October 08, 2016

முஸ்லிம் தனியார் சட்டத்தில், தலையிட வேண்டாம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை


முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிட வேண்டாம் என்று பாஜகவுக்கு முஸ்லிம் சமுதாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கையில்....

மதச்சார்பற்ற நம் நாட்டில் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள் அனைவருக்கும் பொதுமானவையாக உள்ளன. ஆயினும் சில சட்டங்கள் மட்டும் மத நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால் அனைத்து மதத்தினருக்கும் விதி விலக்காக அவர்களின் மத நம்பிக்கை படி செய்து கொள்ள மிகச்சில சட்டங்களில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விதிவிலக்கின் படி முஸ்லிம்கள் தங்களின் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை போன்ற விஷயங்களில் இஸ்லாமியச் சட்டத்தின் படி செய்து கொள்ள அனுமதிப்பது தான் முஸ்லிம் தனியார் சட்டமாகும். முஸ்லிம்கள் தங்களின் மத நம்பிக்கைப்படி இதனைச் செய்வதில் மற்ற எவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இருப்பினும் முஸ்லிம்களின் இந்த உரிமையைப் பறித்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்பரிவார அமைப்புகள் துடித்து கொண்டிருக்கின்றன.

சங்பரிவாரத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் உச்சநீதிமன்றத்தில் தலாக் (விவாகரத்து) வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியச் சட்டத்திற்குள் நுழைவது முஸ்லிம்களின் உரிமைகளை பறிப்பதாக ஆகுமா? என்ற கேள்வியோடு மத்திய அரசின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. உடனே பரிந்துரை என்கிற பெயரில் பாஜக அரசு முஸ்லிம் விரோதப் போக்கைக் காட்டும் விதமான அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையைப் பார்க்கின்ற போது ‘ஆடு நனையுதே என்று ஓநாய் அழுகின்ற” பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. முத்தலாக் என்பது சமத்துவத்திற்கு எதிரானது, பெண்களின் சுயமரியாதையைப் பாதிக்கக்கூடியது என்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமியப் பெண்களின் நலனில் பாஜகவிற்கு உதித்திருக்கிற அக்கறையை இங்கு கவனிக்க வேண்டும்.

குஜராத், முஸாஃபர் நகர் உட்பட பல்வேறு கலவரங்களில் ஆயிரக்கணக்கான பெண்களைக் கருவறுத்தவர்கள், அகதிகளாக ஊரை விட்டே ஓட ஓட விரட்டியவர்கள் இன்று தலாக் பற்றி கவலை கொள்வது அப்பட்டமான அயோக்கியத்தனாமாகும். ஒரு நேரத்தில் முத்தலாக என்பது இல்லை என்பது உண்மைதான். சவூதி எகிப்து உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளில் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்ல அனுமதியில்லை. நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய வழியிலும் இதற்கு அனுமதி இல்லை. முஸ்லிம் தனியார் சட்டத்தில் தவறுதலாக இடம்பெற்ற இச்சட்டத்தை முஸ்லிம் சமுதாயத்தின் ஒப்புதலோடு மாற்றியமைத்தால் அதில் முஸ்லிம்களுக்கு மறுப்பு இல்லை.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள விவாகரத்து உரிமையை ஒட்டு மொத்தமாகப் பறிக்க பாஜக அரசும் நீதிமன்றமும் முயல்வதை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது. இது அரசியல் சாசனம் வழங்கிய உரிமையைப் பறிக்கும் செயலாகும் என்பதுதான் முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தாகும்.

மற்ற சமுதாயம் போல் விவாகரத்து வழக்குக்கு ஐந்து பத்து ஆண்டுகள் அலைவது போல் முஸ்லிம்கள் அலைய தயாரில்லை. விவாகரத்து தாமதம் ஆவதால் தம்பதிகள் ஒருவரை ஒருவர் கொலை செய்வதையும், தவறான செயல்களில் ஈடுபடுவதையும் சிந்திக்கும் யாரும் இஸ்லாம் கூறும் விவாகரத்து முறைதான் சரியானது என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.

மேலும் போகிற போக்கில் தலாக் சொல்வது இஸ்லாத்தில் இல்லை. கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை எனில் இரு வீட்டாரும் இணைந்து அவர்களை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களால் முடியாத நிலையில் ஜமாஅத்தார்கள் தலையிட்டு இணைத்து வைக்க முயற்சி செய்ய வேண்டும். அதுவும் பயனளிக்கவில்லை எனில் நல்ல முறையில் பிரிந்து விட வேண்டும்.

இருவரும் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டால் இரு சாட்சிகள் முன்னிலையில் விவாகரத்து செய்ய வேண்டும். அதன் பின்னர் ஜமாஅத்தார்கள் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு கணவனிடமிருந்து கணவனின் வசதிக்கு ஏற்ப பாதுகாப்புத் தொகை பெற்றுத்தர வேண்டும்.

குழந்தைகள் இருந்தால் அதன் பராமரிப்புச் செலவு முழுவதும் கணவனைச் சேர்ந்ததாகும். குழந்தைக்கு பாலூட்டுவதற்காகக் கூட மனைவிக்கு தக்க சன்மானம் வழங்க வேண்டும். இன்னும் பல விஷயங்கள் இதன் பின்னணியில் உள்ளன. இதுதான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டமாகும்.

இவற்றில் எதையும் கவனிக்காமல் முஸ்லிம்களிடம் கருத்தும் கேட்காமல் அவசர அவசரமாக இந்த அறிக்கையைச் சமர்ப்பித்து பாஜக தனது ஃபாஸிச சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக முஸ்லிம்களின் மத உரிமையைப் பறித்து பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கனவை நிறைவேற்ற பாஜக முயல்கிறது என்பது தான் உண்மை.

எனவே பாஜக தனது அத்துமீறலை நிறுத்திக்கொள்ள வேண்டும், அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளில் கைவைக்கக் கூடாது என இஸ்லாமிய சமுதாயம் எச்சரிக்கிறது. முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தைப் பெற்று முத்தலாக் முறையை நீக்க முன்வந்தால், நபிகள் நாயகத்தின் வழிமுறைக்கு மாற்றமான இந்த முத்தலாக்கை நீக்குவதை முஸ்லிம்கள் மறுக்க மாட்டார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

மேற்கண்டவாறு முஹம்மது யூசுப் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

2 கருத்துரைகள்:

Who are these nefarious BJP & its subordinates to poke their nose into Islamic civil law?
Islamic sharia is the exclusive solution for all concerns. It's prudent & tangible.
We know how far these so-called high courts are ineffective in deal with burning issues? The judges are good-for-nothing.
Lets bring in the adept Islamic rules to resolve all the problems & conflicts.

Post a Comment