவின் விரிவாக்கமாக உள்ளது” என குற்றம் சாட்டி உள்ளனர். பிளேபாய் ஆபாச வீடியோவில் டிரம்ப் தோன்றிய விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ள அடுத்த நாளே , அவரைப் பற்றி வரிஏய்ப்பு சர்ச்சையும் கிளம்பி உள்ள விவகாரம் அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Powered by Blogger.