Header Ads



‘வா பாக்கலாம்’ டிரம்ப்புக்கு சவால்விடும் ஒபாமாவின் உற்சாக பேச்சு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை ‘கமான் மேன்’ என மோதலுக்கு அழைத்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மேடைப்பேச்சு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் மோதுகிறார்.

இந்நிலையில், தனது ஆட்சியின்கீழ் முன்னர் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றிய ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் புதிய அதிபராக வருவதற்கு தற்போதையை அதிபரான பராக் ஒபாமா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார்.

தனது சொந்தமான மாநிலமான சிக்காகோ மற்றும் தத்தெடுத்துள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தில் ஹிலாரி கிளிண்டனை ஆதரித்து நிதிதிரட்டும் நிகழ்ச்சிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார்.

இல்லினாய்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய அதிபர் ஒபாமா பெண்களைப் பற்றி சமீபத்தில் கீழ்தரமாக விமர்சித்திருந்த டொனால்ட் டிரம்ப்புக்கு கண்டனம் தெரிவித்தார்.

பெண்களை பற்றி படுகேவலமாகவும், கீழ்தரமாகவும் பேசிவருவதுடன், சிறுபான்மை இனத்தவர்கள், புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வந்து குடியேறியவர்கள், இதர மதங்களை சேர்ந்தவர்கள் ஆகியோரை பற்றியும் இழிவாக பேசியும், ஊனமுற்றவர்களை கேலி செய்தும் தனது நடவடிக்கைகளின் மூலம் மற்றவர்களை தரம்தாழ்த்தியும், தன்னை உயர்வுப்படுத்தியும் காட்டிக்கொள்ளும் டொனால்ட் டிரம்ப்பிடம் அதிகாரத்தை தருவதன் மூலம் நாம் இந்த நாட்டில் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றத்தை பாழடைத்துக் கொள்ளும் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளப் போகிறோமா? என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பேசிய ஒபாமா குறிப்பிட்டார்.

அடுத்தடுத்து தன்மீதான பாலியல் புகார்கள் பெருகிவரும் நிலையில் தனக்கு எதிராக ஊடகங்களும் சில வெளிநாட்டு சக்திகளும் சதி செய்து வருவதாக டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். 

இந்நிலையில், ஓஹியோ மாநிலத்தில் நேற்று நடைபெற்ற ஜனநாயக கட்சி பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஒபாமா, டொனால்ட் டிரம்ப்-ஐ கடுமையாக தாக்கி பேசினார்.

உழைக்கும் மக்களுக்கான நலத்திட்டங்களில் எந்த அக்கறையும் இவர் காட்டியதில்லை. குறைந்தபட்ச கூலி நிர்ணயத்தை இவர் ஆதரித்தது கிடையாது. ஏழை மக்களுக்காக இவர் எந்த முதலீடும் செய்தது கிடையாது. திடீரென்று உழைக்கும் மக்களின் கதாநாயகனாக தன்னை காட்டிக்கொள்ள அவர் முயற்சிக்கிறார்.

தனது சொத்து மதிப்பு, வானளாவிய தனது கட்டிடங்கள், தனது ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றை உலகுக்கு உணர்த்துவதற்காகவே தனது வாழ்நாளை செலவிட்ட இவர் தனக்கு எதிராக உலகளாவிய சதிவலை பின்னப்பட்டதாக நேற்று பேசியுள்ளார்.

தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தன்னை ஒரு உலகளாவிய செல்வந்தராக காட்டிக் கொள்வதில் செலவிட்டவர் டிரம்ப். பிரபலமானவர்களுடன் மட்டும் நேரத்தை செலவிடுவதற்காக விமானங்களில் பறந்து ஊர், ஊராக சுற்றிய இவர் அடித்தட்டு மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்? என்று ஒபாமா கேள்வி எழுப்பினார்.

திடீரென்று உழைக்கும் வர்க்கத்தினருக்கு பாடுபட பிறந்தவர்போல் அவர் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஏழை மக்களுக்காக உழைப்பதற்காக நான் இருக்கிறேன். வாய்யா, பார்க்கலாம்! (Come on Man.)

மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர வேண்டுமென்றால், உழைப்புக்கேற்ற ஊதியம், பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் சம ஊதியம் போன்றவை கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை ஆதரித்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என ஒபாமா வலியுறுத்தினார்.

டிரம்ப்புக்கு ஒபாமா சவால் விடும் ‘வாய்யா பார்க்கலாம்’ வீடியோவைக் காண... https://www.youtube.com/watch?v=VdIRxkSko-M

No comments

Powered by Blogger.