Header Ads



ராமி ஆதமிற்கு, ஒரு சல்யூட்..!


தற்போது உலகை உலுக்கிக்கொண்டிருப்பது சிரிய உள்நாட்டுப் போர். கலவரபூமியாக மாறியிருக்கும் சிரியாவில், போர் மேகங்கள் சூழ்ந்து, குண்டுமழை பொழிந்துவருகிறது. உள்நாட்டுப் போரினால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் போரினால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் சிறுவர்களுக்கு, திருட்டுத்தனமாக உதவிவருகிறார், 44 வயது ராமி ஆதம் என்பவர். சிரியாவின் அலெப்போ (Aleppo) நகரில் பிறந்த இவர், 1989-ல் குடும்பத்துடன் பின்லாந்துக்குச் சென்றுவிட்டார். 2012-ல் சிரியாவில் உள்நாட்டுப்போர் தொடங்கியதும் குழந்தைகளுக்கு உதவ தீர்மானித்தார்.

நான்கு ஆண்டுகளாக திருட்டுத்தனமாக சிரியாவுக்குள் நுழைந்து, போரில் பாதித்த குழந்தைகளுக்கு பொம்மைகளைத் தந்து சந்தோஷப்படுத்துகிறார் ராமி ஆதம். அதனால் போரில் சிக்கிய சிரியா குழந்தைகள் மட்டும் இந்தப் பொம்மை கடத்தல்காரரை எதிர் நோக்கிக் காத்திருக்கிறார்கள். இவர் கடத்தி வரும் டெடி பியர், பார்பி பொம்மைகள், சிரியா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தன. 'ஒருநாள் சிரியாவிற்குள் வந்தபோது, சிறுவன் ஒருவன் தன் பெற்றோர் இறந்துகிடந்த இடத்தில் அழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். அவனுக்கு உணவு கொடுத்தும் அழுகையை நிறுத்தவில்லை. சமாதானம் சொல்லிப் பார்த்தோம், சமாதானம் ஆகவில்லை. இறுதியாக நான் கொண்டுவந்த பொம்மையைக் கொடுத்தேன். உடனே அழுகையை நிறுத்தி விளையாட ஆரம்பித்துவிட்டான். பொம்மைகளுக்கு அவ்வளவு பவர் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அப்போதில் இருந்து சிரியாவுக்குள் பொம்மைகளை எடுத்துவர ஆரம்பித்தேன்'' என்று கூறுகிறார்.

 ராமி ஆதம் தந்த பொம்மைகளுடன், சுற்றிலும் என்ன நடக்கிறது என்றுகூடத் தெரியாமல் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ''முதலில் குழந்தைகளுக்கு உணவு, மருந்து, குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என எண்ணித்தான் சிரியாவுக்குக் கிளம்பினேன். அப்போது, என் மகள் டெடி பியர் பொம்மை தந்து, 'இதை அங்குள்ள குழந்தைக்கு என் பரிசாகக் கொடுங்கள்' என்று சொன்னாள். இந்தப் பொம்மைதான் அந்தச் சிறுவனை சமாதானப்படுத்தியது. அதனால்தான் குழந்தைகளுக்கு பொம்மைகளைக் கொடுக்கத் தீர்மானித்தேன்' என்கிறார்.

''இதற்காக, பின்லாந்து மக்களிடம் இருந்து பொம்மைகளைச் சேகரித்து, நண்பர்கள் உதவியுடன் சிரியாவுக்குள் கடத்தி வருகிறோம். ராணுவம், தீவிரவாதிகள் என இரு தரப்பினரையும் சமாளிப்பதற்குள் உயிர்போய் உயிர் வருகிறது'' என்று கூறும் ஆதம், இதுவரை பின்லாந்தில் இருந்து சிரியாவுக்கு 28 முறை வந்து சென்றிருக்கிறார். தற்போது, ராமி ஆதமை 'பொம்மை கடத்தல்காரர்' என்றும் 'சான்டா ஆஃப் சிரியா' என்றும் செல்லமாக அழைக்கிறார்கள். உயிரைப் பணயம்வைத்து குழந்தைகளைக் குஷிப்படுத்திவரும் ராமி ஆதமிற்கு ஒரு சல்யூட்!

No comments

Powered by Blogger.