Header Ads



ஜனாதிபதி கள்வர்களை பிடிக்கச் சொன்னார் - துமிந்த

 குற்றம் செய்தால் காதைப் பிடித்தேனும் சரியான பாதைக்கு இட்டுச் செல்வது நாட்டுத் தலைவரின் கடமையாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி இந்த நாட்டின் தலைவராவார். நாட்டில் ஏதேனும் பிழைகள் இடம்பெற்றால் பிழை செய்வோரின் காதைப் பிடித்தேனும் அவர்களை சரியான பாதைக்கு இட்டுச்செல்வது ஜனாதிபதியின் கடமையாகும்.

அண்மையில் ஜனாதிபதி ஆற்றிய உரை ஒன்றை பிடித்துக்கொண்டு இந்த அரசாங்கம் கவிழ்ந்து விடும் என சிலர் கூறுகின்றார்கள்.

ஜனாதிபதி என்ற ரீதியில் ஏதேனும் அமைச்சில் தவறுகள் இடம்பெற்றால் அந்த அமைச்சரை அழைத்து அது பற்றி சுட்டிக்காட்ட ஜனாதிபதிக்கு உரிமையுண்டு.

பொதுக் கூட்டமொன்றில் அந்தப் பிழை பற்றி சுட்டிக்காட்டவும் உரிமையுண்டு. அவர் எமது கட்சியின் தலைவர் என்பது வேறு விடயமாகும்.

பிழைகள் இடம்பெற்றால் அதனை திருத்த வேண்டியது ஜனாதிபதியின் கடமையாகும். இந்த விடயம் தொடர்பில் சில பீதியடைந்துள்ளனர். நல்லாட்சி முடிந்து விட்டதாகத் கூறி வருகின்றனர்.

ஜனாதிபதி கள்வர்களை பிடிக்கச் சொன்னார் எனினும் கள்வர்களை பிடிக்கும் சாக்கில் வேறு விடயங்களை செய்யக் கூடாது என்றே அவர் கூறுகின்றார்.

இதேவேளை, யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை நாடு சக்தியுடன் முன்னோக்கி நகரும் என துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.