Header Ads



வன்முறைகளில் ஈடுபடக்கூடாது - யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீதிபதி எச்சரிக்கை


யாழ் - கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்ற பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த மாணவர்களின் மரணத்திற்கான பிரேத பரிசோதனை அறிக்கை யாழ்.நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிபதி மாணவர்களிடம் கலந்துரையாடி உள்ளார்.

இதன்படி, மோட்டார் சைக்கிளை ஓட்டிய மாணவன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றைய மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளார் என யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் தெரிவித்துள்ளார்.

பிரேதப்பரிசோதனை இடம்பெறும் சந்தர்ப்பத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் பல அசம்பாவிதங்கள் நடைபெற்றதுடன், பல்கலைக்கழக மாணவர்கள், மக்கள் எனப் பலர் குழுமியிருந்தனர்.

இந்த நிலையில் மாலை 5 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரை அழைத்த யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என கூறியிருந்தார்.

இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்த நீதிபதி மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஆகியோர் உயிரிழந்த மாணவர்களின் உடலை பார்வையிட்டனர்.

தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது “வன்முறைகளில் ஈடுபட வேண்டாம், ஒரு மாணவனின் உடலில் துப்பாக்கி சன்னம் பாய்ந்துள்ளது, மற்றைய மாணவன் விபத்திலேயே உயிரிழந்துள்ளார், உடலை எரிக்க வேண்டாம், புதைக்கும் படியும் விசாரணைகள் விரைந்து எடுக்கப்படும்” எனவும் நீதிபதி கூறியதாக பல்கலைக்கழக மாணவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் இடம்பெற்றதிலிருந்து தற்போது வரை பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்தன. இருப்பினும் இந்த இளைஞர்களின் மரணத்திற்கு விபத்து காரணம் இல்லை என்றும், இவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும் தற்போது யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் இந்த சம்பவத்திற்கான காரணத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.